

டாஸ்மாக் மதுபான கடையை அகற்றக் கோரி வெங்கோடு கிராம ஊராட்சித் தலைவர் மற்றும் கவுன்சிலர்கள் கூண்டோடு ராஜினாமா கடிதத்தை ஆட்சியர் ஞானசேகரனிடம் அளித்தனர்.
வந்தவாசி அடுத்துள்ள வெங்கோடு கிராமத்தில் பொதுமக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதியில் டாஸ்மாக் மதுபானக் கடை உள்ளது. இந்த கடையை அகற்ற வேண்டும் என கடந்த 2013-ம் ஆண்டு ஆகஸ்ட் 15-ம் தேதி நடந்த கிராம சபா கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றி உள்ளனர். ஆனால், இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
கடந்த 8-ம் தேதி மதுபோதையில் ஆசாமி ஒருவர் தகராறில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது. இந்த தகவலை அடுத்து வெங்கோடு கிராம ஊராட்சித் தலைவர் மங்கம்மாள் தலைமையில் பெண்கள், ஆண்கள் மற்றும் பள்ளி மாணவர்கள் என 100-க்கும் மேற்பட்டவர்கள் மதுபான கடை முன்பாக போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், கடைக்கு பூட்டு போடவும் முயன்றனர்.
இதுதொடர்பாக, மாவட்ட டாஸ்மாக் மேலாளர் புஷ்பலதா, டிஎஸ்பி மகேந்திரன், வட்டாட்சியர் கோபால்சாமி ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, ஜூலை 20-ம் தேதிக்குள் டாஸ்மாக் மதுபான கடை இடமாற்றம் செய்யப்படும் என முடிவு செய்தனர். இதை ஏற்று பொதுமக்கள் கலைந்துசென்றனர்.
மேலும், போராட்டத்தில் ஈடுபட்ட ஊராட்சித் தலைவர் உள்ளிட்ட பொதுமக்கள் மீது கீழ்கொடுங்காலூர் போலீஸார் வழக்கு பதிவு செய்தனர். அதிகாரிகள் கூறியபடி, 20-ம் தேதி கடையை அகற்றவில்லை. இதனைக் கண்டித்து கடந்த 21-ம் தேதி மதுபான கடை முற்றுகைப் போராட்டம் நடக்கும் என்ற தகவல் போலீஸாருக்கு கிடைத்தது. இதனால், பலத்த போலீஸ் பாதுகாப்புடன் மதுபான கடை திறக்கப்பட்டது.
கூண்டோடு ராஜினாமா கடிதம்:
இதற்கிடையில், கிராம ஊராட்சி தலைவர், துணை தலைவர் மற்றும் உறுப்பினர்கள் அனைவரும் கூண்டோடு ராஜினாமா செய்வது எனவும், வாக்காளர் அடையாள அட்டை மற்றும் குடும்ப அட்டையை ஒப்படைக்கவும் முடிவு செய்தனர்.
அதன்படி, தலைவர் உள்ளிட்ட உறுப்பினர்கள் தங்களது ராஜினாமா கடிதத்தை நேற்று மாவட்ட ஆட்சியர் ஞானசேகரனை சந்தித்து அளித்தனர். அப்போது, அவர்களை சமாதானப்படுத்த நடந்த பேச்சுவார்த்தை தோல்வியடைந்தது. இதன்பின்னர் கவுன்சிலர்களும் பொதுமக்களும் ஆட்சியர் அலுவலக வளாகத்தில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.