நாட்டிலேயே முதல்முறையாக மதுரையில் திருநங்கைகளுக்கு ஆதார் அட்டை சிறப்பு முகாம்

நாட்டிலேயே முதல்முறையாக மதுரையில் திருநங்கைகளுக்கு ஆதார் அட்டை சிறப்பு முகாம்
Updated on
1 min read

நாட்டிலேயே முதல்முறையாக திருநங்கைகளுக்கு ஆதார் அட்டை வழங்க புகைப்படம் எடுப்பதற்கான சிறப்பு முகாமை மதுரையில் ஆட்சியர் இல.சுப்பிரமணியன் நேற்று தொடங்கி வைத்தார்.

மதுரையில் திருநங்கைகள் செயல்பாட்டை ஆட்சியர் இல.சுப்பிரமணியன் ஆய்வு செய்தார். இவர்களின் நலனுக்காக செயல்படும் சோஷியல் வெல்பேர் டெவலப்மென்ட் சொசைட்டி, திருநங்கைகள் நலச்சங்கம் ஆகியவை சார்பில் பல்வேறு கோரிக்கைகள் வைக்கப்பட்டன. இதை ஏற்று திருநங்கைகளுக்கு ஆதார் அடையாள அட்டைக்காக புகைப்படம் எடுக்கும் சிறப்பு முகாமை மதுரை எல்லிஸ் நகரில் நேற்று தொடங்கி வைத்து ஆட்சியர் கூறியதாவது:

திருநங்கைளுக்கு தமிழக அரசு பல்வேறு நலத்திட்டங்களை வழங்குகிறது. இவற்றை பெறுவ தற்கு ஆதார் அட்டை அவசியம். முதல்வர் ஜெயலலிதா உத்தரவின் பேரில் திருநங்கைகளுக்கு ஆதார் அட்டை வழங்குவதற்கான சிறப்பு முகாம் முதல்முறையாக மதுரையில் தொடங்கப்பட்டுள்ளது. இந்த முகாம் நாளை (6-ம் தேதி) வரை 3 நாட்கள் நடைபெறும்.

மதுரை மாநகராட்சி பகுதியில் 104 பேர், ஊரகப் பகுதியில் ஆயிரத்து 480 திருநங்கைகள் பதிவு செய்துள்ளனர். இவர்களில் 200 பேருக்கு வீட்டுமனை பட்டாக்கள் வழங்கப்பட்டுள்ளன. 30 பேருக்கு வீடு கட்டித்தரப்பட்டுள்ளது. சேமிப்பு பழக்கத்தை ஏற்படுத்துதல், குடும்ப அட்டை, நலவாரிய அட்டை, முதியோர் உதவித்தொகை உட்பட பல்வேறு திட்டப் பயன்களை பெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்கு ஆதார் அட்டை அவசியமாவதால் அதை பெற சிறப்பு முகாமை திருநங்கைகள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in