

சிறுவன் வைத்து விளையாடிய ‘ரிமோட் கார்’ திடீரென மின்சாரம் தாக்கி வெடித்துச் சிதறியது. இதில் பலத்த காயம் அடைந்த சிறுவன், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளான்.
திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டு அடுத்த தேசூர் கிராமத்தைச் சேர்ந்தவர் பெருமாள். இவரது மகன் கிருஷ்ணன் (8). ஆரணி அடுத்த கல்பூண்டி கிராமத்தில் உள்ள தாத்தா வீட்டுக்கு கிருஷ்ணன் சென்றுள்ளான். செவ்வாய்க்கிழமை காலை கல்பூண்டி கிராமத்தில் பேட்டரி மூலம் இயங்கும் பொம்மை ‘ரிமோட் காரை’ பயன்படுத்தி விளையாடிக் கொண்டிருந்தான்.
சிறுவன் ரிமோட் காரை பயன்படுத்தி விளையாடிக்கொண் டிருந்த இடத்தில் 40 அடி உயரத்தில் உயர் அழுத்த மின்பாதை இருந்தது. அப்போது திடீரென மின்சாரம் பாய்ந்து ரிமோட் கார் வெடித்து சிதறியது. சத்தம் கேட்டு அப்பகுதியில் இருந்த பொதுமக்கள் ஓடிச்சென்று பார்த்தனர்.
அப்போது சிறுவன் கிருஷ்ணன், உடலில் பலத்த தீக்காயங்களுடன் அலறித் துடித்துக்கொண்டிருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக ஆரணி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக் காக சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த ஆரணி தாலுகா காவல் நிலைய ஆய்வாளர் ரவிகுமார் மற்றும் போலீஸார், சிறுவன் கிருஷ்ணன் விளையாடிய இடத்தினை பார்வையிட்டு ஆய்வு செய்தனர். “சிறுவன் வைத்திருந்த பொம்மை ரிமோட் கார், பேட்டரி மூலம் இயங்கக்கூடியது.
மேலே இருந்த உயர் மின் அழுத்த மின் பாதையில் இருந்து ரிமோட் கார் பேட்டரியில் மின்சாரம் தாக்கி, அது வெடித்துச் சிதறியிருக்கலாம்” என போலீஸார் கூறுகின்றனர்.