

மத்திய அரசின் திட்டங்களுக்கு தமிழக அரசு ஒத்துழைப்பு வழங்குவதில்லை என்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் குற்றம் சாட்டியுள்ளார்.
தென் மாநிலங்களைச் சேர்ந்த பாஜக நிர்வாகிகளின் கூட்டத்தில் பங்கேற்பதற்காக பெங்களூரு செல்லும் முன்பு, சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் நேற்று நிருபர்களிடம் தமிழிசை சவுந்தரராஜன் கூறியதாவது: தமிழகத்தில் 40 லட்சத்துக்கும் அதிகமானோர் பாஜகவில் உறுப்பினர்களாக இணைந்துள்ளனர். அவர்கள் அனைவரையும் நேரில் சந்தித்து உறுப்பினர் அட்டை விநியோகிக்கும் மெகா மக்கள் சந்திப்பு இயக்கம் விரைவில் நடைபெறவுள்ளது.
இது தொடர்பாக கடந்த வாரம் டெல்லியில் அகில இந்திய அளவில் பயிற்சி முகாம் நடை பெற்றது.அதனைத் தொடர்ந்து தென் மாநில நிர்வாகிகளுக்கான பயிற்சி முகாம் பெங்களூருவில் நடக்கிறது. மத்திய, மாநில அரசுகள் இணைந்து செயல்பட்டால்தான் மக்களுக்கான திட்டங்களை விரைந்து முடிக்க வேண்டும். ஆனால், மத்திய அரசின் திட்டங்களுக்கு தமிழக அரசு ஒத்துழைப்பு வழங்குவதில்லை. இதனால், தமிழகத்துக்காக அறிவிக்கப்பட்ட மத்திய அரசின் திட்டங்களை நிறைவேற்ற முடியவில்லை.
நவீன நகரங்கள் திட்டத்தின் கீழ் உத்தரப்பிரதேசத்துக்கு அடுத்தபடியாக தமிழகத்தில் மிக அதிகமாக 12 நகரங்கள் அமைக்க நரேந்திர மோடி அரசு முடிவு செய்துள்ளது. ஆனால் இந்தத் திட்டம் தொடர்பான ஆலோசனை கூட்டத்தில் தமிழகத்தில் இருந்து அமைச்சர்கள் யாரும் கலந்து கொள்ளவில்லை. அதிமுக அரசு இவ்வாறு நடந்து கொண்டால் தமிழகத்தின் வளர்ச்சி பாதிக்கப்படும்.
ஆம்பூரில் போலீஸ், பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்தியவர்களை கண்டறிந்து தண்டனை வழங்க வேண்டும். இந்த விஷயத்தில் வாக்கு வங்கி அரசியலுக்காக தமிழக அரசியல் கட்சிகள் மவுனம் சாதிப்பது கண்டனத்துக்குரியது என்றார்.