Published : 31 Jul 2015 08:20 AM
Last Updated : 31 Jul 2015 08:20 AM

அப்துல் கலாமுக்கு அமைதி அஞ்சலி: சென்னை மாநகரமே வெறிச்சோடியது கடைகள், வணிக நிறுவனங்கள் இயங்கவில்லை

முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் இறுதிச் சடங்கை முன்னிட்டு அவருக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் சென்னை மாநகரில் பள்ளிகள், கல்லூரிகள், அரசு மற்றும் தனியார் அலுவலகங்கள், கடைகள், வணிக நிறுவனங்கள், டாஸ்மாக் மதுபான கடைகள் மூடப்பட்டிருந் தன. இதனால் எப்போதும் பரபரப் பாக காணப்படும் சென்னை மாநகர தெருக்கள் வெறிச்சோடி காணப்பட்டன.

மறைந்த அப்துல் கலாமின் உடல் அவரது பிறந்த ஊரான ராமேசுவரத்தில் நேற்று நல்லடக்கம் செய்யப்பட்டது. அதனை முன்னிட்டு தமிழகம் முழுவதும் அரசு பொது விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது. தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை தலைவர் த.வெள்ளையன், தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா ஆகி யோர் கடையடைப்புக்கு அழைப்பு விடுத்திருந்தனர். இதனால் சென்னை மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் பெரும்பாலான கடைகள் அடைக் கப்பட்டிருந்தன. ஒரு சில இடங்களில் தேநீர் கடைகள், மருந்தகங்கள் மட்டுமே திறந்திருந்தன. காய்கறி, மளிகை, பால் போன்ற அத்தியாவசியப் பொருள்கள் விற்பனையாளர்களும் கடையடைப்பில் பங்கேற்றனர்.

பெட்ரோல் பங்குகள் மூடல்

இதனால் எப்போதும் பரபரப்பாக காணப்படும் அண்ணா சாலை, பூந்தமல்லி நெடுஞ்சாலை, 100 அடி சாலை, நுங்கம்பாக்கம் நெடுஞ்சாலை, கோடம்பாக்கம் நெடுஞ்சாலை, கடற்கரைச் சாலை, என்.எஸ்.சி.போஸ் சாலை உள்ளிட்ட சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டன. அரசு பஸ்கள் வழக்கம் போல இயங்கின. ஆட்டோக்கள் வழக்கத்தை விட குறைவாக இயங்கின. கடையடைப்பு குறித்த முன்னறிவிப்பு செய்யப்பட்டிருந்ததால் 29-ம் தேதி இரவே கடைகளில் மக்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. அப்துல் கலாமுக்கு மரியாதை செலுத்தும் வகையில் சென்னை மாநகர் முழுவதும் கடைகள் மூடப்பட்டிருந்தன. திரையரங்குகளில் காலைக் காட்சிகள் ரத்து செய்யப்பட்டன.

வெறிச்சோடிய தி.நகர்

சென்னையில் மக்கள் நெரிசல் அதிகமாக இருக்கும் வணிகப் பகுதிகளான தியாகராய நகர் உஸ்மான் சாலை, ரங்கநாதன் தெரு, பாண்டி பஜார் பகுதிகளில் தெருவோரக் கடைகள் முதல் பெரிய வணிக நிறுவனங்கள் வரை அனைத்தும் மூடப்பட்டிருந்தன.

தியாகராய நகரில் வியாபாரிகள் சிலரிடம் கேட்டபோது, ‘‘கலாம் போன்ற குடியரசுத் தலைவரை நாங்கள் இதுவரை பார்த்த தில்லை. தனக்காக வாழாமல் மக்களுக்காக வாழ்ந்த அவருக்கு மரியாதை செலுத்தும் வகையில் கடைகளை அடைத்துள்ளோம். ஆடி மாதத்தில் வெறிச்சோடிய தியாகராய நகரை இதுவரை பார்த்ததில்லை’’ என்றனர்.

தலைமைச் செயலகத்தில்..

அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டதால் தமிழக அரசு தலைமைச் செயலகம் வெறிச்சோடி காணப்பட்டது. தலைமைச் செயலக வளாகத்தில் சில கடைகள் மட்டுமே திறந்திருந்தன. காவல் துறையினர் அதிக அளவில் பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டிருந்தனர். அரசு அலுவலகங்கள் அமைந்துள்ள சேப்பாக்கம் எழிலகம், சைதாப்பேட்டை பனகல் மாளிகை, தேனாம்பேட்டை டி.எம்.எஸ். வளாகங்களும் வெறிச்சோடி காணப்பட்டன.

வட சென்னை பகுதிக்கு உட்பட்ட வியாசர்பாடி, கொடுங்கையூர், தண்டையார்பேட்டை, மூலக்கடை, புழல் உள்ளிட்ட பகுதிகளில் காலை முதலே கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டிருந்தன. மக்கள் நடமாட்டமும் குறைவாக இருந்தது.

கூட்டம் குறைந்த மின்சார ரயில்கள்

சென்னையின் புறநகர் பகுதிகளான தாம்பரம், பெருங்களத்தூர், வண்டலூர், ஊரப்பாக்கம், கூடுவாஞ்சேரி, பொத்தேரி, மறைமலைநகர், சிங்கப்பெருமாள் கோவில் உள்ளிட்ட இடங்களில் கல்வி நிறுவனங்கள், கடைகள், வணிக நிறுவனங்கள் மூடப்பட்டிருந்தன. காய்கறி மார்க்கெட்டுகள், மீன், இறைச்சிக் கடைகளும் திறக்கப்படவில்லை.

எப்போதும் பரப்பாக காணப்படும் தாம்பரம் சண்முகம் சாலை, எம்ஆர்எம் சாலை உள்ளிட்ட பகுதிகளில் கடைகள் மூடப்பட்டதால் மக்கள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது.

மேலும் புறநகர் பகுதிகளில் இருந்து சென்னை நகருக்கு வந்து செல்லும் பஸ்களிலும், மின்சார ரயில்களிலும் கூட்டம் குறைவாகவே இருந்தது. வண்டலூர் உயிரியல் பூங்கா, கிண்டி தேசிய சிறுவர் பூங்கா ஆகியவற்றுக்கு நேற்று விடுமுறை விடப்பட்டது.

பிற்பகலில் இயல்பு வாழ்க்கை

அப்துல் கலாமின் உடல் நல்லடக்கம் முடிந்ததும் பகல் 12 மணிக்குப் பிறகு கடைகள் ஒவ்வொன்றாக திறக்கப்பட்டன. பிற்பகல் 2 மணிக்குப் பிறகு பெரும்பாலான கடைகள் திறக்கப்பட்டு இயல்பு வாழ்க்கை திரும்பியது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x