Published : 26 May 2014 01:14 PM
Last Updated : 26 May 2014 01:14 PM

சிறுவாணி குழாயை அடைக்கும் முயற்சியை தடுக்க ராமதாஸ் வலியுறுத்தல்

சிறுவாணி அணை குடிநீர் குழாயை அடைக்கும் பணிகளை தடுத்து நிறுத்தி, கோவை மாநகருக்கு கோடைக் காலத்தில் தட்டுப்பாடின்றி குடிநீர் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்: "தமிழகத்திற்கு தண்ணீர் கிடைப்பதற்கான வழிகளை தடுப்பதையே முதன்மைப் பணியாக கொண்டுள்ள கேரள அரசு, இப்போது கோவைக்கு குடிநீர் வழங்கும் சிறுவாணி அணையின் குழாயை அடைக்கும் முயற்சியில் ஈடுபட்டிருக்கிறது.

கோடைக்காலத்தில் கோவை மாநகரில் குடிநீர் தட்டுப்பாட்டை ஏற்படுத்தும் நோக்குடன் கேரளம் மேற்கொண்டுள்ள இந்த செயல் கண்டிக்கத்தக்கது.

பத்து லட்சத்திற்கும் மேற்பட்ட மக்களைக் கொண்ட கோவை மாநகருக்கு குடிநீர் வழங்கும் ஆதாரமாக சிறுவாணி அணை விளங்குகிறது. சிறுவாணி அணையில் உள்ள நான்கு வால்வுகளின் மூலம் கோவைக்கு குடிநீர் கொண்டு செல்லப்படுகிறது. சிறுவாணி அணையின் நீர்மட்டம் நான்கு வால்வுகளுக்கு கீழ் செல்லும்போது நான்காவது வால்வுக்கு அடியில் அமைக்கப்பட்டுள்ள கிணற்றிலிருந்து குழாய் மூலம் தண்ணீர் எடுக்கப்படுவது வழக்கம். இவ்வாறு தண்ணீர் எடுப்பதை தடுக்கும் நோக்குடன் இந்தக் குழாயை அடைக்க கேரள அரசு பல ஆண்டுகளாக முயற்சி செய்து வருகிறது. எனினும் தமிழகத்தின் எதிர்ப்பு காரணமாக இந்த முயற்சி முறியடிக்கப்பட்டு வந்திருக்கிறது.

ஆனால், கோடைக்காலம் தீவிரமடைந்துள்ள நிலையில், சிறுவாணி ஆற்றிலிருந்து கோவைக்கு தண்ணீர் எடுப்பதை தடுக்கும் வகையில், சிறுவாணி குடிநீர் குழாயை அடைக்கும் பணியில் கடந்த இரு நாட்களாக கேரள அரசு அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.

இந்த பணியை நிறுத்தும்படி தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் கேட்டுக் கொண்ட பிறகும், அதை மதிக்காமல் குடிநீர் குழாயை அடைக்கும் முயற்சியில் கேரளம் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. சிறுவாணி குடிநீர் குழாய் அடைக்கப் பட்டால், அடுத்த சில நாட்களில் கோவையில் கடுமையான குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் ஆபத்துள்ளது.

குழாயை அடைக்கும் முயற்சியில் கேரள அரசு வெற்றி பெற்றுவிட்டால், கோவையில் குடிநீர் பஞ்சம் தலைவிரித்தாடுவதை தடுக்க முடியாது.

எனவே, இந்த பிரச்சினையில் தமிழக அரசு விரைந்து செயல்பட வேண்டும். தேவைப்பட்டால் கேரள முதலமைச்சர் உம்மன்சாண்டியை தமிழக முதலமைச்சர் தொடர்பு கொண்டு பேசி, சிறுவாணி அணை குடிநீர் குழாயை அடைக்கும் பணிகளை தடுத்து நிறுத்தி, கோவை மாநகருக்கு கோடைக் காலத்தில் தட்டுப்பாடின்றி குடிநீர் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்துகிறேன்". இவ்வாறு ராமதாஸ் கூறியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x