

கவுரவக் கொலைகளை தடுக்க சட்டம் இயற்ற வேண்டும் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார்.
மதுரை மாவட்டம், மேலூர் அருகே உள்ள மேலவளவு கிராமத்தில் 1997-ம் ஆண்டு நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த முருகேசன் என்பவர் ஊராட்சித் தலைவராக தேர்வு செய்யப்பட்டார். பின்னர் அதே ஆண்டு ஜுன் மாதம் 30-ம் தேதி அவரை சிலர் வழிமறித்து தாக்கினர். இதில் முருகேசன், துணைத் தலைவர் மூக்கன் உட்பட 7 பேர் உயிரிழந்தனர்.
இவர்களது நினைவாக விடுதலைக்களம் என்ற பெயரில் மேலவளவு கிராமத்தில் நினைவிடம் எழுப்பி ஆண்டுதோறும் அஞ்சலி செலுத்தப்பட்டு வருகிறது. இதன்படி 18-வது ஆண்டு நினைவு தினம் நேற்று அனுசரிக்கப்பட்டது. இந்த நினைவிடத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் அஞ்சலி செலுத்தினார்.
பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
தமிழ்நாட்டில் சட்டம், ஒழுங்கு சீர்குலைந்துள்ளது. தலித், சிறுபான்மையின மக்கள் மீது காவல் துறை மற்றும் ஜாதி வெறியர்கள் ஒடுக்குமுறை நிகழ்த்தி வருகின்றனர்.
தமிழகத்தில் கவுரவக் கொலைகள் அதிகரித்துள்ளன. இதை தடுக்காவிட்டால் நாட்டில் உள்நாட்டுப் போர் ஏற்படும் சூழல் உருவாகும். எனவே கவுரவக் கொலைகளை தடுக்க மத்திய, மாநில அரசுகள் புதிய சட்டம் இயற்ற வேண்டும். சென்னை ஆர்.கே நகர் இடைத்தேர்தல் என்பது மக்கள் மீது செயற்கையாக திணிக்கப்பட்ட தேர்தல். இதில் ஆளும் கட்சி வெற்றி பெறும் என்பது தெரிந்ததே.
பெண்கள் பர்தா அணிந்து கல்லூரிக்கு வர தடை விதிக்க வேண்டும் என்ற பாஜக துணைத் தலைவர் எச்.ராஜாவின் கருத்து கண்டிக்கத்தக்கது என்றார்.