

அப்துல் கலாம் குறித்து தஞ்சாவூர் சாஸ்த்ரா பல்கலைக்கழக துணைவேந்தர் ஆர்.சேதுராமன், பெரியார் மணியம்மை பல்கலைக்கழக துணைவேந்தர் நல்.ராமச்சந்திரன் ஆகியோர் தெரிவித்ததாவது:
சாஸ்த்ரா பல்கலைக்கழக துணைவேந்தர் ஆர்.சேதுராமன், “சாஸ்த்ராவுக்கு அவர் 6-7 முறை வந்துள்ளார். எங்கள் குடும்பத்தில் ஒருவராகவே பழகினார். மாணவர்களுடன் சிறப்பான உறவைப் பேணி வந்தார்.
அண்மையில் சாஸ்த்ரா நானோ ஆராய்ச்சி மையத்துக்கு இரவு 9 மணிக்கு வந்த அவர், நள்ளிரவு 12.30 மணி வரை ஆர்வமுடன் கேட்டு அறிந்து, மாணவர்களுடன் கலந்துரையாடினார். நேரம் போதாது, அடுத்த ஆண்டு ஒரு நாள் முழுக்க இந்த மையத்தில் தான் இருப்பேன் எனத் தெரிவித்துச் சென்றார். அதற்காகக் காத்திருந்தோம்.
சாஸ்த்ரா வரும்போதெல்லாம் புளியோதரை, தயிர் சாதம், ஆவக்காய் ஊறுகாய், வத்தல் குழம்பு மட்டும் செய்து வையுங்கள் போதும் என்பார். எளிமையின் மறு உருவம் அவர்" என்றார்.
எங்களின் உந்துசக்தி…
பெரியார் மணியம்மை பல்கலைக்கழக துணைவேந்தர் நல்.ராமச்சந்திரன், “எங்கள் பல்கலைக்கழகத்துக்கு 6 முறை வந்துள்ளார். அவர், பாதுகாப்புத் துறை ஆலோசகராக இருந்த போது, பாதுகாப்பு ஆராய்ச்சி வளர்ச்சி நிறுவனத்துடன் (டிஆர்டிஓ) நாங்கள் இணைந்து ஆராய்ச்சியில் ஈடுபட வாய்ப்பை உருவாக்கினார்.
2002-ல் அவர் ஒரு நிகழ்ச்சியில் நகர்ப்புற வசதிகளை கிராமங்களுக்கு வழங்கும் ‘புரா’ திட்டம் குறித்துப் பேசினார். 6 லட்சம் கிராமங்கள் உள்ள பின் தங்கிய இந்தியாவை அதுதான் வளர்ச்சிப் பாதைக்கு இட்டுச் செல்லும் என்றார்.
குடியரசுத் தலைவரானவுடன் எங்கள் பல்கலைக்கழகம் வந்த அவர், இத்திட்டத்துக்கு ‘பெரியார் புரா’ என அவரே பெயரிட்டு தொடக்கி வைத்தார். இப்போது, 67 கிராமங்களில், 1 லட்சம் மக்கள் இதனால் பயனடைகின்றனர். அவர், எங்களுக்கு உந்து சக்தியாகவும், தொழில்நுட்ப வழிகாட்டியாகவும் இருந்தார்.
அவரது, பரிந்துரையால் மத்திய அரசின் மேம்பாட்டுத் திட்டங்களில் பங்கேற்கவும், ஆலோசனை வழங்கவும் வாய்ப்பு கிடைத்தது. அவர் எழுதிய, டார்கெட் 3 பில்லியன் என்ற நூலில் 10 பக்கங்கள் எங்கள் பணிகள் குறித்து எழுதியுள்ளார்” என்றார்.