Published : 08 Jul 2015 09:29 PM
Last Updated : 08 Jul 2015 09:29 PM

இட்டார்சி ரயில் நிலைய தீ விபத்து எதிரொலி: 4 விரைவு ரயில்கள் ரத்து

இட்டார்சி ரயில் நிலையத்தில் ஏற்பட்ட தீ விபத்து காரணமாக மேலும் 4 விரைவு ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

இது தொடர்பாக தெற்கு ரயில்வே வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

மத்தியப்பிரதேச மாநிலம் இட்டார்சி ரயில் நிலையத்தில் கடந்த மாதம் 17-ம் தேதி தீ விபத்து ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து தெற்கு ரயில்வே பல விரைவு ரயில்களை ரத்து செய்துள்ளது. இந்நிலையில், மேலும் 4 விரைவு ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

டேராடூனில் இருந்து மதுரைக்கு வாரம் இருமுறை இயக்கப்படும் விரைவு ரயில் (12688) வரும் 10-ம் தேதி டேராடூனில் இருந்து புறப்படுவது ரத்து செய்யப்படுகிறது. கோரக்பூரில் இருந்து திருவனந்தபுரத்துக்கு வாரம் 3 முறை இயக்கப்படும் விரைவு ரயில் (12511) வரும் 10-ம் தேதி கோரக்பூரில் இருந்து புறப்படுவது ரத்து செய்யப்படுகிறது.

திருவனந்தபுரத்தில் இருந்து கோராக்பூருக்கு வாரம் 3 முறை இயக்கப்படும் விரைவு ரயில் (12512) வரும் 14-ம் தேதி ரத்து செய்யப்படுகிறது. காயாவில் இருந்து சென்னை எழும்பூருக்கு இயக்கப்படும் வாரந்திர விரைவு ரயில் (12389) வரும் 12-ம் தேதி காயாவில் இருந்து புறப்படுவது ரத்து செய்யப்படுகிறது.

யஸ்வந்த்பூரிலிருந்து கண்ணூருக்கு இயக்கப்படும் யஸ்வந்த்பூர் விரைவு ரயில்களில் (16527/16528) 7-ம் தேதி முதல் முன்பதிவு செய்யப்பட்ட 2-ம் வகுப்பு பெட்டி ஒன்று நிரந்தரமாக சேர்க்கப்படவுள்ளது.

ரயில் எண் மாற்றம்

வாரணாசியில் இருந்து ராமேஸ்வரத்துக்கு தற்போது இயக்கப்பட்டு வரும் வாரந்திர விரைவு ரயில் (14260) நவம்பர் 1-ம் தேதி முதல் மண்டுவாடியில் இருந்து இயக்கப்படவுள்ளது. இதனால், அதன் எண் 15120 என்று மாற்றப்பட்டுள்ளது.

இந்த விரைவு ரயில் மண்டுவாடியில் இருந்து இரவு 9.15க்கு புறப்படும். அதேபோல், ராமேஸ்வரத்தில் இருந்து புறப்படும் விரைவு ரயில் (14250) வரும் நவம்பர் 4-ம் தேதி முதல் மண்டுவாடி வரை இயக்கப்படவுள்ளது. அந்த ரயிலின் எண் 15119 என்று மாற்றப்பட்டுள்ளது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.



FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x