Published : 04 Jul 2015 08:51 AM
Last Updated : 04 Jul 2015 08:51 AM

காவல் நிலையத்தை உறவினர்கள் முற்றுகை: ஆம்பூர் கலவரத்தில் மேலும் 17 பேர் கைது

ஆம்பூர் கலவரம் தொடர்பாக போலீஸார் நேற்று ஒரே நாளில் 17 பேரை கைது செய்தனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கைது செய்யப்பட்டவர்களின் உறவினர்கள் காவல் நிலையத்தை முற்றுகையிட்டு போலீஸாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

பவித்ரா என்ற பெண் காணாமல் போன வழக்கில் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட ஆம்பூர் இளைஞர் ஷமீல்அஹ்மது உயிரிழந்ததைத் தொடர்ந்து ஜூன் 27-ம் தேதி ஆம்பூரில் பயங்கர வன்முறை ஏற்பட்டது.

இந்நிலையில், ஆம்பூர் ரெட்டி தோப்பு, பெத்லககேம் பகுதியைச் சேர்ந்த 20 பேரை கலவரத்தில் தொடர்புள்ளவர்களாக கருதிய போலீஸார் அவர்களை விசாரணைக்காக ஆம்பூர் டவுன் காவல் நிலையத்துக்கு நேற்று அழைத்து வந்தனர். அவர்களிடம் வேலூர் எஸ்பி செந்தில்குமாரி, டிஎஸ்பி கணேசன் ஆகியோர் விசாரணை நடத்தினர். அவர்களில் கலவரத்தில் தொடர்புடையவர் களாக கருதி 17 பேரை கைது செய்து வேனில் ஏற்றினர்.

இதையறிந்த அவர்களது உறவினர்கள், காவல் நிலையத்தை முற்றுகையிட்டனர். அவர்களிடம் ஆம்பூர் டிஎஸ்பி கணேசன் பேச்சு வார்த்தை நடத்தினார். அப்போது, விசாரணை என்ற பெயரில் கலவரத்தில் தொடர்பில்லாதவர் களை போலீஸார் கைது செய்வ தாகக் கூறி கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து அவர் களை போலீஸார் சமாதானப் படுத்தினர். ஆம்பூர் கலவரம் தொடர்பாக இதுவரை 135 பேரை போலீஸார் கைது செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

ஆய்வாளருக்கு சம்மன்

ஆம்பூர் இளைஞர் தாக்கப்பட்ட வழக்கில் 3 நாட்களுக்குள் நேரில் ஆஜராகி பதில் அளிக்க வேண்டும் என பள்ளிக்கொண்டா காவல் ஆய் வாளராக இருந்த மார்ட்டீன் பிரேம் ராஜுவுக்கு சிபிசிஐடி போலீஸார் சம்மன் அனுப்பியுள்ளனர். காவல் உதவி ஆய்வாளர் சபாரத்தினத்திடமும் விசாரணை நடத்தப்படும் என சிபிசிஐடி போலீஸார் தெரிவித்துள்ளனர்.

ஆம்பூர் கலவரம் தொடர்பாக நேரில் விசாரணை நடத்த மார்க்ஸ் தலைமையிலான தேசிய மனித உரிமை கூட்டமைப்பு குழுவினர் நேற்று வேலூர் வந்தனர். இக் குழுவினர் பள்ளிகொண்டா, ஆம்பூர் பகுதிகளில் விசாரணை நடத்தினர். அதன்பின்னர், வேலூரில் செய்தியாளர்களிடம் மார்க்ஸ் பேசும்போது, ‘‘ஆம்பூர் கலவரம் தொடர்பாக இதுவரை நூற்றுக்கும் மேற்பட்டவர்களை போலீஸார் கைது செய்துள்ளனர். இதில் 50 சதவீதம் பேர் அப்பாவிகள். உண்மையானவர்களை மட்டும் போலீஸார் கைது செய்ய வேண்டும் என எஸ்பி செந்தில்குமாரியிடம் கூறியுள்ளோம். கலவரத்தில் தாக்கப்பட்ட போலீஸார் மற்றும் பொதுமக்களை விரைவில் சந்தித்து அவர்களது கருத்துகளையும் கேட்க உள்ளோம்’’ என்றார்.

மனைவியை ஆஜர்படுத்த கணவர் மனு

சென்னை

ஆம்பூர் கலவரத்துக்கு காரணமானவராகக் கருதப்படும் பவித்ரா என்ற பெண்ணின் கணவர் பழனி, உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு: எனது மனைவி பவித்ராவின் நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டதால் அவரை வேலைக்கு அனுப்பவில்லை.

இந்நிலையில் கடந்த மாதம் 24-ம் தேதி அவர் திடீரென காணாமல் போய்விட்டார். எனது மனைவியும் ஆள் கடத்தல் கும்பலிடம் சிக்கியிருக்கக்கூடும். இதுகுறித்து பள்ளிகொண்டா போலீஸில் புகார் கொடுத்தேன். ஆனால் அவர்கள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே, எனது மனைவியைக் கண்டுபிடித்து நீதிமன்றத்தில் ஒப்படைக்க உத்தரவிட வேண்டும் என மனுவில் தெரிவித்துள்ளார். இந்த மனு உயர் நீதிமன்ற நீதிபதிகள் எஸ்.தமிழ்வாணன், சி.டி.செல்வம் ஆகியோர் கொண்ட அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது இவ்வழக்கை இரு வாரங்களுக்கு தள்ளிவைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x