

திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக் கோட்டை ஆரணி ஆற்றில் மணல் குவாரி நடத்த இயலாது என்று பசுமை தீர்ப்பாயத்தின் தென்னிந்திய 2-ம் அமர்வில் பொதுப்பணித்துறை தெரிவித்துள்ளது.
ஊத்துக்கோட்டையைச் சேர்ந்த எம்.தமிழ்ச்செல்வன் தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் கடந்த ஆண்டு மனு ஒன்றை தாக்கல் செய்திருந் தார். அந்த மனுவில் அவர் குறிப்பிட் டிருந்ததாவது: ஊத்துக்கோட்டை ஆரணி ஆற்றில் மணல் குவாரி நடத்த மாநில சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையத்திடம் பொதுப்பணித்துறை சுற்றுச்சூழல் அனுமதி பெற்றுள்ளது. இந்த அனுமதி 2014-ம் ஆண்டு ஆகஸ்ட் 11-ம் தேதி முதல் 2015-ம் ஆண்டு ஆகஸ்ட் 10-ம் தேதிவரை செல்லத்தக்கது. சுற்றுச்சூழல் அனுமதிக்கான நிபந்தனைகளை மீறி, குவாரி அமைக்குமிடத்தில் இருந்து 500 மீட்டர் சுற்றளவில் குடியிருப்புகள், விவசாய நிலங்கள், சாலைகள், ஆழ்துளை கிணறுகள் ஆகியவை இருக்கும் நிலையில், அங்கு குவாரி அமைக்கப்பட உள்ளது. மேலும் அங்கு மணல் குவாரியை அமைத்தால், நிலத்தடிநீர் வற்றி, குடிக்கவும், விவசாயத்துக்கும் நீர் தட்டுப்பாடு ஏற்படும். அதனால் இந்த குவாரியை நடத்த தடை விதிக்க வேண்டும். இவ்வாறு மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது.
மனுவை விசாரித்த பசுமை தீர்ப் பாய அமர்வு, குவாரி தொடங்குவதற்கு முன்பே, கடந்த அக்டோபரில் குவாரியை நடத்த இடைக்காலத் தடை விதித்தது. இந்நிலையில் இந்த மனு, 2-ம் அமர்வின் நீதித்துறை உறுப்பினர் பி.ஜோதிமணி, தொழில்நுட்பத்துறை உறுப்பினர் பேராசிரியர் ஆர்.நாகேந் திரன் ஆகியோர் முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது.
அப்போது பொதுப்பணித்துறை யின் ஆரணி ஆறு வடிநிலக் கோட்ட செயற்பொறியாளர் செந்தில்குமார் தாக்கல் செய்த கடிதத்தில்” ஊத்துக்கோட்டை மணல் குவாரியின் சுற்றுச்சூழல் அனுமதி ஆகஸ்ட் 10-ம் தேதியுடன் காலாவதியாவதால், அங்கு மணல் குவாரி நடத்த இயலாது. பின்னர் சுற்றுச்சூழல் அனுமதிக்காக புதிதாக விண்ணப்பிக்கப்படும்” என்று கூறப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து “பொதுப்பணித்துறை குவாரியை நடத்த இயலாது என்று தெரிவித்துள்ளதால், இந்த வழக்கு இத்துடன் முடித்து வைக்கப்படுகிறது. பொதுப்பணித்துறை மீண்டும் சுற்றுச்சூழல் அனுமதி பெறும்பட்சத்தில் மனுதாரர், தனது மனுவை தாக்கல் செய்யலாம்” என்று அமர்வின் உறுப்பினர்கள் தீர்ப்பளித்தனர்.