

வண்டலூர் அருகே இந்திய ராணுவ அதிகாரிகள் பயிற்சி அகாடமி (ஓடிஏ) சார்பில் நேற்று வான் சாகச நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
காயார் ஏரியில் நடைபெற்ற இந்த சாகச நிகழ்ச்சியில் இந்திய தரைப்படை அதிகாரிகள் 20 பேர் மற்றும் விமானப்படை அதிகாரிகள் 12 பேர் என மொத்தம் 32 பேர் பங்கேற்றனர். குறைந்தபட்சமாக 1250 அடி உயரத்திலிருந்தும், அதிக பட்சமாக 8 ஆயிரம் அடி உயரத் திலிருந்தும் குதித்து அவர்கள் சாகசத்தில் ஈடுபட்டனர். பல்வேறு குழுக்களாக பிரிந்து அவர்கள் செய்துகாட்டிய சாகசங்கள், பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தன.
இந்த சாகச நிகழ்ச்சியின்போது சில வீரர்கள் 7 நிமிடங்கள் வரை வானில் வட்டமிட்டு பறந்தனர். மேலும் இரவு நேரங்களில் ஆயுதங் களுடன் சென்று தாக்கும் பாரா சூட்களிலும் வீரர்கள் பறந்து சாகசத்தில் ஈடுபட்டனர். இந்நிகழ்ச்சி யில் சிறப்பாக சாகசங்களை செய்துகாட்டிய 3 குழுவினருக்கு ஓடிஏ கமாண்டென்ட் ஆர்.பி.ஷாஹி பரிசுகளை வழங்கி கவுரவித்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறிய தாவது:
இந்திய ராணுவத்தில் காலத் துக்கு ஏற்றவாறு பல்வேறு புதிய பயிற்சிகள் வீரர்களுக்கு வழங்கப் படுகின்றன.
மேலும் இதுபோன்ற சாகச பயிற்சியும் வழங்கப்படுகிறது. இந்திய ராணுவத்தின் பலத்தை பறைசாற்றும் விதமாக இந்த சாகச நிகழ்ச்சிகள் ஒவ்வொரு ஆண்டும் புது டெல்லியில் நடைபெறும் குடியரசு தின விழா அணிவகுப்பின்போது இடம்பெற்று வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
சாகசத்தில் ஈடுபட்ட தமிழகத்தை சேர்ந்த வீரர் பி.கார்த்திக் குமார் கூறும்போது, “தொடக்கத்தில் இது போன்ற சாகசத்தில் ஈடுபடும் போது பயமாக இருந்தது. தன்னம் பிக்கையுடன் தொடர்ந்து பயிற்சி மேற்கொண்டேன். இப்போது 5 ஆயிரம் அடி உயரத்தில் இருந்து குதித்து சாகசம் செய்கிறேன். வானில் பறக்கும்போது பறவையை போன்று உணர்ந்தேன். இது எனக்கு மகிழ்ச்சி அளித்தது” என்றார்.