

கோப்புப் படம்
திமுக - மார்க்சிஸ்ட் தொகுதிப் பங்கீட்டில் இழுபறி நீடிக்கும் நிலையில், 5 தொகுதிகளை பெற்றுக்கொள்ளுமாறு முதல்வர் வைத்த வேண்டுகோளை பரிசீலிப்போம் என மார்க்சிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பெ.சண்முகம் தெரிவித்துள்ளார்.
திமுக கூட்டணியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகளை ஒதுக்க திமுக முன் வந்துள்ளது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு மற்றும் செயற்குழு கூட்டம் நேற்று முன்தினம் கூடியது. இரவு வரை நீடித்த இக்கூட்டத்தில் திமுகவிடம் கடந்த முறை போட்டியிட்ட 6 தொகுதிகளையாவது கேட்டு பெறுவது என முடிவெடுக்கப்பட்டது. அதனடிப்படையில் அண்ணா அறிவாலயத்தில் திமுகவுடனான 4-ம் கட்ட பேச்சுவார்த்தைக்கு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் குழு நேற்று சென்றது.
பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இந்த முறையும் உடன்பாடு ஏற்படாமல் பேச்சுவார்த்தை முடிவுற்றது. பின்னர் செய்தியாளர்களிடம் கட்சியின் மாநில செயலாளர் பெ.சண்முகம் கூறியதாவது: கூட்டணியில் புதிதாக கட்சிகள் இணைந்திருப்பதால் தொகுதிகளை ஒதுக்கீடு செய்வதில் இருக்கக்கூடிய சிரமங்களை முதல்வர் எங்களிடத்தில் பகிர்ந்து கொண்டார். அதனால் 5 தொகுதிகளை ஏற்று ஒத்துழைப்பு தருமாறு முதல்வர் கேட்டுக்கொண்டார். ஆனால் 6 தொகுதிகளுக்கு தான் கட்சியின் மாநிலக் குழு ஒப்புதல் தருவதற்கு அனுமதி அளித்திருந்தது.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இந்த கூட்டணியில் நீடிக்க விரும்புகிறோம். கடந்தமுறை எங்களது பலம் இருக்கும் மாவட்டங்களில், எங்களுக்கான தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்படவில்லை. அப்படி கிடைத்திருந்தால் 6 தொகுதிகளிலும் வெற்றிபெற்றிருப்போம். எனவே, முதல்வரின் வேண்டுகோளை கட்சியின் மாநிலக் குழு கூட்டத்தை கூட்டி பரிசீலித்து முடிவு செய்வோம். எத்தனை தொகுதிகள் கொடுப்பார்கள், அதற்கேற்ப கூட்டணியில் நீடிப்பதா? வேண்டாமா? என்பதை பற்றி யோசிக்கும் கட்சி மார்க்சிஸ்ட் அல்ல.
மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் இருந்துதான் 2026 சட்டப்பேரவை தேர்தலை சந்திப்போம். உடன்பாடு ஏற்பட்ட பிறகு சென்னை உட்பட எங்களுக்கு விருப்பமான தொகுதிகள் அடங்கிய விருப்பப்பட்டியலை திமுகவிடம் வழங்குவோம். இவ்வாறு அவர் கூறினார்.
இதையடுத்து, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு கூட்டம், தி.நகரில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் இன்று (மார்ச் 23) கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதனடிப்படையில் முடிவு செய்யப்பட்டு, திமுகவுடனான பேச்சுவார்த்தையில் மார்க்சிஸ்ட் கட்சிக்கான தொகுதிகள் இன்று இறுதிசெய்யப்படும் என கட்சி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.