

அம்மா சிமென்ட் விற்பனையில் முறைகேடு நடப்பதாக சந்தேகம் எழுப்பியுள்ள பாமக நிறுவனர் ராமதாஸ், இந்தத் திட்டத்தின் கீழ் சிமென்ட் விற்பனை குறித்த வெள்ளை அறிக்கையை தமிழக அரசு வெளியிட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்ட அறிக்கையில், "அம்மா சிமென்ட் விற்பனைத் திட்டத்தின்படி இதுவரை ஒரு கோடி சிமென்ட் மூட்டைகள் விற்பனை செய்யப்பட்டிருப்பதாக தமிழ்நாடு சிமென்ட் நிறுவனம் அறிவித்திருக்கிறது. இதை ஒரு சாதனையாக காட்டுவதன் மூலம் சிமென்ட் விற்பனையில் நடந்த முறைகேடுகளை மறைக்க முயல்வதாக தெரிகிறது.
தமிழகத்தில் சிமென்ட் விலை விண்ணை முட்டும் அளவுக்கு உயர்ந்திருப்பதால் அதை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பா.ம.க. தொடர்ந்து வலியுறுத்தி வந்தது. அதையடுத்து அம்மா சிமென்ட் விற்பனை திட்டத்தை கடந்த செப்டம்பர் மாதம் ஜெயலலிதா அறிவித்தார். ஆனால், அடுத்த இரு நாட்களில் ஜெயலலிதா ஊழல் வழக்கில் தண்டிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டதால் அந்த திட்டம் கிடப்பில் போடப்பட்டது.
அதன்பின்னர் ஜனவரி மாதத்தில் இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது. ஜனவரி 10 ஆம் தேதி முதல் தமிழகம் முழுவதும் 470 கிட்டங்கிகளின் மூலம் அம்மா சிமென்ட் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. ஒவ்வொரு மாதமும் தனியார் சிமென்ட் நிறுவனங்களிடமிருந்து 2 லட்சம் டன் சிமென்ட் கொள்முதல் செய்யப்படும் என்றும், அரசு கிட்டங்கிகளின் மூலம் மூட்டை ரூ.190 என்ற விலையில் விற்பனை செய்யப்படும் என்றும் முதலமைச்சர் ஜெயலலிதா அறிவித்திருந்தார்.
அதன்படி பார்த்தால் அம்மா சிமென்ட் திட்டத்திற்காக இதுவரை 12.5 லட்சம் டன், அதாவது 2.5 கோடி மூட்டை கொள்முதல் செய்யப்பட்டிருக்க வேண்டும். அம்மா சிமென்ட் விலை குறைவு என்பதால் அவை உடனடியாக விற்பனையாகியிருக்க வேண்டும். ஆனால், கொள்முதல் இலக்கில் 40% மட்டுமே விற்பனை செய்யப்பட்டுள்ள நிலையில் அதற்கான காரணம் என்ன என்பதை அரசு விளக்க வேண்டும்.
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் அம்மா சிமென்ட் கேட்டு அரசு கிட்டங்கிகளுக்கு செல்பவர்கள் விரட்டி அடிக்கப்படுவதாக செய்திகள் வெளியாகியுள்ளன. அம்மா சிமென்ட் கேட்டு விண்ணப்பித்த மக்களில் பலருக்கு டோக்கன் வழங்கப்பட்டிருப்பதாகவும், அவ்வாறு டோக்கன் வழங்கப்பட்ட ஒரு லட்சம் பேர் சிமெண்டுக்காக காத்திருப்பதாகவும் கூறப்படுகிறது. தமிழக அரசு அறிவித்தவாறு மாதம் தோறும் தனியார் நிறுவனங்களிடமிருந்து 2 லட்சம் டன் கொள்முதல் செய்யப்பட்டிருந்தால் விண்ணப்பித்தவர்கள் அனைவருக்கும் அனைவருக்கும் சிமென்ட் மூட்டைகளை வழங்கியிருக்கலாம்.
ஆனால், அவ்வாறு செய்யப்படவில்லை என்பதால் தனியார் நிறுவனங்களிடமிருந்து ஒப்புக்கொள்ளப்பட்ட அளவில் சிமென்ட் வாங்கப்படவில்லை; அல்லது வாங்கப்பட்ட சிமென்ட் மூட்டைகளை கணக்கில் காட்டாமல் ஆளுங்கட்சி நிர்வாகிகளும், அதிகாரிகளும் கள்ளச் சந்தையில் அதிக விலைக்கு விற்பனை செய்திருக்க வேண்டும். அம்மா சிமென்ட் கள்ளச்சந்தையில் மூட்டை ரூ.300-க்கு தாராளமாக விற்பனை செய்யப்படுவதாக வெளியாகியுள்ள ஊடக செய்திகள் இந்த ஐயத்தை உறுதி செய்யும் வகையில் அமைந்திருக்கின்றன.
அம்மா சிமென்ட் விற்பனை தொடங்கியது முதல் இப்போது வரை 1,33,595 பயனாளிகள் பயன் அடைந்து இருப்பதாக அரசு தெரிவித்துள்ளது. ஒரு கோடி சிமென்ட் மூட்டைகள் மூலம் 1.33 லட்சம் பேர் பயனடைந்திருப்பதாக வைத்துக் கொண்டால் ஒவ்வொரு பயனாளிக்கும் சாராசரியாக 75 மூட்டை மட்டுமே கிடைத்திருக்கும். இந்த சிமென்ட்டை வைத்துக் கொண்டு 150 சதுர அடியில் கூட வீடு கட்ட முடியாது. பசுமை வீடு கட்டுவதற்குக் கூட சுமார் 200 மூட்டைகள் தேவைப்படும் நிலையில், அரசு தெரிவித்துள்ள புள்ளி விவரங்களின் அடிப்படையில் பார்த்தால், இத்திட்டத்தின்படி எவருக்கும் பயன் கிடைத்திருக்கும் என்று தோன்றவில்லை. சிமென்ட் விலையை கட்டுப்படுத்த தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது என்ற மாயையை ஏற்படுத்தவே அரசு இவ்வாறு செய்வதாக தெரிகிறது.
வட இந்தியாவில் ஒரு மூட்டை சிமென்ட் விலை ரூ.235 முதல் ரூ.250 வரை மட்டுமே உள்ளது. ஆனால், தமிழகத்தில் ஒரு மூட்டை சிமென்ட் ரூ.420க்கு விற்பனை செய்யப்படுகிறது. இந்த விலை உயர்வைக் கட்டுப்படுத்த தமிழக அரசு நடவடிக்கை எடுப்பது தான் சரியானதாக இருக்கும். அதை விடுத்து அம்மா சிமென்ட் என்பது போன்ற கண்துடைப்பு நடவடிக்கைகளை அரசு மேற்கொள்வது ஆளுங்கட்சியினருக்கு வேண்டுமானால் பயனளிக்குமே தவிர மக்களுக்கு எந்த பயனும் ஏற்படாது.
எனவே, தமிழ்நாட்டில் சிமென்ட் விலையை கட்டுப்படுத்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். அதுமட்டுமின்றி, அம்மா சிமென்ட் திட்டத்திற்காக இதுவரை வாங்கப்பட்ட சிமென்ட் எவ்வளவு? விற்கப்பட்டது எவ்வளவு? விண்ணப்பித்த உடனேயே சிமென்ட் கிடைக்க எப்போது வகை செய்யப்படும் என்பன உள்ளிட்ட வினாக்களுக்கு விடையளிக்கும் வகையில் அம்மா சிமென்ட் விற்பனை குறித்த வெள்ளை அறிக்கையை தமிழக அரசு வெளியிட வேண்டும் என வலியுறுத்துகிறேன்" என்று அவர் கூறியுள்ளார்.