

உலக வங்கி நிதியில், சென்னை உட்பட 12 கடலோர மாவட்டங்களில் சிறுவகை நவீன மீன் விற்பனை அங்காடிகள் விரைவில் திறக்கப்பட உள்ளன.
தமிழகத்தில் 13 கடலோர மாவட்டங்கள் உள்ளன. இங்குள்ள மீனவர்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்த பல்வேறு திட்டங்களை மத்திய, மாநில மீன்வளத்துறைகள் செயல்படுத்தி வருகின்றன. இதில் ஒரு பகுதியாக சுனாமி மற்றும் பல்வேறு விபத்துக்களில் பாதிக்கப்பட்ட மீனவ குடும்பங்களின் வசதிக் காக, நடமாடும் மீன் அங்காடி, மீன்விற்பனை மையங்கள் போன்ற திட்டங்கள் செயல் படுத்தப்படுகின்றன.
இதற்காக நிலைத்த வாழ்வாதாரத்துக்கான மீன்வள மேலாண்மை திட்டம் (FIMSUL) உலக வங்கி நிதியில் செயல்படுத்தப்படுகிறது.
இத்திட்டத்தின் இரண்டாம் பாகத்தில் தமிழகத்தில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், விழுப் புரம், கடலூர், நாகை, தஞ்சை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், தூத்துக்குடி, நெல்லை மற்றும் கன்னியாகுமரி ஆகிய 12 மாவட்டங்களில் சிறியவகை நவீன மீன் விற்பனை அங்காடிகள் அமைக்க தமிழக மீன்வளத்துறை முடிவெடுத்துள்ளது. இந்த அங்காடிகளை அமைப்பதற்கான ஒப்பந்தத்தை மீன்வளத்துறை தற்போது கோரியுள்ளது.
இதுகுறித்து மீன்வளத்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:
தமிழகத்தில் ஏற்கெனவே சென்னை, மதுரை, திருச்சி உள் ளிட்ட மாவட்டங்களில் 21 நடமாடும் மீன் விற்பனை மையங்கள் செயல்பட்டு வருகின்றன. சென்னையில் கூடுதலாக ரூ.50 லட்சம் செலவில் ஐந்து நவீன நடமாடும் மீன் விற்பனை வாகனங்கள் இணைக்கப்பட்டுள் ளன.
இந்நிலையில் தற்போது திருவாரூர் தவிர இதர மாவட்டங்களில் 12 இடங்களில் சிறிய வகை நவீன மீன் விற்பனை அங்காடிகள் திறக்கப்படுகின்றன. இதற்கான ஒப்பந்தம் கோரப்பட்டுள்ளது. ஆகஸ்ட் மாத இறுதியில் ஒப்பந்ததாரர் முடிவு செய்யப்பட்டு, பணிகள் விரைவில் தொடங்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.