

மே தின பூங்காவில் இருந்து சைதாப்பேட்டை வரையிலான மெட்ரோ ரயில் பணியை மீண்டும் கேமின் நிறுவனத்திடமே ஒப்படைப்பதா அல்லது டெண்டர் மூலம் அப்பணிக்கு புதிய நிறுவனத்தை தேர்ந்தெடுப்பதா என்பது குறித்து மெட்ரோ ரயில் நிறுவனம் இன்று மாலையில் முடிவெடுக்கிறது.
சென்னையில் வண்ணாரப் பேட்டையில்இருந்து அண்ணா சாலை வழியாக விமான நிலையத்துக்கும், மற்றொரு வழியில் சென்ட்ரல், கோயம் பேடு, ஆலந்தூர் வழியாக பரங்கிமலைக்கும் மொத்தம் 45 கி.மீ. தூரத்துக்கு மெட்ரோ ரயில் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதில் மே தின பூங்காவில் இருந்து சைதாப்பேட்டை வரையிலான மெட்ரோ ரயில் பணிகளை கேமின் நிறுவனம் மேற்கொண்டு வந்தது. ஆனால், இந்த நிறுவனம் திட்டமிட்ட காலத்துக்குள் பணிகளை முடிக்காததால் பணியில் இருந்து வெளியேறுமாறு மெட்ரோ ரயில் நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.
மெட்ரோ ரயில் பணிகளை தொடர தங்களை அனுமதிக்க வேண்டும் என்று கோரி கேமின் நிறுவனம், உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இவ்விஷயத்தில் இரு தரப்பினரும் சுமுகமாக பேசி முடிவெடுக்க வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இப்பிரச்சினை காரணமாக மே தினப் பூங்காவில் இருந்து சைதாப்பேட்டை வரையிலான மெட்ரோ ரயில் பணிகள் கடந்த 4 நாட்களாக நிறுத்தப்பட்டுள்ளன. இதனால், 2500-க்கும் மேற்பட்ட மெட்ரோ ரயில்வே தொழிலாளர்கள் வேலை யின்றி தவித்து வருகிறார்கள்.
இந்நிலையில் எஞ்சியுள்ள மெட்ரோ ரயில் பணிகளை மேற்கொள்ள டெண்டர் மூலம் புதிய நிறுவனத்தை தேர்வு செய்வதா? அல்லது கேமின் நிறுவனத்திடமே மீண்டும் பணியை ஒப்படைப்பதா என்பது குறித்து கடந்த 2 நாட்களாக மெட்ரோ ரயில் உயர் அதிகாரிகள் ஆலோசனை நடத்தி வருகின்றனர். இது தொடர்பான தங்கள் முடிவை இன்று மாலையில் மெட்ரோ ரயில் நிறுவனம் அறிவிக்கவுள்ளது.