

பிரதமரின் திறன் மேம்பாட்டு திட்டத்தை அனைத்து மாநிலங்களும் தீவிரமாக செயல்படுத்த வேண்டும் என்று இந்திய ஜனநாயக கட்சியின் நிறுவனத் தலைவர் பாரிவேந்தர் கேட்டுக் கொண்டுள்ளார்.
இதுதொடர்பாக அவர் நேற்று வெளியிட்ட அறிக்கை:
இந்தியாவிலுள்ள மனித ஆற்றலை ஒருமுகப்படுத்தி, நாட்டின் வளர்ச்சிக்காக உருவாக்கப்பட்டதுதான் ‘பிரதமரின் திறன் மேம்பாட்டு திட்டம்’. இந்த திட்டத்தின் முக்கிய நோக்கமே வளர்ந்து வரும் உலகளாவிய விஞ்ஞானம் மற்றும் தொழில்நுட்பத்துக்கு ஏற்றவாறு நம்மை தயார்படுத்துவதே.
படித்த மற்றும் படிக்காதவர்களின் திறனை மேம்படுத்த உருவாக்கப்பட்ட திறன் மேம்பாட்டு திட்டத்தை அனைத்து மாநிலமும் கிடப்பில் போடாமல் தொடர்ந்து செயல்படுத்த வேண்டும். ஏற்கெனவே தமிழக அரசு 2015-16-ம் ஆண்டு பட்ஜெட்டில் 2 லட்சம் இளைஞர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி அளிப்பதற்காக ரூ.150 கோடி ஒதுக்கியுள்ளது.
இந்த நிதியை முழுமையாக செலவிட்டு உலக நாடுகளுடன் போட்டி போடக் கூடிய திறமையான இளைய சமுதாயத்தை உருவாக்க வேண்டும். அவரவர் படிப்பு மற்றும் திறமைக்கு ஏற்றவாறு பல லட்சம் வேலை வாய்ப்புகளை ஆண்டுதோறும் மத்திய, மாநில அரசுகள் உருவாக்க வேண்டும் என்றார்.