

மதுக்கடைகளை மூடக்கோரி போராட்டம் நடத்திய பாஜக மாநிலத்தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் உள்ளிட்ட பாஜக வினரை காவல் துறையினர் நேற்று கைது செய்தனர்.
தமிழகத்தில் பூரண மது விலக்கை அமல்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தி பாஜக சார்பில் நேற்று மாநிலம் முழுவதும் போராட்டங்கள் நடத்தப்பட்டன. இந்த போராட்டத்தில் ஏராளமான பாஜகவினர் பங்கேற்றனர். சென்னை வடபழனி சிக்னல் அருகே நேற்று காலை நடந்த போராட்டத்துக்கு கட்சியின் மாநிலத்தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தலைமை தாங்கினார். அப்போது அங்கிருந்த டாஸ்மாக் கடைக்கு பூட்டு போட தமிழிசை சவுந்தரராஜன் முயன்றார். இதையடுத்து அவரையும் அவருடன் திரண்டிருந்த 200-க்கும் அதிகமான பாஜகவினரையும் காவல் துறையினர் கைது செய்தனர்.
இந்த போராட்டத்தின்போது தமிழிசை சவுந்தராஜன் நிருபர் களிடம் கூறும்போது, “டாஸ்மாக் மதுபானக்கடைகளால் தமிழகம் சீரழிந்து வருகிறது. சிறுவர்களும், மாணவிகளும் மது அருந்துகிறார்கள். இது மிகவும் வேதனையான விஷயம். மதுவின் மூலம் தமிழ்ச்சமூகத்தை அழித்துவிட்டு ஆட்சி நடத்துவது எதற்காக? தமிழகம் முழுவதும் மதுக்கடைகள் அகற்றப்பட வேண்டும்” என்றார்.
மதுக்கடைகளை மூடக்கோரி சென்னையில் மட்டும் நேற்று 24 இடங்களில் பாஜக போராட்டம் நடத்தியது. பட்டினப்பாக்கம் சீனிவாசபுரம் பகுதியில் நடந்த போராட்டத்தின் போது பாஜக மாநில துணைத்தலைவர் வானதி னிவாசன் உள் ளிட்ட நிர்வாகிகள் கைது செய் யப்பட்டனர். மாலையில் அனை வரும் விடுவிக்கப்பட்டனர்.