தமிழக இளைஞர்களுக்கு நல்ல எதிர்காலத்தை உருவாக்குவோம்: திருச்சி கூட்டத்தில் ராகுல் காந்தி அறிவிப்பு
தமிழகத்தில் உள்ள இளைஞர் களுக்கு நல்ல எதிர்காலத்தை உருவாக்கித் தருவோம் என்றார் காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய துணைத் தலைவர் ராகுல் காந்தி.
திருச்சியில் நேற்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில் நடைபெற்ற காமராஜர் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டத்தில் அவர் பேசியதாவது:
வறுமையை ஒழிக்க கல்வியால் மட்டும்தான் முடியும் என நம்பி னார் காமராஜர். அதன் பிறகு பெற்றோர்களை சந்தித்த காமராஜர், ஏன் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பவில்லை எனக் கேட்டார். அதற்கு பெற்றோர்கள், ‘‘பள்ளிகள் வெகுதூரத்தில் இருக்கின்றன, போதுமான அளவில் பள்ளிகள் இல்லை’’ என தெரிவித்தனர்.
இதைத் தொடர்ந்து மாநகரங்கள், நகரங்கள், ஊரகப் பகுதிகள் என பல்வேறு இடங்களில் பள்ளிகளைத் தொடங்கினார். காமராஜர் ஆட்சிபுரிந்த 9 ஆண்டு களில் 13,000 பள்ளிகளை திறந்துள்ளார். அதாவது ஒரு நாளில் 4 பள்ளிகள் கட்டியுள்ளார்.
இருப்பினும் குழந்தைகள் பள்ளிக்குச் செல்லவில்லை. இது குறித்து பெற்றோரிடம் காமராஜர் கேட்டார். ‘‘நாங்கள் வேலைக்குச் செல்ல வேண்டும். குழந்தைகள் பள்ளிக்குச் சென்று விட்டால் அவர்களுக்கு யார் உணவளிப்பது’’ எனக் கேட்டனர். அதன்பிறகு தான் மதிய உணவுத் திட்டத்தை பள்ளிகளில் அமல்படுத்தினார். இதுதான் காமராஜர் ஆட்சி. காமராஜர் ஆட்சிக் காலத்தை ஒரு பொற்காலம் என போற்றுகிறோம்.
எந்த அரசியல் கட்சியும் ஆட்சியில் இருக்கும்போது மக்களின் உணர்வுகளுக்கும், கோரிக்கை களுக்கும் மதிப்பளிக்க வேண்டும்.
தமிழகத்தில் உள்ள மாநிலக் கட்சிகளைச் சேர்ந்த தலைவர்கள் மக்களைச் சந்திப்பதில்லை. பல தலைவர்கள் தங்களது வீடுகளை விட்டு வெளியே வருவதே இல்லை. மக்கள் வீதிகளில் படும் கஷ்டம் அவர்களுக்கு தெரியவில்லை.
தமிழகத்தில் வேலைவாய்ப்பு தான் முக்கியப் பிரச்சினையாக உள்ளது. தமிழகத்தில் மூன்றில் ஒரு பங்கு இளைஞர்களுக்கு வேலையில்லை. ஆனால், இங்கு ஆட்சியாளர்கள் இதைப்பற்றிக் கவலைப்படவில்லை. இந்தியாவி ல் இளைஞர்கள் படித்துவிட்டால் தங்களது வாழ்க்கை முன்னேற்றம் அடையும் என்ற நிலை தற்போது மாறிவிட்டது.
ஒரு குடும்பத்தில் இளைஞர் ஒருவர் படித்துவிட்டால் அந்த குடும்பம் முன்னேறிவிடும் என்று இளைஞர்களும், குடும்பத்தினரும் நம்புகின்றனர். தமிழகத்தில் வேலை கிடைக்கும் என்ற நோக்கத்தில் கடன் பெற்று தங்களது குழந்தைகளை படிக்க வைக்கின்றனர். ஆனால், பட்டம் பெற்றும் வேலை கிடைக்க வில்லை.
தமிழகத்தில் உள்ள இளைஞர் களுக்கு நல்ல எதிர்காலத்தை உருவாக்கித் தர தமிழக காங்கிரஸ் நடவடிக்கை எடுக்கும். தலித் மற்றும் ஒடுக்கப்பட்ட மக்கள் மீதான அடக்குமுறைகளை தடுக்கவும், அவர்கள் மீதான வழக்குகளை விரைந்து தீர்க்கவும் விரைவு நீதிமன்றங்களை அமைப்போம் என்றார் ராகுல் காந்தி.
