

ஒரே பதவி ஒரே பென்ஷன் திட்டத்தை உடனடியாக அமல்படுத்த பிரதமர் மோடி நடவடிக்கை எடுத்து கொடுத்த வாக்குறுதியை காப்பாற்ற வேண்டும் என்று திமுக பொருளாளர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக இன்று ஸ்டாலின் எழுதிய ஃபேஸ்புக் பதிவில், ''ஒரே பதவி ஒரே ஓய்வூதியம் கோரிக்கையை முன் வைத்து நாடு முழுவதும் ஓய்வு பெற்ற ராணுவ வீரர்கள் போராடி வருகிறார்கள்.
பிரதமர் இது குறித்து கொடுத்த முக்கியமான வாக்குறுதியை இதுவரை நிறைவேற்ற வில்லை. சம பதவியில் சம பணி காலத்தில் ஓய்வு பெறும் ராணுவத்தினருக்கு எப்பொழுது ஓய்வு பெற்றார்கள் என்பது பற்றி கவலைப் படாமல் சம ஓய்வு ஊதியம் வழங்க இத்திட்டம் வழிவகுக்கிறது.
நியாயமான அவர்களின் இந்தக் கோரிக்கையை நான் ஆதரிக்கிறேன். எப்போது ஓய்வு பெறுகிறார்களோ அப்போது சம்பள கமிஷன் பரிந்துரைப்படியே தற்போது ஓய்வு பெற்ற ராணுவத்தினருக்கு ஓய்வு ஊதியம் வழங்கப்படுகிறது.
அவ்வப்போது ஏற்படும் பொருளாதார மற்றும் பண வீக்கம் தொடர்பான மாற்றங்களை கணக்கில் எடுத்துக் கொண்டால் இது போதாது. நாம் பாதுகாப்பாகவும் செளகரியமாகவும் வாழுகிறோம் என்றால் அதற்கு நம் ராணுவ வீரர்களின் கடின உழைப்பும் அவர்களின் தியாகமும்தான் காரணம்.
அதனால் அவர்களின் நலனுக்கு தேவையான அனைத்து வசதிகளையும் செய்து கொடுக்க வேண்டியது அரசின் பொறுப்பு ஆகும்.
ஒரே பதவி ஒரே பென்ஷன் திட்டத்தை உடனடியாக அமல்படுத்த நடவடிக்கை எடுத்து கொடுத்த வாக்குறுதியை காப்பாற்றுமாறு வலியுறுத்துகிறேன்'' என்று ஸ்டாலின் கூறியுள்ளார்.