Published : 11 Jul 2015 11:49 AM
Last Updated : 11 Jul 2015 11:49 AM

சீருடை அணியவில்லை என்பதால் தனிமையில் வெளியேற்றப்பட்ட 1-ம் வகுப்பு மாணவி: தனியார் பள்ளி மீது தாயார் குற்றச்சாட்டு

சீருடை அணியாமல் வந்த 1-ம் வகுப்பு மாணவியை பெற்றோரிடம் ஒப்படைக்காமல், பள்ளியில் இருந்து தனிமையில் வெளியேற்றிவிட்டதாக திருவண்ணாமலையில் உள்ள தனியார் பள்ளி மீது மாணவியின் தாயார் குற்றம்சாட்டியுள்ளார்.

திருவண்ணாமலை நேரு நகரில் வசிப்பவர் நம்பிராஜன். இவரது 6 வயது மகள் விஹாஷினி, திருவண்ணாமலை வேங்கிக்கால் நேதாஜி நகரில் இயங்கி வரும் தனியார் பள்ளியில் 1-ம் வகுப்பு படிக்கிறார். பள்ளிக்கு நேற்று காலை சென்ற மாணவி விஹாஷினியை, சீருடை அணிந்து வராத காரணத்தால் திருப்பி அனுப்பிவிட்டதாக அவரது தாயார் பவித்ரா கூறுகிறார்.

தி.மலை மாவட்ட ஆட்சியர் அ.ஞானசேகரனை சந்தித்து முறையிட வந்த பவித்ரா கூறும்போது, “விஹாஷினியை எனது கணவர் நம்பிராஜன், பள்ளிக்கு அழைத்துச் சென்று விட்டுவிட்டு வந்தார். பின்னர் நாங்கள் இருவரும் கடைக்கு சென்றுவிட்டோம். இந்த நிலையில் எங்கள் வீட்டின் அருகே வசிப்பவர் தொடர்புகொண்டு, எனது மகள் அழுதுகொண்டு வீட்டின் முன்பு நிற்பதாக கூறினார். நாங்கள் வந்து அவளை தேற்றினோம். அப்போது அவள், சீருடை அணிந்து வராத காரணத்துக்காக பள்ளியில் இருந்து வெளியேற்றிவிட்டதாக தெரிவித்தார்.

பள்ளியில் சீருடை மாற்றப்பட்டுள்ளது. பள்ளி நிர்வாகம் தெரிவித்த டெய்லர் கடையில்தான் சீருடை தைக்க கொடுத்தோம். அதற்கான கட்டண தொகை 600 ரூபாயை பள்ளி நிர்வாகத்திடம் செலுத்திவிட்டோம். ஒரு மாதமாகியும் சீருடை தைத்து கொடுக்கவில்லை. அதுவரை பழைய சீருடையை அணிந்து வரலாம் என்று தெரிவித்தனர். அவ்வாறு என் மகளும் அணிந்து சென்றாள். பழைய சீருடை கிழிந்து போனதால், சாதாரண உடையை அணிவித்து நேற்று (நேற்று முன்தினம்) அனுப்பினேன்.

இது தொடர்பாக பள்ளி முதல்வரிடம் நேரில் சென்று விளக்கம் அளித்துள்ளேன். அவரும் எனது விளக்கத்தை ஏற்றுக்கொண்டார். அதன்படி 2-வது நாளாக சாதாரண உடையில் எனது மகள் பள்ளிக்கு சென்றாள். ஆனால், சீருடை அணிந்து வரவில்லை என்று கூறி வெளியே அனுப்பி உள்ளனர்.

சீருடை அணிந்து வரவில்லை என்றால், பெற்றோரை அழைத்து ஒப்படைத்து இருக்க வேண்டும். 6 வயது பிள்ளையை வெளியே அனுப்பி உள்ளனர். வெளியே வந்த, என் மகளுக்கு ஏதாவது அசம்பாவிதம் நடந்து இருந்தால் என்ன செய்ய முடியும். பள்ளி நிர்வாகம் பொறுப்பேற்குமா?. இதுகுறித்து அவர்களிடம் கேட்டதற்கு அலட்சியமாக பதில் கூறுகின்றனர்” என்றார். பின்னர் அவர், ஆட்சியரிடம் மனு கொடுத்தார்.

இதுகுறித்து பள்ளி நிர்வாகத்தை தொடர்புகொண்டு கேட்டபோது, “பெற்றோரிடம்தான் மாணவியை ஒப்படைத்தோம். மாணவியின் தாயார் தவறான தகவலை தெரிவிக்கிறார்” என்றனர்.

இதுகுறித்து மாவட்ட தொடக்க கல்வித் துறை அலுவலர் அன்புவை தொடர்பு கொண்டு கேட்டபோது, “இந்த பிரச்சினை குறித்து விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x