Last Updated : 07 Jul, 2015 04:23 PM

 

Published : 07 Jul 2015 04:23 PM
Last Updated : 07 Jul 2015 04:23 PM

குறைதீர் கூட்டத்தில் ‘அலட்சிய அலுவலர்கள்’: மக்கள் பிரச்சினைகளுக்கு செவிமடுக்க மறந்து சமூக வலைதளங்களில் மூழ்கினர்

திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற மக்கள் குறைதீர் கூட்டத்தில், மனு அளிக்க வந்த மக்களையும், ஆட்சியரையும் அலட்சியப்படுத்தும் செயல்களில் துறை அலுவலர்கள் சிலர் ஈடுபட்டது மக்களை முணுமுணுக்கச் செய்தது.

மக்கள் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்காக வாரந்தோறும் திங்கள்கிழமைகளில் நடத்தப்படும் இந்தக் கூட்டத்தில், தங்களது கோரிக்கைகளை நிறைவேற்றிக்கொள்ளும் நம்பிக்கையில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து நூற்றுக்கணக்கானோர் குழுவாகவும், தனியாகவும், குடும்பத்தினருடனும் ஆட்சியர் அலுவலகம் வருகின்றனர்.

தங்களது பகுதிகளில் உள்ள சம்பந்தப்பட்ட துறை அலுவலகத்தில் அளித்து, பலமுறை அலைந்து திரிந்தும் தீர்வு ஏற்படாத மனுக்கள், புதிய மனுக்கள் என்று ஆட்சியரிடம் அளிப்பதற்காக அளிக்க வரும் கோரிக்கை மனுக்களின் எண்ணிக்கை குறைந்தபாடில்லை.

மனு அளிப்பதற்காக ஆட்சியர் அலுவலகத்துக்கு வரும் மக்கள், முதலில் கூட்ட அரங்கை சுற்றியுள்ள கவுன்ட்டர்களில் வரிசையில் நின்று தங்களது மனுக்களை அளித்து பதிவு செய்து பதிவெண் வாங்கிக்கொள்ள வேண்டும்.

கோரிக்கை மனுவில் பதிவெண்ணுடன் வரும் மக்களை மட்டுமே கூட்ட அரங்கின் வாசலில் உள்ள போலீஸார், தீவிர பரிசோதனைக்குப் பிறகு கூட்ட அரங்குக்குள் அனுமதிக்கின்றனர். இந்தச் சோதனை மக்களின் நூதன போராட்டங்களைத் தடுப்பதற்காக அமல்படுத்தப்பட்டு உள்ளது.

மாதத்தின் முதல் கூட்டம்

மாவட்ட ஆட்சியர் கே.எஸ்.பழனிசாமி தலைமையில் ஆட்சியர் அலுவலகக் கூட்ட அரங்கில் நேற்று மக்கள் குறைதீர் கூட்டம் நடைபெற்றது. மாதத்தின் முதல் திங்கள்கிழமை நடைபெற்ற கூட்டம் என்பதால், மாவட்ட வருவாய் அலுவலர் க.தர்ப்பகராஜ் உட்பட பல்வேறு துறைகளைச் சேர்ந்த உயர் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

கூட்ட அரங்கில், ஏராளமான பொதுமக்கள் தங்கள் கோரிக்கை மனுக்களை வரிசையில் நின்று ஆட்சியரிடம் அளித்தனர். மனுக்களைப் பெற்ற ஆட்சியர், மனு அளித்தவர்களிடம் விசாரணை நடத்தி, சம்பந்தப்பட்ட துறை அலுவலரை அழைத்து, மனுவை ஒப்படைத்து உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.

சமூக வலைதளங்களில்…

ஆனால், கூட்ட அரங்கில் பங்கேற்ற துறை உயர் அலுவலர்கள் பலர், தங்களின் முன்பு ஆட்சியர் இருப்பதை அறிந்தும், அலட்சியப்படுத்தும் வகையில் செல்போன்களில் வாட்ஸ் ஆப், ஃபேஸ்புக் ஆகிய சமூக வலைதளங்களில் மூழ்கிக் கிடந்தனர். சிலர் செல்போனில் பேசிக்கொண்டிருந்தனர். மேலும், சிலர் வாராந்திர, மாத பல்சுவை இதழ்களை மடியில் வைத்து படித்துக் கொண்டிருந்தனர்.

ஆட்சியருக்கு முன்பாக 2 மற்றும் 3-வது வரிசைகளில் அமர்ந்திருந்தவர்களைத் தவிர ஏனைய வரிசையில் அமர்ந்திருந்த அலுவலர்கள் பலரும், கூட்டத்தில் என்ன நடக்கிறது என்பதையே கவனிக்கவில்லை என்று மனு அளிக்க காத்திருந்த மக்கள் தெரிவித்தனர்.

தங்களது பெயரைச் சொல்லி அழைத்தபோது மட்டும் ஆட்சியரிடம் சென்று பவ்யமாக வணக்கம் செலுத்தி, மனுக்களை வாங்கிக்கொண்டு இருக்கைக்குத் திரும்பினர். வாங்கி வந்த அந்த மனுவைக்கூட படித்துப் பார்க்காமல் மீண்டும் தங்களது அலட்சிய நடவடிக்கையைத் தொடர்ந்தனர். இதில், பெண் உயர் அலுவலர்களும் விதிவிலக்கல்ல.

நலத்திட்ட உதவிகள் பெறுவதற்காகவும், கோரிக்கை மனுக்களை அளிப்பதற்காகவும் கூட்ட அரங்கில் காத்திருந்த மக்கள், அலுவலர்களின் இந்த அலட்சிய நடவடிக்கையைக் அவ்வப்போது கவனித்துக்கொண்டிருந்தனர். “ஆட்சியர் முன்னிலையிலேயே இப்படி இருக்கும் இவர்கள், தங்களது அலுவலகங்களில் எப்படி இருப்பார்கள்” என்று அவர்கள் முணுமுணுத்துச் சென்றதைக் கேட்க முடிந்தது.

ஆட்சியரைச் சந்தித்து மனு அளித்தாலாவது தீர்வு கிடைக்குமா என்ற நம்பிக்கையில் வரும் மக்களையும், மாவட்டத்தின் உயரதிகாரியான ஆட்சியரையும் அலட்சியப்படுத்தும் வகையில் துறை அலுவலர்களின் இதுபோன்ற செயல்களைத் தடுத்து, மக்கள் குறைதீர் கூட்டத்தை கட்டுக்கோப்பாக நடத்த ஆட்சியர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே மக்களின் எதிர்பார்ப்பு.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x