

அருண்ராஜ்
சென்னை: ஆன்லைன் மருந்து விற்பனையைக் கண்டித்து மருந்து வணிகர்கள் வேலைநிறுத்தப்போராட்டம் இன்று நடைபெறவுள்ள நிலையில், தமிழகம் முழுவதும் 5 ஆயிரம் மருந்தகங்கள் திறந்திருக்கும் என்று சுகாதாரத் துறை அமைச்சர் அருண்ராஜ் தெரிவித்தார்.
இது தொடர்பாக செய்தியாளர்களிடம் தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் அருண்ராஜ் கூறியதாவது: தமிழகம் முழுவதும் 50 ஆயிரம் மருந்தகங்கள் உள்ளன.
மருத்துவமனைகளுடன் இணைந்த மருந்தகங்கள், அப்போலோ, மெட்பிளஸ், துளசி பார்மசி, முத்து பார்மசிபோன்ற சங்கிலி தொடர் மருந்தகங்கள், முதல்வர் மருந்தகம், தமிழ்நாடு கூட்டுறவு சங்க மருந்தகங்கள், பிரதம மந்திரி ஜன் ஔஷதி கேந்திரா போன்ற அரசு ஆதரவு சில்லறை விற்பனை நிலையங்கள் கடையடைப்பில் பங்கேற்கவில்லை. எனவே, சுமார் 5 ஆயிரம் மருந்தகங்கள் திறந்திருக்கும்.
மருந்துகளின் போதுமான, தடையற்ற விநியோகத்தை உறுதி செய்ய, மருந்துகள் கட்டுப்பாட்டுத்துறையால் மாவட்ட வாரியாக உதவி எண்கள் உருவாக்கப்பட்டுள்ளன. தமிழ்நாடு மருந்து வணிகர் சங்கமும் அவசர காலங்களில் மருந்துகளை வழங்க மாவட்ட வாரியாக உதவி எண்களை அறிவித்துள்ளன. அந்த உதவி எண்களை பொதுமக்கள் தொடர்பு கொண்டால், அத்தியாவசிய மருந்துகள் உடனடியாக கிடைக்க வழிவகை செய்யப்படும்.
https://www.drugscontrol.tn.gov.in/pdfs/4748_One_Day_Nationwide_Banth_instructions.pdf என்ற மாநில மருந்து கட்டுப்பாட்டு இணையதளத்தில் உதவி எண்கள் இடம்பெற்றுள்ளன. ஆன்லைனில் மருந்து விற்பனை பிரச்சினை மத்திய அரசு சம்பந்தப்பட்டது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.