

மதுரை அழகர்கோவிலில் உள்ள சுந்தரராஜப் பெருமாள் கோயில் புதிய தேர் வெள்ளோட்டம் நேற்று நடைபெற்றது. தேர் நிலைக்குத் திரும்ப 4 மணி நேரம் ஆனது.
மதுரை மாவட்டம், அழகர் கோவில் ஆடித் தேரோட்டம் பிரசித்தி பெற்றது. இத்தேரோட்டம் வரும் 31-ம் தேதி நடைபெற உள்ளது. இக்கோயிலுக்கு 300 ஆண்டுகளுக்கும் மேலான பழமையான தேர் உள்ளது.எனவே பக்தர்கள் நன்கொடை மூலம் ஒரு கோடி ரூபாய் மதிப்பில் புதிய தேரை வடிவமைக்கும் பணி 2 ஆண்டுகளாக நடைபெற்றது.
தேர் தயாரிப்பு முழுமை பெற்றதால் வெள்ளோட்ட விழா அழகர்கோவிலில் நேற்று காலை நடைபெற்றது. இதற்காக அதிகாலை முதல் சிறப்புப் பரிகார பூஜைகள் நடைபெற்றன.
சுந்தரராஜப் பெருமாளிடம் அனுமதி கேட்கும் வழிமுறை களுக்குப்பின், புனித தீர்த்தம் தெளிக்கப்பட்டு தீபாராதனை நடைபெற்றது. புதிய தேரில் சுவாமி எழுந்தருளும் இடத்தில் கல்கண்டு நிரம்பிய கும்பகலசம் வைக்கப்பட்டது. காலை 9.50 மணிக்கு மேளதாளம் முழங்க தீவட்டி பரிவாரங்களுடன், கோயில் யானை சுந்தரவள்ளி முன்னே செல்ல திருத்தேர் வடம்பிடித்து இழுக்கப்பட்டது.
அலங்கரிக்கப்பட்ட வண்ண தோரண மாலைகளும், அலங் கார பல வண்ண தொங்கு தோரண திரை சீலைகள் தேரின் நான்கு திசைகளிலும் தொங்க விடப்பட்டிருந்தன.
தேரில் இணைக்கப்பட்டிருந்த புதிய வடங்களை பக்தர்கள், பள்ளி மாணவ, மாணவியர், காவல் துறையினர், கோயில் பணியாளர்கள் கோவிந்தா, கோவிந்தா என்ற கோஷங்கள் முழங்க இழுத்தனர்.
சிறிது நேரத்தில் மரக்கிளையில் தேர் தட்டியதால் தேரின் இடது பக்கம் இருந்த இரும்பு சக்கரங்கள் தடம்மாறி விலகியது. தேரை மீண்டும் சரியான பாதைக்கு திருப்புவதில் தாமதம் ஏற்பட்டது. இரண்டு ஜேசிபி இயந்திரங்கள் மூலம் தேர் இழுத்து சரி செய்யப்பட்டது. நான்கு மணி நேரங்களுக்குப் பிறகு தேர் பிற்பகல் 1.50 மணிக்கு நிலையை வந்தடைந்தது.
வழக்கமாக ஒரு மணி நேரத்தில் தேர் நிலையை வந்தடையும். புதிய தேர், 22 அடி உயரம், 65 டன் எடை, தேரை வடம் பிடித்து இழுக்கும் பக்தர்கள் கூட்டம் குறைவு உட்பட பல்வேறு காரணங்களால் தேர் நிலைக்கு வருவதில் தாமதம் ஏற்பட்டது.
கோயில் தக்கார் வெங்கடாசலம், அமைச்சர் செல்லூர் கே.ராஜு, மதுரை மேயர் ராஜன்செல்லப்பா, சட்டப்பேரவை உறுப்பினர்கள் சாமி, தமிழரசன், கோயில் நிர்வாக அதிகாரி (பொறுப்பு) செல்லத்துரை உட்பட பலர் பங்கேற்றனர்.