அழகிரி விளைவு’தான் திமுக வேட்பாளர்களைத் தோற்கடித்ததா?: 10 தொகுதிகளின் முடிவுகள் ஒரு அலசல்

அழகிரி விளைவு’தான் திமுக வேட்பாளர்களைத் தோற்கடித்ததா?: 10 தொகுதிகளின் முடிவுகள் ஒரு அலசல்
Updated on
2 min read

மக்களவைத் தேர்தலில் நேரடியாக பங்கெடுக்காத மு.க. அழகிரி, உள்ளடி வேலை பார்க்குமாறு தன் ஆதரவாளர்களுக்கு வெளிப் படையாகவே உத்தரவிட்டார்.

மதுரை, தேனி, சிவகங்கை, விருதுநகர், தென்காசி, திருநெல் வேலி, கன்னியாகுமரி போன்ற தொகுதிகளில் காது குத்து, திருமணம், துக்க நிகழ்ச்சிகளில் பங்கேற்றவர், அந்தந்தத் தொகுதி திமுக வேட்பாளர்களின் பெயர்களைச் சொல்லி, அவர்களை 4-வது இடத்துக்குத் தள்ள வேண்டும் என்று வலியுறுத்தினார்.

அதன்படி சிலர் நடக்கவும் செய்தார்கள். தென்மாவட்டத்தில் உள்ள 10 தொகுதிகளிலும் திமுக அணி தோற்றது. திமுகவின் இந்த தோல்விக்கு மு.க. அழகிரி உரிமை கொண்டாட முடியுமா? தொகுதி வாரியான அலசல்.

மதுரை

அழகிரி ஆதரவாளர்கள் பாஜக அணிக்குத் தீவிரமாக வேலை பார்த்த தொகுதி என்றால் மதுரைதான். திமுக வேட்டி கட்டிக் கொண்டு துணிச்சலாக முரசுக்கு ஓட்டு கேட்டார்கள். இந்தப் பிரச்சினையில் திமுக முன்னாள் பகுதிச் செயலர் கோபிநாதன், ஸ்டாலின் ஆதரவாளர்களால் கடுமையாகத் தாக்கப்பட்டார். ஆனாலும், வாக்குப்பதிவு நாளன்று வாக்குச்சாவடிக்கு 100 மீட்டர் தொலைவில் நின்று கொண்டு, ஓட்டு கேட்டார்கள் அழகிரி ஆட்கள்.

முடிவில் திமுக 2-வது இடத்தைப் பிடித்தது. அழகிரியின் ஆதரவு பெற்ற வேட்பாளர் சிவமுத்துக்குமாரோ டெபாசிட் இழந்தார்.

தேனி

அழகிரியால் மிகக் கடுமையாக விமர்சிக்கப்பட்டவர் தேனி வேட்பாளர் பொன். முத்துராமலிங்கம்தான். ஆனால், தேர்தல் நேரத்தில் அவருக்கு எதிராக யாரும் வேலை பார்க்கவில்லை. அப்படி வேலை பார்ப்பார்கள் என்று எதிர்பார்க்கப்பட்ட 13 பேரை முன்கூட்டியே திமுகவில் இருந்து நீக்கிவிட்டார்கள். கடைசியில், 2-வது இடத்தைப் பிடித்தார் பொன். முத்து. ஆனால், அவருக்கும் அதிமுக வேட்பாளருக்குமான வாக்கு வித்தியாசமோ 3 லட்சத்துக்கும் மேல். அழகிரியின் ஆதரவு பெற்ற அழகுசுந்தரம் (மதிமுக) 3-வது இடத்தையே பிடித்தார்.

திண்டுக்கல்

இங்கே அழகிரிக்கு பெயர் சொல்லும் அளவுக்கு ஆதரவாளர்கள் யாரும் இல்லை. பகுஜன் சமாஜ் கட்சி நிர்வாகியும், பசுபதி பாண்டியன் கொலை வழக்கில் தொடர்புடையவருமான முத்துப்பாண்டி 4 ஆயிரம் பேருடன் அழகிரி அணியில் சேர்ந்தார். தேர்தல் நேரத்தில் அவரை வைத்து, வேலை பார்க்கலாம் என்று அழகிரி நினைத்திருக்க, முத்துப்பாண்டியோ கொலை செய்யப்பட்டார். ஆக, திமுக எளிதாக 2-வது இடத்தைப் பிடித்தது.

விருதுநகர்

விருதுநகர் தொகுதியில் அழகிரி ஆதரவாளர்கள் ரொம்பக் குறைவு. அவரது விசுவாசியான தங்கம் தென்னரசு ரொம்ப காலத்துக்கு முன்பே ஸ்டாலின் அணிக்கு வந்துவிட்டார். சாத்தூர் ராமச்சந்திரனுக்கு எதிர் கோஷ்டியாக சிலர் இருந்தாலும், அவர்கள் வெளிப்படையாக தேர்தல் வேலை பார்க்கவில்லை. ஆனால், திமுக 3-வது இடத்துக்குத் தள்ளப்பட்டுவிட்டது. அழகிரியின் ஆதரவு பெற்ற வைகோ, 1.5 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் தோற்றாலும் 2-வது இடத்தைத் தக்க வைத்தார்.

ராமநாதபுரம்

ஜே.கே. ரித்தீஷும், ராம்கோ முன்னாள் சேர்மன் எம்.ஏ. சேக்கும் அழகிரியின் தளபதிகளாக இங்கே கோலோச்சியவர்கள். தேர்தல் நேரத்தில் ரித்தீஷ் அதிமுக பக்கம் போய்விட்டார். திருவாடனை தொகுதியில் அதிமுக வேட்பாளருக்காக வேலை பார்த்த ரித்தீஷ், அதிமுகவின் அன்வர் ராஜாவுக்கு கணிசமான வாக்குகளையும் வாங்கிக் கொடுத்தார்.

எம்.ஏ. சேக்கோ, ஜமாத் கட்டுப்பாட்டை மீற முடியாத சூழ்நிலைக்கு ஆளானார். ஆக, அழகிரி ஆதரவு பெற்ற வேட்பாளர் குப்புராம் 3-வது இடத்துக்குப் போய்விட்டார்.

சிவகங்கை

அழகிரி காது குத்து விழாவில் பங்கேற்ற தொகுதிகளில் இதுவும் ஒன்று என்பதைத் தவிர, இங்கே அழகிரியின் விளைவு எதுவும் இல்லை என்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள். அழகிரியை வீடு தேடி வந்து புகழ்ந்து தள்ளிய எச். ராஜா டெபாசிட் இழந்ததுதான் மிச்சம். திமுக இங்கும் 2-வது இடத்தைப் பிடித்து, கௌரவத்தைக் காப்பாற்றிக் கொண்டது.

தென்காசி

‘என் மனைவியும் தலித்தான். அவரது உறவினர்களை வைத்து கிருஷ்ணசாமிக்குப் பாடம் புகட்டு வேன்’ என்றார் அழகிரி. ஆனால், அவரால்தான் கிருஷ்ணசாமி 2-வது இடத்துக்கு வந்தார் என்பது ஆய்வுக் குரிய கூற்று. அழகிரி ஆட்கள் வேலை பார்த்திருந்தால் கண்டிப் பாக மதிமுகவின் சதன் திருமலைக் குமார் 2-வது இடத்தைப் பிடித்திருப் பார் என்கிறார்கள் மதிமுகவினர்.

திருநெல்வேலி

இங்கே அழகிரியின் தீவிர விசுவாசியான முன்னாள் எம்எல்ஏ மாலைராஜா உள்பட யாரும் வெளிப்படையாக வேலை பார்க்கவில்லை. இருப்பினும், மற்ற தொகுதிகளைவிட, மாலைராஜா கடந்த முறை எம்எல்ஏவாக இருந்த திருநெல்வேலி சட்டப்பேரவைத் தொகுதியில் மட்டும் திமுகவுக்கு ஓட்டு குறைந்திருந்தது. ஆனாலும், திமுக 2-வது இடத்தைப் பிடித்துவிட்டது.

தூத்துக்குடி

இங்கே அழகிரி ஆதரவாளரான ஜெயதுரைகூட, திமுகவுக்கு எதிராக வெளிப்படையாக வேலை பார்க்கவில்லை. ஆக, இங்கும் திமுக 2-வது இடத்தைப் பிடித்தது. ஆனால், அழகிரி ஆதரவு பெற்ற வேட்பாளரான ஜோயல் (மதிமுக) 3-வது இடத்துக்குப் போய்விட்டார்.

கன்னியாகுமரி

பிரச்சாரக் கூட்டத்துக்காக கருணாநிதி மதுரை வந்தபோது, அழகிரி இந்தத் தொகுதியில்தான் ஒரு ரிசார்ட்டில் தங்கியிருந்தார். மற்றபடி, இங்கும் அழகிரி விளைவு எதுவும் இல்லை. அழகிரியிடம் போனில் ஆதரவு கேட்ட பொன். ராதாகிருஷ்ணன் இங்கே வெற்றி பெற்றதும், அழகிரி கன்னியாகுமரி வந்தபோது, சாலையோரம் நின்று சால்வை போட்ட வசந்தகுமார் (காங் கிரஸ்) 2-வது இடத்தைப் பிடித்த தும், திமுக வேட்பாளர் ராஜரத்தினம் டெபாசிட் இழந்ததும் அழகிரியால் இல்லை என்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in