

மெட்ரோ ரயிலில் வேலை வாங்கித் தருவதாக ரூ.2 கோடி மோசடி செய்த பெண் உட்பட 5 பேர் கைது செய்யப்பட்டனர்.
சென்னை கோயம்பேட்டியில் உள்ள சென்னை மெட்ரோ ரயில் நிலைய மேலாளர் குருநாதன் வளசரவாக்கம் காவல் நிலையத்தில் கடந்த 18-ம் தேதி கொடுத்த புகாரில், "சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தில் வேலை வாங்கித் தருவதாக சிலர் பொது மக்களிடம் பணம் பெற்றுக்கொண்டு போலி நியமன ஆணைகள் வழங்கியுள்ளனர். மெட்ரோ ரயில் பெயரில் மோசடி செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று கூறியிருந்தார்.
புகாரின்பேரில் வளசரவாக்கம் காவல் ஆய்வாளர் சேட்டு மற்றும் போலீஸார் விசாரணை நடத்தியதில், சைதாப்பேட்டை சின்னமலையைச் சேர்ந்த பால்ராஜ்(54), கோவை சிங்கா நல்லூரை சேர்ந்த மகேந்திரன்(52), அவரது மனைவி ராஜாத்தி(38), நாகராஜ்(56), வத்தலகுண்டு பகுதியைச் சேர்ந்த அர்ஜுன்குமார்(36) ஆகிய 5 பேரையும் கைது செய்தனர்.
அவர்களிடம் நடத்தப்பட்ட விசா ரணையில், இந்த மோசடிக்கு பால்ராஜ் மூளையாக செயல்பட்டு இருப்பதும், மற்ற 4 பேரும் ஆட்களை பிடித்துக் கொடுக்கும் ஏஜென்ட்கள் என்பதும் தெரிந்தது. பதவிக்கு ஏற்றார்போல ரூ.5 லட்சம் முதல் ரூ.30 லட்சம் வரை பணம் வசூல் செய்துள்ளனர். மேலும், மின்சார வாரியம் மற்றும் பத்திரிகை, இணையதளங்களில் வரும் விளம்பரங்களை பார்த்தும் பலரிடம் மோசடி செய்துள்ளனர். நூற்றுக்கும் மேற்பட்டவர்களிடம் ரூ.2 கோடிக்கும் அதிகமாக மோசடி செய்திருப்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.
அவர்கள் தங்கியிருந்த ஓட்டல் அறையில் இருந்து ரூ.86 ஆயிரம் ரொக்கம், 68 வங்கி காசோலைகள் மற்றும் ஒரு சொகுசு கார் பறிமுதல் செய்யப்பட்டன.