

சர்வதேச சந்தையில் கடந்த 5 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு தங்கம் விலை நேற்று அதிரடியாக குறைந்தது. 24 கேரட் தங்கம் விலை 10 கிராம் ரூ.25 ஆயிரத்துக்கும் கீழ் சரிந்தது. ஆபரணத் தங்கத்தின் விலை ஒரே நாளில் பவுனுக்கு 256 ரூபாய் குறைந்தது. ஒரு பவுன் ரூ.19 ஆயிரத்து 216-க்கு விற்பனையானது. விலை குறைந்ததால் நகை வாங்க மக்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
கடந்த சில வாரங்களாகவே தங்கத்தின் விலை குறைந்து வந்தது. இந்நிலையில், நேற்று காலை ஆபரண தங்கத்தின் விலை கடுமையாக குறையத் தொடங்கியது. காலை நிலவரப்படி 22 கேரட் தங்கத்தின் விலை, ஒரு கிராம் ரூ.2,387 ஆக இருந்தது. இது முந்தையநாள் விலை யைவிட கிராமுக்கு ரூ.50 குறைவாகும். ஒரு பவுனுக்கு ரூ.376 குறைந்து ரூ.19,096-க்கு விற்பனையானது.
ஆனால், மாலையில் விலை சற்று உயர்ந்து காணப்பட்டது. நேற்றைய சந்தை நேர முடிவின்போது சென்னையில் 22 கேரட் தங்கத்தின் விலை, கிராமுக்கு ரூ.32 குறைந்து ரூ.2,402-க்கும் ஒரு பவுன் ரூ.256 குறைந்து ரூ.19,216-க்கும் விற்பனை யானது.
விலை சரிவு குறித்து மெட்ராஸ் தங்கம் மற்றும் வைர நகை வியாபாரிகள் சங்கத் தலைவர் ஜெயந்திலால் சல்லானி கூறியதாவது:
கடந்த 2013-ம் ஆண்டு ஜூன் 28-ம் தேதி ஒரு பவுன் தங்கத்தின் விலை ரூ.19,032-க்கு விற்பனை செய்யப்பட்டது. அதன்பிறகு தற்போதுதான் பவுன் விலை ரூ.19,216 என்ற அளவுக்கு பெரிய சரிவை கண்டுள்ளது.
கிரீஸைத் தொடர்ந்து தற்போது ஸ்பெயின், ஆஸ்திரேலியா போன்ற நாடுகளிலும் பொருளாதார வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக வெளி நாட்டு முதலீட்டாளர்கள் தங்கத்தில் முதலீடு செய்யாமல் தவிர்த்து வருகின்றனர். இதனால் சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை கடந்த 5 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு சரிந்துள்ளது. அதைத் தொடர்ந்து இந்தியாவிலும் தங்கத்தின் விலை குறைந்து வருகிறது. வரும் நாட்களில் தங்கத்தின் விலை மேலும் குறைய வாய்ப்புள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
24 கேரட் தங்கம்
அதேபோல, 24 கேரட் தங்கத்தின் விலை் கடந்த 5 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு கடும் சரிவை சந்தித்துள்ளது. நேற்றைய நிலவரப்படி 24 கேரட் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.54 குறைந்தது. 10 கிராம் தங்கத்தின் விலை முதன்முறையாக ரூ. 25 ஆயிரத்துக்குக் கீழ் சரிந்து ரூ.24,974 ஆக இருந்தது. கடந்த 2010-ம் ஆண்டு 24 கேரட் தங்கம் 10 கிராம் விலை ரூ.25,500 என்ற அளவில் விற்பனையானது குறிப்பிடத்தக்து.
தங்கம் விலை கடுமையாக குறைந்துள்ளதால் நகை வாங்குவதில் மக்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். ஆவணி, ஐப்பசி மாதங்களில் திருமண நிகழ்ச்சிகளை வைத்துள்ளவர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர். விலை குறைந்துள்ளதால் இப்போதே நகைகளை வாங்கி வைத்துக் கொள்ள திட்டமிட்டுள்ளனர்.