என்எல்சி பிரச்சினைக்கு தீர்வு கோரி பிரதமருக்கு ஜெ. கடிதம்

என்எல்சி பிரச்சினைக்கு தீர்வு கோரி பிரதமருக்கு ஜெ. கடிதம்
Updated on
1 min read

என்.எல்.சி. தொழிலாளர்கள் போராட்டத்துக்கு பிரதமர் தலையிட்டு தீர்வுகாணவேண்டும் எனக் கோரி தமிழக முதல்வர் ஜெயலலிதா கடிதம் எழுதியுள்ளார்.

பிரதமர் மோடிக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில், "புதிய ஊதிய மாற்று ஒப்பந்தம், ஒப்பந்தத் தொழிலாளர்கள் பணி நிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து என்.எல்.சி. தொழிலாளர்கள் கடந்த 20-ம் தேதி முதல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

தமிழகத்தின் மின் தேவைக்கு முக்கிய ஆதாரமாக என்.எல்.சி. இருக்கிறது என்பதை தாங்கள் நன்கு அறிவீர்கள். இங்கு உற்பத்தியாகும் மின்சாரத்தில் 1450 மெ.வா தமிழகம் கொள்முதல் செய்கிறது.

இந்நிலையில், கடந்த 1.1.2012- முதல் தொழிலாளர்களுக்கு அளிக்கப்பட வேண்டிய ஊதிய நிலுவைத் தொகை இதுவரை வழங்கப்படவில்லை எனத் தெரியவந்துள்ளது. 2014 ஜூன் மாதம் இடைக்கால நிவாரணம் வழங்கப்பட்டாலும், அவர்களது புதிய ஊதிய மாற்று ஒப்பந்தம் இன்னும் நிறைவேற்றப்படவில்லை. இத்தனைக்கும் என்.எல்.சி. லாபத்தில் இயங்கும் ஒரு பொதுத்துறை நிறுவனமாக இருக்கிறது.

எனவே, மத்திய நிலக்கரித் துறை இவ்விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்குமாறு நீங்கள் உத்தரவிட வேண்டும். அதன் மூலம் தமிழகத்தில் மின்வெட்டு ஏற்படாமல் இருக்க உதவுமாறும் கேட்டுக்கொள்கிறேன்" எனத் தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in