

அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை உள்பட பல்வேறு முக்கிய விஷயங்கள் குறித்து கல்வி அதிகாரிகளுடன் பள்ளிக் கல்வி இயக்குநர் எஸ்.கண்ணப் பன் சென்னையில் நாளை (புதன் கிழமை) முக்கிய ஆலோசனை நடத்துகிறார்.
அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகள் மற்றும் மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கான ஆய்வுக்கூட்டம் சென்னை டிபிஐ வளாகத்தில் உள்ள தமிழ்நாடு பாடநூல் கழக கூட்ட அரங்கில் நாளை (புதன்கிழமை) காலை 9.30 மணியளவில் நடைபெறுகிறது.
நடப்பு கல்வி ஆண்டில் (2015-16) அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 6, 9, 11-ம் வகுப்புகளில் புதிதாக சேர்ந்த மாணவர்களின் எண்ணிக்கை, இதில், கடந்த ஆண்டுக்கும் இந்த ஆண்டுக்கும் உள்ள வேறுபாடு, நடப்பு கல்வி ஆண்டில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஒன்று முதல் பிளஸ் 2 வரை படிக்கும் மாணவ, மாணவிகளின் எண்ணிக்கை, இலவசப் பாடப்புத்தகம், சீருடைகள், நோட்டுகள், பயண அட்டை உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளின் நிலவரம், எஸ்எஸ்எல்சி, பிளஸ் 2 பொதுத் தேர்வுகளில் தேர்ச்சி விவரம், மாணவர்களுக்கு சிறப்பு பயிற்சி, பாடவாரியாக ஆசிரியர் காலிப் பணியிடங்கள் என 59 அம்சங்கள் குறித்து கூட்டத்தில் விரிவாக விவாதிக்கப்பட உள்ளது.