சென்னையில் பல்வேறு இடங்களில் கலாமுக்கு அஞ்சலி

சென்னையில் பல்வேறு இடங்களில் கலாமுக்கு அஞ்சலி
Updated on
2 min read

சென்னையில் பல்வேறு இடங்களில் முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமுக்கு பல்லாயிரக்கணக்கான பொதுமக்களும், மாணவர்களும் கண்ணீர் அஞ்சலி செலுத்தினர்.

சென்ட்ரல் புறநகர் ரயில் நிலையத்தில் வைக்கப்பட்டுள்ள அப்துல் கலாம் உருவப்படத்துக்கு நேற்று மாலை வரை சுமார் 4 லட்சம் பேர் அஞ்சலி செலுத்தினர்.

சென்ட்ரலில்..

சென்னை சென்ட்ரல் புறநகர் ரயில் நிலையத்தில் முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில், அவரது உருவப்படத்தை ரயில்வே பாதுகாப்பு படையினர் மலர்களால் அலங்கரித்து வைத் துள்ளனர். முதியோர், ரயில் பயணிகள், ரயில்வே ஊழியர்கள், மாணவ, மாணவிகள் என பல்வேறு தரப்பினரும் மெழுகுவர்த்தி ஏற்றியும், மலர் தூவியும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். ரயிலில் இருந்து இறங்கி வருபவர்கள், ரயில் ஏற வருபவர்கள் என கூட்டம் கூட்டமாக வந்து அஞ்சலி செலுத்துகின்றனர்.

இது தொடர்பாக ரயில்வே பாதுகாப்புப் படை ஆய்வாளர் என்.அழகர்சாமி கூறும்போது, ‘‘அப்துல் கலாமுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் சென்ட்ரல் புறநகர் ரயில் நிலையத்தில் நேற்று முன்தினம் ஏற்பாடு செய்தோம். ரயில் பயணிகள், பொதுமக்கள் சோகத்துடன் வந்து மெழுகுவர்த்தி ஏந்தியும், மலர் தூவியும் மரியாதை செய்து வருகின்றனர். இதுவரை சுமார் 4 லட்சத்துக்கும் மேற்பட்டோர் அஞ்சலி செலுத்தியுள்ளனர். கலாமின் இறுதிச் சடங்குகள் முடியும் வரை இங்கு அஞ்சலி செலுத்தலாம். ரயில்வே துறையில் நவீன பாதுகாப்பு பணிகளை மேம்படுத்த அவர் அறிவுறுத்தினார். அதற்கான பணிகளை ரயில்வே பாதுகாப்பு படை ஆற்றி வருகிறது’’ என்றார்.

அரசு ஊழியர்கள் அஞ்சலி

அப்துல் கலாம் மறைவை ஒட்டி சென்னையில் மத்திய ரிசர்வ் வங்கி மற்றும் மண்டல பாஸ்போர்ட் அலுவலகங்களில் ஊழியர்கள் அஞ்சலி செலுத்தினர்.

குடியரசு முன்னாள் தலைவர் அப்துல்கலாம் மறைவை ஒட்டி சென்னையில் உள்ள மத்திய அரசு அலுவலகங்களில் நேற்று அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. சென்னை அண்ணா சாலையில் உள்ள மண்டல பாஸ்போர்ட் அலுவலகத்தில், மண்டல பாஸ்போர்ட் அதிகாரி கே.பாலமுருகன் தலைமையில் ஊழியர்கள் உறுதிமொழி ஏற்ற னர். அப்போது, அப்துல் கலாமின் கனவை நிறைவேற்ற அனைவரும் பாடுபடுவோம் என ஊழியர்கள் உறுதியேற்றனர். பின்னர், 2 நிமிட மவுன அஞ்சலியும் செலுத்தப் பட்டது.

இதேபோல், மத்திய ரிசர்வ் வங்கி அலுவலகத்திலும் அஞ்சலி நிகழ்ச்சி நடைபெற்றது. பூக்களால் அலங்கரிக்கப்பட்ட அவரது திருவுருவப் படத்துக்கு ரிசர்வ் வங்கியின் தலைமை பொதுமேலாளர் வி.வசந்தன் மலர் தூவி மரியாதை செலுத்தினார். இதேபோல், ஊழியர்களும் மலர் தூவி மரியாதை செலுத்தினர். மேலும், ஊழியர்கள் 2 நிமிட நேரம் மவுன அஞ்சலி செலுத்தினர்.

அமைதி பேரணி

குடியரசு முன்னாள் தலைவர் அப்துல் கலாம் மறைவுக்கு சென்னையில் நல்லோர் வட்டம் சார்பில் அமைதி பேரணி நேற்றுமுன்தினம் நடத்தப்பட்டது.

கோடம்பாக்கம் பெரியார் சிலை அருகே தொடங்கி வள்ளுவர் கோட்டம் வரை இந்த பேரணி நடைபெற்றது. இந்த பேரணியில் பல குடியிருப்போர் நல சங்கங்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

‘நல்லோர் வட்டம்’ என்ற அமைப்பு அப்துல் கலாமின் ‘இந்தியா 2020’ என்ற நூலின் கருத் துகளை பரப்பும் பணியிலும், அதே போன்ற தனித்தனி திட்டங்களை நகரங்களுக்கு உருவாக்குவதன் அவசியத்தை கூறுவதிலும் கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக ஈடுபட்டு வருகிறது. ‘கோடம்பாக்கம் 2020’ ‘நுங்கம்பாக்கம் 2020’ உள் ளிட்ட திட்டங்களை வகுத்துள்ள தாக நல்லோர் வட்டத்தின் ஒருங்கிணைப்பாளர் பாலசுப்ரமணி யன் கூறினார்.

பேரணியின் முடிவில் வள்ளுவர் கோட்டத்தில் அப்துல் கலாமுக்கு அஞ்சலி கூட்டம் நடத்தப்பட்டது.

காசிமேடு மீனவர்கள் அஞ்சலி

காசிமேடு மீன்பிடி துறை முகத்தில் முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமின் உருவப் படத்துக்கு மீனவர்கள் நேற்று மலர்தூவி அஞ்சலி செலுத்தினர்.

சென்னை- செங்கை சிங்கார வேலர் விசைப்படகு உரிமையாளர் சங்கத் தலைவர் ஜி.அரசு, செய லர் எம்.விஜேஷ், துணைத் தலைவர் ஏ.வீரப்பன், இணை செயலர் ஜெ.ராஜசேகர், துணை செயலர் வி.பார்த்திபன் உள் ளிட்ட பலர் இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர். அப்துல் கலாமின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து ஒரு நாள் கடலுக்கு செல்லாமல் படகுகளை நிறுத்த வும் மீனவர்கள் முடிவெடுத்துள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in