Published : 05 Mar 2014 06:23 PM
Last Updated : 05 Mar 2014 06:23 PM

தேர்தல் 2014: தமிழகத்தில் தனித்துவிடப்படும் காங்கிரஸ்

மக்களவைத் தேர்தலையொட்டி, தமிழகத்தில் அனைத்துக் கட்சிகளுமே தங்கள் கூட்டணியை ஏறத்தாழ முடிவு செய்துவிட்ட நிலையில், காங்கிரஸ் தனித்துவிடப்படுகிறது.

திமுக கூட்டணியில் மற்ற கட்சிகளுக்கு கதவுகள் மூடப்பட்டுள்ள நிலையில், காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைப்பதற்கு முக்கிய கட்சிகள் அனைத்துமே ஆரம்பத்தில் இருந்தே தயக்கம் காட்டி வந்தன.

பாஜக கூட்டணியில் மதிமுக மட்டும் உறுதியாக இணைந்துள்ளது. தேமுதிக, பாமக கட்சிகளுடனான பேச்சுவார்த்தை தொடர்ந்து நீடிக்கிறது. எனினும், தேமுதிகவோ அல்லது பாமகவோ காங்கிரஸிடம் பேசுவதற்கே வாய்ப்பிலாத நிலை இருக்கிறது.

காங்கிரஸுடன் கூட்டணி வைத்தால், தங்களுக்கு உள்ள மக்கள் ஆதரவும் கிடைத்திடாமல் போய்விடும் என தமிழக கட்சிகள் முடிவு செய்ததால்தான் அக்கட்சிக்கு இந்த நிலை ஏற்பட்டிருக்கிறது.

காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் ஊழல் விவகாரங்கள் மட்டுமின்றி, இலங்கைத் தமிழர் பிரச்சினை, மீனவர் பிரச்சினை முதலானவற்றில் காங்கிரஸ் மீது தமிழகத்தில் கடும் அதிருப்தி நிலவுகிறது.

குறிப்பாக, ராஜீவ் கொலைக் குற்றவாளிகளை விடுதலை செய்ய தமிழக அரசு முடிவு எடுத்த நிலையில், அதற்கு எதிரான நிலைப்பாட்டுடன், உச்ச நீதிமன்றத்திலும் மேல்முறையீடு செய்தது காங்கிரஸ் மீதான வெறுப்புணர்வை மேலும் கூட்டியிருக்கிறது.

அத்துடன், தமிழக தலைவர்களின் எதிர்ப்புகளை மீறி, மியான்மர் பயணத்தில் இலங்கை அதிபர் ராஜபக்‌ஷேவை பிரதமர் மன்மோகன் சிங் சந்தித்திருப்பது மேலும் அதிருப்தியை வலுப்படுத்தியிருக்கிறது.

கடந்த 2004-ல் இருந்து தமிழகத்தில் திமுகவுடன் கூட்டணி அமைத்திருந்த காங்கிரஸ், இலங்கைத் தமிழர் பிரச்சினையில் கூட்டணியை முடிவுக்கு கொண்டுவர வேண்டிய நிலைக்கு ஆளானது.

சமீபத்தில் சென்னையில் திமுக தலைவர் கருணாநிதியை காங்கிரஸ் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத் சந்தித்துப் பேசினார். அந்தப் பேச்சுவார்த்தையிலும் திமுக தனது நிலைப்பாட்டில் இருந்து மாறவில்லை என்பது கவனிக்கத்தக்கது.

இந்தச் சூழலில், தமிழகத்தில் தனித்துவிடப்பட்டுள்ள காங்கிரஸ் மக்களவைத் தேர்தலில் தனித்துப் போட்டியிட வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x