

தமிழீழ போராட்டத்தை மீண்டும் தீவிரப்படுத்துவது குறித்தும், பாஜகவுடனான உறவு குறித்தும் மதிமுக உயர்நிலைக் குழுவில் இன்று முக்கிய முடிவு எடுக்கப்படுகிறது. வைகோவின் மகன் துரை வையாபுரிக்கு கட்சியில் பதவி கொடுப்பது பற்றியும் இந்தக் கூட்டத்தில் ஆலோசனை நடத்தப்பட உள்ளது.
மதிமுக உயர்நிலைக்குழு, ஆட்சி மன்றக்குழு, மாவட்ட செயலாளர்களின் ஆலோசனைக் கூட்டம், இன்று (வியாழக்கிழமை) காலை 9 மணிக்கும், அதைத் தொடர்ந்து 11 மணிக்கும் இரண்டு பிரிவுகளாக நடத்தப்படுகிறது. அவைத் தலைவர் திருப்பூர் சு.துரைசாமி தலைமையில் நடக்கும் இந்தக் கூட்டத்தில், மதிமுகவின் எதிர்கால செயல்திட்டங்கள் குறித்து முக்கிய முடிவு எடுக்கப்படுகிறது.
மக்களவைத் தேர்தலில் பாஜக கூட்டணியில் இடம்பெற்ற மதிமுக, 7 இடங்களில் போட்டியிட்டு தோல்வியைச் சந்தித்தது. இதில், 2 இடங்களில் மதிமுக வேட்பாளர்கள் டெபாசிட் இழந்தனர். தமிழகத்தில் பாஜக கூட்டணியில் சேர்ந்த முதல் கட்சி மதிமுக என்பதாலும், அதிக இடங்கள் கேட்டு நெருக்கடி கொடுக்காததாலும், மதிமுக பொதுச் செயலாளர் வைகோவுக்கு பாஜக ஆளும் மாநிலங்கள் மூலம் ராஜ்யசபா உறுப்பினர் பதவி வழங்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால், இதற்கு சாதகமான பதிலை பாஜக தரப்பில் தெரிவிக்க வில்லை. இந்நிலையில், பிரதமர் மோடியின் பதவியேற்பு விழாவுக்கு இலங்கை அதிபர் ராஜபக்சே வந்ததை எதிர்த்து, டெல்லியில் கருப்புக்கொடி போராட்டம் நடத்தி கைதானார் வைகோ. மோடியின் பதவியேற்பு நிகழ்ச்சியையும் அவர் புறக்கணித்தார்.
இந்நிலையில், இன்று கூடும் கட்சியின் உயர்நிலைக்குழுக் கூட்டத்தில் பாஜகவுடனான உறவை தொடர்வது குறித்து அதிக அளவில் விவாதிக்கப்பட உள்ளதாக கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன. இலங்கை அதிபர் ராஜபக்சேவுடன் பிரதமர் மோடி நடத்திய பேச்சில், தமிழீழம் அமைக்க முடியாது என்பதை இரு நாடுகளும் உறுதி செய்துள்ளதாக தகவல்கள் வந்துள்ளன.
ஆனால், வடக்கு மாகாண முதல்வர் விக்னேஸ்வரன் தலைமையிலான ஆட்சியின் கட்டுப்பாட்டில் இலங்கை காவல்துறையை ஒப்படைத்தல், மீண்டும் தமிழர்களிடம் அவர்களது நிலங்களை ஒப்படைத்து அதன் உரிமையாளர்களை குடியமரச் செய்தல், 13-வது சட்டத்திருத்த அம்சங்களை முறையாக அமல்படுத்துதல், ஆட்சி அதிகாரத்தில் வடக்கு மாகாணத்துக்கு சம உரிமை வழங்குதல் போன்றவை குறித்து பேசப்பட்டுள்ளதாம். இதுகுறித்து பாஜக தரப்பிலிருந்து மதிமுகவுக்கு தகவல் அனுப்பப்பட்டுள்ளதாகக் கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இதுகுறித்து, இன்றைய உயர்நிலை மற்றும் ஆட்சி மன்றக்குழு கூட்டத்தில் விரிவாக விவாதிக்க திட்டமிடப்பட்டுள்ளது. பாஜகவின் இலங்கையுடனான அணுகுமுறையை எப்படி கையாள்வது, தமிழீழப் போராட்டத்தை மீண்டும் தீவிரப்படுத்துவது, கட்சியை அமைப்பு ரீதியாக வலுப்படுத்தி, வரும் சட்டசபைத் தேர்தலுக்கு தயாராவது குறித்தும் விவாதிக்கப்படுகிறது. தேர்தல் தோல்விக்கான காரணங்கள் குறித்தும் ஆராயப்படுகிறது.
மேலும், மதிமுக பொதுச் செயலாளர் வைகோவின் மகன் துரை வையாபுரிக்கு கட்சியில் பதவி அளிக்க வேண்டும் என சில நிர்வாகிகள் கோரிக்கை விடுத்துள்ளதாகத் தெரிகிறது. அதுகுறித்தும் இந்தக் கூட்டத்தில் விவாதிக்கலாம் என கூறப்படுகிறது. மக்களவைத் தேர்தலில் விருதுநகர் தொகுதியில் போட்டியிட்ட வைகோவுக்காக கிராமம் கிராமமாக சென்று துரை வையாபுரி பிரச்சாரம் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.