காஷ்மீரில் ராணுவ துப்பாக்கி வீரர் அனிஷ் வீரமரணம்: தமிழக அரசு ரூ.10 லட்சம் நிதியுதவி

காஷ்மீரில் ராணுவ துப்பாக்கி வீரர் அனிஷ் வீரமரணம்: தமிழக அரசு ரூ.10 லட்சம் நிதியுதவி
Updated on
1 min read

ஜம்மு காஷ்மீரில் ரைபில்ஸ் படைப் பிரிவில் துப்பாக்கியாளராக பணிபுரிந்து வந்த தமிழகத்தைச் சேர்ந்த அனிஷ், தீவிரவாதிகள் துப்பாக்கிச் சூட்டில் வீரமரணம் அடைந்தார்.

ஜம்மு காஷ்மீர் எல்லையில் வீர மரணமடைந்த தமிழகத்தைச் சேர்ந்த ராணுவ வீரர் அனிஷ் குடும்பத்துக்கு தமிழக முதல்வர் ஜெயலலிதா ரூ.10 லட்சம் நிதியுதவி அறிவித்துள்ளார்.

ராணுவ தளபதி மரியாதை:

ராணுவ துப்பாக்கி வீரர் அனுஷின் உடல் இன்று டெல்லி கொண்டுவரப்பட்டது. அங்கு ராணுவத் தளபதி ஜெனரல்.தல்பீர் சிங் தலைமையில் அனிஷ் உடலுக்கு ராணுவ மரியாதை செலுத்தப்பட்டது.

பின்னர், அவரது உடல் விமானம் மூலம் சொந்த ஊருக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், எல்லையில் வீர மரணமடைந்த அனிஷ் குடும்பத்துக்கு தமிழக முதல்வர் ஜெயலலிதா நிதியுதவி அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "ஜம்மு காஷ்மீர் மாநிலம், 62 ராஷ்டிரிய ரைபில்ஸ் படைப் பிரிவில் துப்பாக்கியாளராக பணி புரிந்து வந்த கன்னியாகுமரி மாவட்டம், கல்குளம் வட்டம், சித்திரம்கோடு கிராமத்தைச் சேர்ந்த தர்மராஜ் என்பவரின் மகன் அனிஷ் 8.7.2015 அன்று தெற்கு காஷ்மீர், ஷோபியான் மாவட்டம், பாராபக் எல்லை பகுதி அருகே தீவிரவாதிகளால் தாக்கப்பட்டு வீரமரணம் எய்தினார் என்ற செய்தியை அறிந்து நான் மிகுந்த துயரமும், மன வேதனையும் அடைந்தேன்.

வீர மரணம் எய்திய அனிஷ் அவர்களை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

வீர மரணம் அடைந்த அனிஷ் அவர்களின் குடும்பத்திற்கு பத்து லட்சம் ரூபாய் வழங்க நான் உத்தரவிட்டுள்ளேன்" எனக் குறிப்பிட்டுள்ளார்.

ஃபேஸ்புக்கில் அஞ்சலி:

வீரமரணமடைந்த அனிஷ்-க்கு இந்திய ராணுவத்தின் அதிகாரபூர்வ ஃபேஸ்புக் பக்கத்தில் அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது.

அதில், "இந்திய ராணுவத் தளபதி ஜெனரல் தல்பீர் சிங், துப்பாக்கி வீரர் அனிஷ் மரணத்துக்கு தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார். அனிஷ் வீர மரணத்துக்கு தலை வணங்குவதாக கூறியுள்ளதோடு அவரது குடும்பத்தாருக்கும் தனது இரங்கலை தெரிவித்துள்ளார். அனிஷ் குடும்பத்தார் ஈடு செய்ய முடியாது இந்த இழப்பில் இருந்து மீள இறைவனை தான் பிரார்த்தனை செய்வதாகவும் கூறியுள்ளார்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in