

தமிழகத்தில் 37 தொகுதிகளை வாரிச் சுருட்டிய அ.தி.மு.க.வை 3-வது இடத்துக்கு தள்ளி, தி.மு.க.வை டெபாசிட் இழக்கச் செய்து 1,28,662 வாக்குகள் வித்தியாசத்தில் அதிசயிக்கத்தக்க வெற்றியைப் பெற்றிருக்கிறார் தமிழக பா.ஜ.க. தலைவரும், கன்னியாகுமரி மக்களவைத் தொகுதி உறுப்பினருமான பொன்.ராதாகிருஷ்ணன்.
தேர்தல் முடிவுகளுக்கு பின் டெல்லி அரசியலில் பரபரப்பாய் இருந்த அவர், ‘தி இந்து’ நாளிதழுக்கு அளித்த சிறப்புப் பேட்டி:
பா.ஜ.க. அரசு தமிழர் நலனில் எந்த அளவுக்கு பொறுப்புணர்வுடன் செயல்படும்?
தமிழர் நலன் சார்ந்த விஷயங்களில் தனிக்கவனம் செலுத்தப்படும். மீனவர் நலனில் தனிக்கவனம் செலுத்தி அவர்களின் பிரச்சினைகள் தீர்த்து வைக்கப்படும். விவசாயிகள் பிரச்சினைகளைத் தீர்க்கும் விதத்தில் நதிநீர் இணைப்பை வேகப்படுத்துவது எங்களின் முதல் அம்சமாக இருக்கும். தமிழகத்தில் மின் பற்றாக்குறையைப் போக்க மத்திய அரசு மூலம் தேவையான உடனடி நடவடிக்கைகள் எடுக்கப்படும்.
ஆனால், நதிநீர் இணைப்பு என்பது சாத்தியமே இல்லாத திட்டம் என தொடர்ந்து கூறப்பட்டு வருகிறதே?
பா.ஜ.க. அரசு நதிநீர் இணைப்பு குறித்து நிபுணத்துவம் பெற்றவர்களைக் கொண்டு ஆய்வு செய்யும். வாஜ்பாய் தொடங்கி வைத்த திட்டம் அது. நிச்சயம் நிறைவேற்றுவோம்.
முல்லை பெரியாறு விவகாரத்தில் மத்திய அரசின் செயல்பாடுகள் எப்படி இருக்கும்?
முல்லை பெரியாறு விவகாரத்தை பொறுத்தவரை உச்ச நீதிமன்ற தீர்ப்பின்படி, அணை நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்த நடவடிக்கை எடுப்போம். இது தொடர்பாக மத்திய அரசு, கேரள மாநில காங்கிரஸ் அரசிடம் காலதாமதமின்றி உடனே வலியுறுத்தும்.
இலங்கை தமிழர்கள் மீது மத்திய அரசின் பார்வை எப்படி இருக்கும்?
இலங்கை தமிழர்களுக்கு சம உரிமை கிடைக்க மத்திய அரசு வகை செய்யும். நிச்சயம் இலங்கை தமிழர் விவகாரத்தில் நரேந்திர மோடி தலைமையிலான அரசு தனிக்கவனம் செலுத்தும்.
தமிழகத்தில் மோடி அலை எதிரொலிக்கவில்லையே?
தமிழகம் முழுவதும் பா.ஜ.க. கூட்டணி பெற்றுள்ள வாக்கு சதவிகிதம் அதிகரித்துள்ளது. தமிழகத்தில் 38 தொகுதிகளில் காங்கிரஸ் டெபாசிட் இழந்தது மோடி அலையின் தாக்கத்தில்தான்.
அப்படியெனில் அ.தி.மு.க. 37 தொகுதிகளை கைப்பற்றியுள்ளதே?
அந்த பெருமை தமிழக முதல்வர் ‘அம்மா’ அவர்களையே சாரும். மிகச் சரியான நேரத்தில் சரியான யுத்திகளை கடைபிடித்து வெற்றி இலக்கை எட்டிப் பிடித்திருக்கிறார்.
பாஜக அரசு இளைஞர்களுக்காக எந்த வகையிலான திட்டங்களை செயல்படுத்த இருக்கிறது?
வேலைவாய்ப்பை பெருக்குதல், இளைஞர்களை தொழில் அதிபர்களாக உருவாக்குதல் என்ற அம்சங்களிலும் தனிக்கவனம் செலுத்தப்படும்.
தமிழகத்தில் பா.ஜ.க கூட்டணி கட்சிகளின் தேர்தல் முடிவுகள்…
(கேள்வியை முடிப்பதற்குள் தொடங்குகிறார்)
பா.ஜ.க. கூட்டணிக்கு 2 இடங்களைக் கொடுத்த தமிழக மக்களுக்கு நன்றி கடன் பட்டிருக்கிறோம். அதே நேரத்தில் என்னை மிகப்பெரிய கவலை ஒன்றும் வாட்டி வதைக்கிறது. தமிழர்களின் நலனுக்காக போராடும் திறன் படைத்த தலைவர்களை வெற்றி பெற வைக்க மக்கள் தவறி விட்டனர்.
காங்கிரஸ் கட்சிக்கு ஒரு வாக்குகூட கிடைக்கக் கூடாது என கடந்த 3 ஆண்டுகளாக பரப்புரை செய்து வருகிறேன். ஆனால், காங்கிரஸ் கட்சிக்கு இன்னமும் தமிழகத்தில் வாக்களித்திருக்கிறார்கள். காங்கிரஸுக்கு கிடைத்த அந்த சொற்ப வாக்குகளும் தமிழர்கள் தங்கள் முகத்தில் தாங்களே பூசிக் கொண்ட கரி.
புதிதாக அமையும் பா.ஜ.க. அரசு தமிழகத்துடன் நல்லுறவை பின்பற்றுமா?
நிச்சயமாக பின்பற்றும். அதுதான் எங்களின் விருப்பமும் கூட. அரசியல் பாகுபாடு கடந்து நரேந்திர மோடிக்கும், அம்மாவுக்கும் தனிப்பட்ட பகை எதுவும் கிடையாது. அரசியல் ரீதியாக ஒருவரை ஒருவர் எதிர்த்து போட்டியிடுவதும், தோற்கடிப்பதும் மரபு. அதைக் கடந்து நாடு நன்றாக இருக்க வேண்டும் என மோடி விரும்புகிறார். தமிழகம் நன்றாக இருக்க வேண்டும் என்று அம்மா விரும்புகிறார். அந்த விருப்பத்தினால் நல்லுறவு தொடரும். தமிழகத்துக்கு நரேந்திர மோடி அரசு துணை நிற்கும்.