

தஞ்சாவூர் மாவட்டத்தில் கும்பகோணம் அருகே உள்ள உப்பிலியப்பன் கோயிலில் பூரண கும்ப மரியாதை அளிக்காததால், பெருமாளை தரிசனம் செய்யாமல் வானமாமலை மடத்தின் ஜீயர் வெளியேறினார்.
திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரியில் உள்ள பழமையான வானமாமலை மடத்தின் 31-வது ஜீயராக ராமானுஜ சுவாமிகள் உள்ளார். கும்பகோணம் நாதன்கோவில் கிராமத்தில் உள்ள ஜெகநாதப் பெருமாள் கோயில் மற்றும் நிலங்கள் இந்த மடத்தின் கட்டுப்பாட்டில் உள்ளன.
வானமாமலை மடத்தின் ஜீயர் சோழநாட்டு திவ்யதேச யாத்திரை செல்வதாக, நாதன்கோவில் வானமாமலை மடத்தின் சார்பில் சோழநாட்டு திவ்ய தேச கோயில்களுக்கு முறைப்படி கடிதங்கள், தொலைபேசி மூலம் தகவல் தெரிவிக்கப்பட்டதாம்.
ஜீயர், சோழநாட்டு திவ்ய தேச கோயில்களுக்கு செல்லும்போது அந்தந்த கோயில் சார்பில் பூரண கும்ப மரியாதை, ஸ்ரீசடாரி வைத்து, பெருமாள் சன்னதிக்கு ஜீயரை அந்தந்த கோயில் பட்டாச்சாரியர்கள் அழைத்து சென்று தரிசனம் பெற வைத்து, அவரிடம் அருளாசியும் பெறுவர்.
அதன்படி, கடந்த 10-ம் தேதி கும்பகோணம் வந்த வானமாமலை மடத்தின் ஜீயர், நாகை மாவட்டம் சவுந்தரராஜப் பெருமாள் கோயில், திருக்கண்ணங்குடி தாமோதர பெருமாள் கோயில் உள்ளிட்ட கோயில்களில் கடந்த 2 நாட்களாக தரிசனம் செய்தார்.
பின்னர், நேற்று முன்தினம் இரவு திருநாகேஸ்வரத்தில் உள்ள உப்பிலியப்பன் கோயிலுக்கு வந்தார். அங்கு கோயில் கொடி மரம் அருகே ஜீயர் நின்று கொண்டிருந்தார்.
ஜீயர் வந்துள்ள தகவல் அறிந்து அங்கு வந்த கோயில் உதவியாளர்கள், பட்டாச்சாரியர்கள் இந்த கோயிலில் ஜீயருக்கு பூரண கும்ப மரியாதை கொடுக்கும் வழக்கம் இல்லை எனத் தெரிவித்தனராம். ஏற்கெனவே, இங்கு பலமுறை ஜீயருக்கு பூரண கும்ப மரியாதை உள்ளிட்டவை வழங்கப்பட்டதை ஜீயருடன் வந்தவர்கள் எடுத்துக் கூறியும், கோயில் பட்டாச்சாரியர்கள் ஏற்கவில்லை.
இதையடுத்து, உப்பிலியப்பன் கோயில் வெங்கடாசலபதி பெருமாளுக்கு கொண்டுவந்த பெரியமாலை, வஸ்திரம், பழங்கள் ஆகியவற்றை அங்கிருந்த யானையிடம் வழங்கிவிட்டு, கொடிமரம் அருகே நின்று பெருமாளை வணங்கிவிட்டு, ஜீயரும் உடன் வந்தவர்களும் வெளியேறினர். இதனால், அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
முன்னதாக, வாக்குவாதம் நடைபெற்றபோது, சில பட்டாச்சாரியர்கள் மூலவர் வெங்கடாசலபதியை திரையிட்டு மறைத்துள்ளனர்.
இதுகுறித்து உப்பிலியப்பன் கோயில் உதவி ஆணையர் மாரியப்பன் கூறும்போது, “வானமாமலை மடத்திலிருந்து எந்த கடிதமும் வரவில்லை. இந்த கோயிலுக்கு என்று உள்ள சில சம்பிரதாயங்களை மீற முடியாது. நான் சாரங்கபாணி கோயில் குடமுழுக்கு பணியில் இருப்பதால், உப்பிலியப்பன் கோயிலில் என்ன நடந்தது எனத் தெரியவில்லை. இதுகுறித்து, அங்கு சென்று விசாரிக்க உள்ளேன்” என்றார்.
‘வருகை குறித்து நேரில் தெரிவித்தோம்’
இதுகுறித்து நாதன்கோவில் வானமாமலை கிளை மடத்தின் நிர்வாகி எஸ்.ரமேஷ் ராமானுஜதாசன் தெரிவித்ததாவது:
மடத்திலிருந்து ஜீயர் வருகை குறித்து உப்பிலியப்பன் கோயிலுக்கு தொடர்ந்து தகவல் தெரிவித்ததோடு, முதல் நாள் நானே நேரில் சென்று தெரிவித்தேன். அவர்களும் அதற்கு தயாராக இருப்பதாக தெரிவித்தனர்.
ஆனால், கோயிலுக்கு வந்த ஜீயரை, நீண்ட நேரம் வாசலிலேயே நிற்க வைத்து, பின்னர் வரவேற்றனர். அப்போது ஜீயரின் சீடர்கள், சடாரி மரியாதை செய்ய வேண்டும் என்றனர். ஆனால் பட்டாச்சாரியர்கள், அதுபோன்ற வழக்கம் இல்லை என்றனர். விக்டோரியா மகாராணி காலத்திலிருந்தே சிருங்கேரி, வானமாமலை, அஹோபில மடங்களின் ஜீயர்களுக்கு கும்ப, சடாரி மரியாதை தர வேண்டும் என்ற உத்தரவும், வழக்கமும் உள்ளது என்று எடுத்து சொன்னபோது, அதுபற்றி எங்களுக்குத் தெரியாது, அதற்கான எழுத்துப்பூர்வமான உத்தரவு இருந்தால் காட்டுங்கள் என்று மறுத்துவிட்டனர். இதனால், ஜீயர் வெளியேறினார். வேண்டும் என்றே அவமதித்துவிட்டனர் என்றார்.