அரசு நாற்றுப்பண்ணையில் போதிய தென்னங்கன்றுகள் கிடைக்காமல் விவசாயிகள் அவதி

அரசு நாற்றுப்பண்ணையில் போதிய தென்னங்கன்றுகள் கிடைக்காமல் விவசாயிகள் அவதி
Updated on
1 min read

கன்னியாகுமரி மாவட்டத்தில் விவசாயிகள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ள அரசு தென்னை நாற்றுப்பண்ணையில் தேவைக்கேற்ப கன்றுகள் கிடைக்கவில்லை. இதனால் தனியார் நாற்றுப் பண்ணைகளில் கூடுதல் விலை கொடுத்து தென்னங்கன்றுகளை வாங்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

தமிழகத்தில் பொள்ளாச்சிக்கு அடுத்தபடியாக கன்னியாகுமரி யில்தான் தென்னை விவசாயம் அதிக அளவில் நடைபெறுகிறது. இங்கு நடப்பாண்டில் தென்னை விவசாயத்தின் பரப்பளவு 70 ஆயிரம் ஏக்கராக அதிகரித்து ள்ளது. தேங்காய்க்கு நல்ல விலை உள்ளதால் அதிகமான விவசாயிகள் தென்னங்கன்று களை நட்டு வருகின்றனர். இன்னும் இரு ஆண்டுகளில் தென்னை விவசாயத்தின் பரப்பு 1 லட்சம் ஏக்கராக அதிகரிக்கும் என வேளாண் ஆர்வலர்கள் கணித்துள்ளனர்.

கன்னியாகுமரி மாவட்டம் புத்தளத்தில் உள்ள தமிழக அரசின் தென்னை நாற்று பண்ணையில் வேளாண் வல்லுநர்களால் முறைப்படி ஒட்டுசெய்து பாவி நடப்பட்ட தரமான தென்னங்கன்றுகளை வாங்க விவசாயிகள் மத்தியில் கடும் போட்டி நிலவுகிறது. இங்கு ஆண்டுக்கு 70 ஆயிரம் தென்னை கன்றுகள் மட்டுமே உற்பத்தி செய்யப்படுகின்றன. ஆனால், இரண்டு லட்சம் தென்னங்கன்றுகளுக்கு மேல் விவ சாயிகளுக்கு தேவைப்படுகி றது.

இதுகுறித்து கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) நிஜாமுதீன் கூறும்போது, “புத்தளம் அரசு தென்னை நாற்றுப் பண்ணையில் தரமிக்க மூன்று தென்னை ரகங்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன. நெட்டை ரகம், ஒட்டு ரகங்களான நெட்டை குட்டை மற்றும் குட்டை நெட்டை ரகங்கள் ஆகியவை 50 சதவீத அரசு மானியத்துடன் விற்பனை செய்யப்படுகின்றன.

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள 9 ஊராட்சி ஒன்றியங்களில் வேளாண்மை உதவி இயக்குநர் அலுவலகம் மூலம் இக்கன்றுகள் விற்கப்படுகின்றன. விவசாயிகள் கூடுதல் தென்னை கன்றுகளை கேட்டு வருவதால் அடுத்த ஆண்டு கன்றுகளின் உற்பத்தியை அதிகரிக்க அரசுக்கு பரிந்துரை செய்யப்படும்” என்றார்.

அரசு தென்னை நாற்று பண்ணையில் நெட்டை ரகம் 26,300, நெட்டை குட்டை ரகம் 26,300, குட்டை நெட்டை எனப்படும் சிவப்பு இளநீர் ரகம் 18 ஆயிரம் கன்றுகள் வரை உற்பத்தி செய்யப்படுகிறது. இந்த விற்பனையை அதிகரிக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தனியார் நாற்றுப் பண்ணைகளுக்கு கிராக்கி

தென்னை நாற்று தட்டுப்பாடு குறித்து ஈத்தாமொழியை சேர்ந்த தென்னை விவசாயி ஒருவர் கூறும்போது, “ஆடி அமாவாசை நாளில் விவசாயிகள் அனைவரும் தென்னங்கன்றுகள் நடுவதை மரபாக வைத்துள்ளனர்.

ஆனால், அரசு தென்னை நாற்றுப்பண்ணையில் போதிய கன்றுகள் கிடைக்கவில்லை.

இதனால் தனியார் நாற்றுப்பண்ணைகளில் ரூ.100-க்கு மேல் விலை கொடுத்து கன்றுகளை வாங்கி வருகிறோம். இப்போது தனியார் நாற்றுப்பண்ணைகளிலும் தென்னங்கன்றுகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது” என்றார்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in