ஒரு லட்சம் டன் நெல் மூட்டைகளை சேமித்து வைக்க பிரம்மாண்டமான கிடங்கு: வேளாங்கண்ணி அருகே பணிகள் தீவிரம்

ஒரு லட்சம் டன் நெல் மூட்டைகளை சேமித்து வைக்க பிரம்மாண்டமான கிடங்கு: வேளாங்கண்ணி அருகே பணிகள் தீவிரம்
Updated on
2 min read

தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் சார்பில் கொள்முதல் செய்யப்படும் நெல் மூட்டைகளைப் பாதுகாக்க, நாகை மாவட்டம் வேளாங்கண்ணி அருகே மிக பிரம்மாண்டமான கிடங்கு கட்டப்பட்டு வருகிறது.

தமிழ்நாட்டில் கொள்முதல் நிலையங்கள் வாயிலாக நெல் மூட்டைகள் பெறப்படுகின்றன. அவற்றை மாவட்ட அளவில் உள்ள சிறிய கிடங்குகளில் அடுக்கி வைக்க முடியாததால், திறந்தவெளி கிடங்குகளில் சேமித்து வைக்கப்படுகின்றன. இவ்வாறு சேமித்து வைக்கப்படும் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும், மிக அதிக அளவில் சேதமடைகின்றன.

இந்நிலையைப் போக்க மாவட்ட அளவில் சேமிப்புக் கிடங்குகள் அமைக்கப்படும் என்று முதல்வர் ஜெயலலிதா கடந்த 2013-ம் ஆண்டு அறிவித்தார். இதையடுத்து நாகை மாவட்டம் வேளாங்கண்ணிக்கு அருகே ரூ.144.7 கோடி மதிப்பீட் டில் பிரம்மாண்டமான கிடங்கு கட்ட நபார்டு வங்கி மூலம் நிதியுதவி பெறப்பட்டது. நாகை-வேதாரண்யம் பிரதான சாலையில் அமைந்துள்ள கோவில்பத்து கிராமத்தில், பிரம்மாண்டமான கிடங்கு கட்டும் பணி கடந்த மார்ச் மாதம் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

ஒரு லட்சம் டன் நெல் மூட்டைகளைச் சேமித்து வைக்கும் அளவுக்கு நவீன வசதிகளுடன் திட்டமிட்டு கட்டப்பட்டு வருகிறது. இந்த கிடங்கு வளாகத்தில் 16 கட்டிடங்கள் அமைக்கப்பட உள்ளன. அதில் தலா 5 ஆயிரம் டன் நெல் கொள்ளளவு கொண்டதாக 15 கட்டிடங்களும், 25,000 டன் கொள்ளளவு கொண்டதாக ஒரு கட்டிடமும் அமைய உள்ளன.

இக்கட்டிடங்கள் எந்த சூழ்நிலையிலும் தண்ணீர் தேங்கா வண்ணம் மிக மேடான இடத்தில் அமைக்கப்படுகின்றன. திருச்சி என்.ஐ.டி.யின் தொழில்நுட்ப ஆலோசனைப்படி பணி நடை பெறுகிறது. கட்டிடத்தின் உள் ளேயே லாரிகள் சென்று, கன்வேயர் பெல்ட்கள் மூலம் மூட்டை களை ஏற்றி இறக்கும் விதமாகவும், எந்த தட்பவெப்ப சூழ்நிலையும் நெல் மூட்டைகளைப் பாதிக்காத வண்ணம் இந்த கிடங்கு அமையும்.

இதுகுறித்து தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் நாகை மாவட்ட முதுநிலை மண்டல மேலாளர் ராதாகிருஷ்ணன் கூறியபோது, “நாகை மாவட்டத்தில் ஆண்டொன்றுக்கு சராசரியாக 2.5 லட்சம் டன் நெல் கொள்முதல் செய்யப்படுகிறது. அதில், 3 நவீன அரிசி ஆலைகளுக்கு 60,000 டன் அனுப்பப்படும். மீதமுள்ள நெல்லில் வெளி மாவட்ட தேவைக்கு அனுப்பியது போக எஞ்சியவை, இதுவரை திறந்தவெளி கிடங்குகளில்தான் சேமிக்கப்பட்டன. இந்த ஆண்டு சம்பா பருவத்தில் கொள்முதல் செய்யப்படும் நெல்லை இந்த புதிய கிடங்கில் பாதுகாப்பாக சேமித்து வைத்துக்கொள்ளலாம்.

மொத்தம் 69.9 ஹெக்டேர் பரப்பளவுள்ள இடம் இந்த பிரம்மாண்ட கிடங்குக்காக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. இதில் தற்போது 26 ஹெக்டேர் பரப்பளவில் மட்டுமே கட்டிடங்கள் கட்டப்படுகின்றன. எதிர்வரும் காலத்தில் இதுபோல மேலும் கிடங்குகளை இந்த இடத்தில் அமைக்கமுடியும். தற்போது இந்த இடம் முழுவதும் பாதுகாப்பான சுற்றுச்சுவர், நிர்வாக அலுவலகம், பணியாளர்களுக்கான ஓய்வறை, கழிவறைகள், வாகன நிறுத்துமிடங்கள் என்று மிகவும் நவீன வசதிகளைக் கொண்டதாக கட்டப்படுகிறது.

ஒரே இடத்தில் ஒரு லட்சம் டன் நெல் இருப்பு வைக்கக் கூடியதாக இப்பகுதியில் அமையும் முதல் கிடங்கு இதுதான்” என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in