

சென்னை: நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்தி்ல் நடைபெற்று வரும் 49-வது சென்னை புத்தக காட்சி இன்று முடிவடைகிறது. தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கம் (பபாசி) சார்பில், 49-வது சென்னை புத்தக காட்சி ஜன.8-ம் தேதி தொடங்கியது.
ஆயிரம் அரங்குகளுடன் கூடிய இந்த புத்தக காட்சியை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். அதோடு கலைஞர் பொற்கிழி விருதுகளையும் அவர் வழங்கினார்.
தினமும் காலை 11 மணி முதல் இரவு 8.30 மணி வரை புத்தக காட்சி நடைபெற்று வருகிறது. அனைவருக்கும் அனுமதி இலவசம். தினமும் நூல் வெளியீடுகள், இலக்கிய அமர்வுகள், கலைநிகழ்ச்சிகள் என பல்வேறு சிறப்பு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன.
புத்தக காட்சிக்கு வரும் பார்வையாளர்கள் புத்தக காட்சியை பார்வையிட்டு தங்களுக்கு பிடித்தமான புத்தகங்களை வாங்கிச் செல்கிறார்கள். கண்காட்சியில் வாங்கப்படும் அனைத்து புத்தகங்களுக்கும் சிறப்பு தள்ளுபடி சலுகையும் வழங்கப்படுகிறது.
உச்சநீதிமன்ற நீதிபதி பங்கேற்பு: இந்நிலையில், கடந்த 13 நாட்களாக நடைபெற்று வரும் சென்னை புத்தக காட்சி இன்றுடன் (21-ம் தேதி) முடிவடைகிறது.
மாலை 6 மணியளவில் நடைபெறும் நிறைவு விழாவில், உச்சநீதிமன்ற நீதிபதி ஆர்.மகாதேவன் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்கிறார். அவர் பதிப்புத் துறையில் 25 ஆண்டுகள் நிறைவு செய்த பணியாளர்களுக்கு விருது வழங்கி கவுரவிக்கிறார்.