

சென்னை: தேர்வு மைய ஒதுக்கீடு குளறுபடியால் தமிழகம் முழுவதும் டிஎன்பிஎஸ்சி குரூப்-2 மெயின் தேர்வு ரத்து செய்யப்பட்ட விவகாரத்தில், சார்பு-செயலர் உள்ளிட்ட 5 அதிகாரிகள் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். ஒரு துணை செயலர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
சார்-பதிவாளர், உதவி தொழிலாளர் ஆய்வாளர், சிறைத்துறை நன்னடத்தை அலுவலர், முதுநிலை வருவாய் ஆய்வாளர் உள்ளிட்ட பதவிகளுக்கான குரூப்-2 மற்றும் குரூப்-2ஏ மெயின் தேர்வுகள் கடந்த பிப்.8-ம் தேதி நடக்க இருந்தன.
தமிழகத்தின் மற்ற பகுதிகளில் தேர்வுகள் தொடங்கிய நிலையில், சென்னையில் அரும்பாக்கம் டி.ஜி.வைஷ்ணவா கல்லூரி, நந்தனம் அரசு கலைக் கல்லூரி ஆகிய மையங்களில் தேர்வர்களுக்கு இடங்கள் ஒதுக்குவதில் குளறுபடி ஏற்பட்டது. இதன் காரணமாக, தமிழகம் முழுவதும் தேர்வு ரத்து செய்யப்பட்டது.
இதற்கு, அரசியல் கட்சித் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர். இந்நிலையில், இந்த விவகாரத்தில் எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை தொடர்பாக டிஎன்பிஎஸ்சி செயலர் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு: கடந்த பிப்.8-ம் தேதி நடக்க இருந்த ஒருங்கிணைந்த குரூப்-2, குரூப்-2ஏ மெயின் தேர்வுகள் தொழில்நுட்பக் காரணங்களால் ரத்து செய்யப்பட்டன. இந்த தேர்வுகளை மார்ச் 15-ம் தேதி காலை மற்றும் பிற்பகலில் மீண்டும் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
தேர்வுகள் ரத்து செய்யப் பட்டது தொடர்பாக விரிவான விசாரணை நடத்தப்பட்டு, தொடர்பு உடையவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து, முதல்கட்ட விசாரணையின் அடிப்படையில், ஒரு உதவி பிரிவு அலுவலர், ஒரு புரோகிராமர், 2 பிரிவு அலுவலர்கள், ஒரு சார்பு-செயலர் ஆகியோர் தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். ஒரு துணைச் செயலர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இனிவரும் காலங்களில் இதுபோன்ற தவறுகள் நடைபெறாமல் இருக்க கூடுதல் வழிமுறைகள் செயல்படுத்தப்பட்டுள்ளன.