

சென்னை: சட்டப்பேரவையில் இன்று மின்துறை சார்பில் 17 அறிவிப்புகளை வெளியிட்ட அமைச்சர் நிர்மல் குமார், விவசாயிகளுக்கு 50 ஆயிரம் புதிய மின் இணைப்புகள் வழங்கப்படும் என அறிவித்துள்ளார். அவை இலவச மின் இணைப்பா என விவசாயிகள் மத்தியில் கேள்வி எழுந்துள்ளது.
சட்டப்பேரவையில் இன்று மின்துறை அமைச்சர் நிர்மல் குமார் மின்துறை சார்பில் 17 புதிய அறிவிப்புகளை வெளியிட்டார். அவற்றின் சில அறிவிப்புகளின் விவரம்: தமிழ்நாடு மின் பகிர்மான கழகத்தால் 2026-27 ஆம் ஆண்டில் 50,000 புதிய விவசாயம் மின் இணைப்புகள் வழங்கப்படும்
நுகர்வோர் தங்களது புகார்களை பதிவு செய்யவும், அவற்றின் நிலையை தொடர்ந்து கண்காணிக்கவும் ரூ.14 லட்சம் மதிப்பீட்டில் வாட்ஸ் அப்பில் தானாகவே பதில் அளிக்கும் மென்பொருள் வசதி உருவாக்கப்படும்.
பணியிட மாறுதல்கள் மற்றும் பதவி உயர்வில் பணியிட நியமனங்களுக்கு இணைய வழி கலந்தாய்வு நடத்துவதற்கான மென்பொருள் செயலி உருவாக்கப்பட்டு தற்போதுள்ள மனித வள மேலாண்மை அமைப்புடன் இணைக்கும் பணி ரூ.8.26 லட்சம் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்படும்.
வீட்டு மின் இணைப்புக் கோரும் புதிய விண்ணப்பதாரர்களுக்கு கள ஆய்வு இல்லாமலேயே சுய உறுதிமொழி அடிப்படையில் புதிய மின் இணைப்பு வழங்கப்படும். இதன் மூலம் புதிய மின் இணைப்பு கோரும் வீட்டு விண்ணப்பதாரர்களுக்கான செயல்முறை எளிதாக்கப்படும். என்பன உள்ளிட்ட 17 அறிவிப்புகள் இடம்பெற்றுள்ளன.
கடந்த திமுக ஆட்சியில் ஆண்டு தோறும் 1 லட்சம் அல்லது 50 ஆயிரம் என்ற எண்ணிக்கையில் விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு வழங்கப்பட்டு வந்தது. ஆனால் இப்போது மின் துறை வெளியிட்ட அறிவிப்பில் புதிய மின் இணைப்புகள் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இது இலவச மின் இணைப்பா அல்லது ஏற்கெனவே பெற்ற தட்கல் விண்ணப்பங்களுக்கான மின் இணைப்பா என விவசாயிகள் கேள்வி எழுப்பியுள்ளனர்.