Published : 11 Mar 2014 08:16 AM
Last Updated : 11 Mar 2014 08:16 AM

திமுக வேட்பாளர் பட்டியல்- ஓர் அலசல்; துரைமுருகன் மகனுக்கு வாய்ப்பு இல்லை

திமுக வேட்பாளர் பட்டியலில் அக்கட்சியின் பொருளாளர் ஸ்டாலின் ஆதரவாளர்களுக்கு மட்டுமே பெரும்பான்மை தொகுதிகள் அளிக்கப்பட்டிருப்பதாக கனிமொழி உள்ளிட்டோர் தரப்பு அதிருப்தி தெரிவித்துள்ளது.

மேலும், வன்னியர் சமூகத்துக்கு வெறும் நான்கு தொகுதிகளே ஒதுக்கப்பட்டிருப்பதால் வட மாவட்டங்களில் அச்சமூகத்தைச் சேர்ந்தவர்கள் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர்.

வன்னியர் கடும் அதிருப்தி!

திமுக வெளியிட்டுள்ள வேட்பாளர் பட்டியலில் கடலூர் தொகுதி வேட்பாளர் ஆர்.நந்தகோபாலகிருஷ்ணன், ஸ்ரீபெரும்புதூர் ஜெகத்ரட்சகன், தருமபுரி தாமரைச்செல்வன், ஆரணி சிவானந்தம் ஆகிய நான்கு பேர் மட்டுமே வன்னியர் சமூகத்தைச் சேர்ந்தவர்கள்.

ஆனால், சேலம், கள்ளக்குறிச்சி, அரக்கோணம், திருவண்ணாமலை உள்ளிட்ட வட மாவட்ட தொகுதிகளுக்கு திமுக-வில் வன்னியர் சமூகத்து கட்சிப் பிரமுகர்கள் அநேகம் பேர் விருப்ப மனுத் தாக்கல் செய்திருந்தனர். இவர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்படாததால் வன்னியர் சமூகத்தினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

குறிப்பாக சேலத்தில் வீரபாண்டி ஆறுமுகத்தின் குடும்பத்தினர் அல்லது ஏதேனும் ஒரு வன்னியருக்கு வாய்ப்பு அளிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. அங்கு கொங்கு வேளாளர் சமூகத்தைச் சேர்ந்த தொழிலதிபரான உமாராணி செல்வராஜுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டது,வீரபாண்டி ஆறுமுகத்தின் ஆதரவாளர்கள் மற்றும் வன்னியர் இடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. தவிர, அதிமுக-வில் மொத்தம் எட்டு தொகுதிகள் வன்னியர் சமூகத்தினருக்கு ஒதுக்கப்பட்ட நிலையில் இது வன்னியர் சமூகத்தினரை திமுக-வுக்கு எதிராக திருப்பும் என்கிறார்கள் அரசியல் விமர்சகர்கள்.

நாடார் சமூகம் பரவாயில்லை!

நாடார் சமூகத்தினருக்கு அதிமுக-வில் மூன்று தொகுதிகள் அளிக்கப்பட்டிருந்தது. தற்போது திமுக-வில் கன்னியாகுமரி, தூத்துக்குடி, திருநெல்வேலி, விருதுநகர் ஆகிய நான்கு தொகுதிகள் ஒதுக்கப்பட்டிருப்பது நாடார் சமூகத்தினருக்கு அதிருப்தி இல்லையென்றாலும் முழு திருப்தி இல்லை என்கின்றனர் தென் மாவட்டத்து நாடார் பிரமுகர்கள்.

புறக்கணிக்கப்பட்ட கனிமொழி முகாம்!

கனிமொழி பரிந்துரைத்த பெரும்பாலான பிரமுகர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்படாததால் கனிமொழியின் முகாம் அதிருப்தி அடைந்துள்ளது. குறிப்பாக கள்ளர் சமூகத்தினர் பெரும்பான்மையாக இருக்கும் தஞ்சாவூர் தொகுதிக்கு அதே சமூகத்தைச் சேர்ந்த பழனி மாணிக்கத்தை கனிமொழி பரிந்துரை செய்திருந்தார்.

ஆனால், அங்கு அகமுடையார் சமூகத்தைச் சேர்ந்த டி.ஆர்.பாலுவுக்கு மீண்டும் வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. வன்னியர் பெரும்பான்மையாக இருக்கும் கள்ளக்குறிச்சியில் அதே சமூகத்தைச் சேர்ந்த செல்வநாயகம் என்பவரை கனிமொழி பரிந்துரைத்திருந்தார். அவருக்கும் வாய்ப்பு மறுக்கப்பட்டு, அங்கு துளுவ வேளாளர் சமூகத்தைச் சேர்ந்த மணிமாறன் என்பவருக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.

தூத்துக்குடி தொகுதியை ஜெயதுரை என்பவருக்கு கனிமொழி பரிந்துரைத்திருந்தார். அங்கு பெரியசாமியின் மகன் ஜெகனுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. கன்னியா குமரியில் கூடங்குளம் அணு உலை எதிர்ப்பு இயக்கத்தைத் தொடங்கியவரான மனோ தங்கராஜ் என்பவருக்கு கனிமொழி பரிந்துரைத்திருந்தார்.

அங்கு சுரேஷ்ராஜன் ஆதரவாளரான ராஜரத்தினம் என்பவருக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. இவர் ஒன்றியத் தேர்தலிலேயே மூன்று முறை தோற்றவர் என்று குற்றம்சாட்டுகிறார்கள் கட்சியினர். கடலூர் தொகுதியை செஞ்சி ராமச்சந்திரனுக்கு கேட்டிருந்தார் கனிமொழி. அதுவும் மறுக்கப்பட்டுள்ளது.

ஸ்டாலினின் ஆதரவாளர்களுக்கே சீட்!

வட சென்னையில் கிரிராஜன், தஞ்சாவூரில் டி.ஆர்.பாலு, தூத்துக்குடியில் ஜெகன், கன்னியாகுமரியில் ராஜரத்தினம், நெல்லையில் தேவதாஸ் சுந்தரம், மதுரையில் வேலுசாமி என பெரும்பான்மைத் தொகுதிகளுக்கு ஸ்டாலினின் தீவிர ஆதரவாளர்கள் மற்றும் ஆதரவாளர்கள் பரிந்துரைந்த நபர்களுக்கு மட்டுமே வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. அழகிரியின் ஆதரவாளர்கள் முற்றிலுமாகப் புறக்கணிக்கப்பட்டுள்ளனர். இதேபோல், துரைமுருகனின் மகனுக்கு வாய்ப்பு அளிக்கப்படாததில் அவர் தரப்பும் அதிருப்தி அடைந்துள்ளது.

பாதிக்குப் பாதி புது முகங்களே!

வட சென்னை கிரிராஜன், கள்ளக்குறிச்சி மணிமாறன், சேலம் உமாராணி, ஆரணி சிவானந்தம், திருவண்ணாமலை அண்ணாதுரை, விழுப்புரம் முத்தையன், திருப்பூர் செந்தில் நாதன், கோவை கணேஷ்குமார், திருச்சி அன்பழகன், கரூர் சின்னசாமி, கடலூர் நந்தகோபால், ஈரோடு பவித்திரவள்ளி, கன்னியாகுமரி ராஜரத்தினம், காஞ்சிபுரம் செல்வம், பெரம்பலூர் பிரபு, அரக்கோணம் இளங்கோ, திருநெல்வேலி தேவதாஸ், கிருஷ்ணகிரி பில்லப்பா, புதுச்சேரி நஜீம் என சுமார் பாதி வேட்பாளர்கள் புது முகங்களே.

இதில் கிரிராஜன் ஸ்டாலினின் கொளத்தூர் சட்டமன்றத் தொகுதியின் தேர்தல் பொறுப்பாளர். கரூர் சின்னசாமி அதிமுக-வில் அமைச்சராக இருந்தவர். முத்துசாமி அணியுடன் திமுக-வுக்கு முகாம் மாறியவர். கடலூர் நந்தகோபால் பழைய காங்கிரஸ் பிரமுகர்.

1977-ல் பண்ருட்டி ராமச்சந் திரனை எதிர்த்து போட்டியிட்டு சுமார் ஐந்தாயிரம் ஓட்டு வித்தியாசத்தில் தோல்வியடைந் தவர். விருதுநகரின் ரத்னவேல் தொழில் வர்த்தக கூட்டமைப்புத் தலைவர். சில்லறை வணிகத்தில் அன்னிய முதலீடு விவகாரத்தில் திமுக-வின் நிலைப்பாட்டில் நாடார் சமூகத்தினர் திமுக-வுக்கு எதிராக திரும்பாமல் பார்த்துக்கொண்டவர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x