

காவிரிப்படுகையில் எல்லை குறிப்பிடாமல் மணல் அள்ள அனுமதியளித்த மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அதிகாரிகளுக்கு பசுமைத் தீர்ப்பாயம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
திருச்சி மாவட்டம், முசிறியைச் சேர்ந்த வழக்கறிஞர் எம்.ராஜேந்திரன். இவர் தென் மண்டல பசுமை தீர்ப்பாயத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அம்மனுவில், “காவிரி ஆறு செல்லும் கட்டளை படுகை பகுதியில் மணல் அள்ள தமிழக பொதுப்பணித்துறை, மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறையிடம் அனுமதி கேட்டுள்ளது.
இதற்கு கடந்த மே 14-ம் தேதி சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அனுமதி அளித்துள்ளது. பொதுப்பணித்துறை மணல் அள்ளுவதாக குறிப்பிட்டுள்ள பகுதியில் திருச்சி மாவட்டத்தின் சேலைபிள்ளை புதூர், ஸ்ரீராமசமுத்திரம் பகுதிகளும் கரூர் மாவட்டத்தின் ரங்கநாதபுரம், கட்டளை, மாயனூர் பகுதிகளும் வருகின்றன.
ஆனால், அனுமதி கோரிய மனுவில் எந்த இடத்தில் மணல் அள்ளப்படுகிறது என்பதற்கான தெளிவான எல்லைகள் குறிப்பிடப்படவில்லை. இதில் ஒரு பகுதியில் மணல் அள்ளப்பட்டால் மற்ற பகுதிகளில் நீரோட்டம் பாதிக்கப்படும். எனவே மணல் எடுக்கப்படும் இடத்தை தெளிவாக குறிப்பிடாத இந்த அனுமதியை ரத்து செய்ய வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.
பசுமைத் தீர்ப்பாய உறுப்பினர்கள் எம்.சொக்கலிங்கம், எம்.எஸ்.ராவ் முன்னிலையில் இம்மனு விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கு விசாரணை ஆகஸ்ட் 25-ம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டது. மேலும், மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை செயலர், சுற்றுச்சூழல்துறை இயக்குநர் மற்றும் தமிழக பொதுப்பணித்துறை பதிலளிக்கும்படி உத்தரவிடப்பட்டது.