

பெரம்பலூர் மாவட்டம் வேப்பூரைச் சேர்ந்த ஒரு மைனர் பெண்ணை அந்தூர் கிராமத்தைச் சேர்ந்த மோகன் என்பவர் காதலித்து, பின்னர் வீட்டிற்கு தெரியாமல் சென்னைக்குக் கடத்திச் சென்று 1994 ஆகஸ்ட் மாதம் திருமணம் செய்து கொண்டார்.
மரத்தில் தூக்கில் சடலம்…
இது தொடர்பாக சீமான் குன்னம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்த புகாரின் அடிப்படையில் அங்கு காவல் ஆய்வாளராக இருந்த கஸ்தூரி காந்தி, இந்த காதலுக்கு சீமான் வீட்டில் வேலை செய்து வந்த வேப்பூரைச் சேர்ந்த அருணாச்சலம் மகன் பாண்டியன் (35) உதவியிருப்பதாகச் சந்தேகித்து, அவரை அழைத்துச் சென்று விசாரித்தனராம்.
இந்தநிலையில் கிழுமத்தூர்- கோவிந்தராஜபட்டினம் கிராமங்களுக்கு இடையே ஒரு ஓடை ஓரத்தில் பருத்திக்காட்டில் உள்ள வேப்ப மரத்தில் தூக்கிட்ட நிலையில் பாண்டியன் சடலம் கிடந்துள்ளது.
இது தொடர்பாக போலீஸார் தற்கொலை என வழக்குப்பதிவு செய்தனர். ஆனால், தனது கணவரை போலீஸார் விசாரணைக்கு அழைத்துச் சென்று கொலை செய்து விட்டதாக பாண்டியனின் மனைவி அஞ்சலை, சடலத்தை வாங்க மறுத்து உறவினர்களுடன் போராட்டத்தில் ஈடுபட்டார். இதைத் தொடர்ந்து பல்வேறு அமைப்பினரும் போராட்டங்களில் ஈடுபட்டனர்.
சிபிசிஐடி-க்கு, சிபிஐ-க்கு…
பாண்டியன் மரணத்தில் சந்தேகம் உள்ளது என அஞ்சலை அளித்த புகாரின் பேரில், இந்த வழக்கு சிபிசிஐடி போலீஸாருக்கு மாற்றப்பட்டது. இதிலும் திருப்தி இல்லாததால் இந்த வழக்கு சிபிஐ-க்கு மாற்றப்பட்டு விசாரணை நடைபெற்றது.
இந்த வழக்கு விசாரணையில் 20 ஆண்டுகளுக்குப் பிறகு சிபிஐ போலீஸார், பாண்டியன் கொலை செய்யப்பட்டதை கண்டுபிடித்தனர். இதைத் தொடர்ந்து அப்போது காவல் ஆய்வாளராக இருந்த கஸ்தூரி காந்தி (தற்போது மதுரை மாநகரக் காவல் கட்டுப்பாட்டு அறை உதவி ஆணையர்) மற்றும் அப்போது பாடாலூர் காவல் நிலையத்தில் காவலராக இருந்த ரவி (தற்போது திருச்சி விமான நிலைய குடியேற்றப்பிரிவு உதவி ஆய்வாளர்) ஆகியோரை சென்னையில் வைத்து செவ்வாய்க்கிழமை கைது செய்தனர்.
பின்னர் இருவரையும் பாதுகாப்பு டன் திருச்சி தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த அழைத்து வந்தனர். அப்போது தனக்கு நெஞ்சு வலிப்பதாக கூறிய கஸ்தூரி காந்தியை திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். உதவி ஆய்வாளர் ரவியை தலைமை குற்றவியல் நீதிமன்ற நடுவர் பாலச்சந்திரன் முன் ஆஜர்படுத்தினர்.
விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டு, காவல் துறையினரின் கட்டுப்பாட்டில் இருந்தபோது இறந்து, பின்னர் அதை தற்கொலையாக சித்தரிக்க முயன்ற காவல் துறையினரது செயல் சிபிஐ விசாரணையில் 20 ஆண்டுகளுக்கு பிறகு கண்டுபிடிக்கப்பட்டு, கைது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.