5 மின் நிலையங்களில் உற்பத்தி குறைவால் தட்டுப்பாடு அதிகரிப்பு: தமிழக மொத்த தேவை 13 ஆயிரம் மெகாவாட்டாக உயர்வு

5 மின் நிலையங்களில் உற்பத்தி குறைவால் தட்டுப்பாடு அதிகரிப்பு: தமிழக மொத்த தேவை 13 ஆயிரம் மெகாவாட்டாக உயர்வு
Updated on
1 min read

கூடங்குளம், தூத்துக்குடி மற்றும் வடசென்னை உள்பட 5 மின் நிலையங்களில் செயல்படும் 7 அலகுகளில் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளதால் 2,130 மெகாவாட் மின்சார உற்பத்தி தடைப்பட்டுள்ளது. ஆனாலும் காற்றாலைகளின் மின்சாரத்தை பயன்படுத்தி, மின் வெட்டு அதிகமாகாமல் மின் வாரியம் நிலைமையை சமாளித்து வருகிறது.

தமிழகத்தில் சராசரியாக தினமும் 1,500 முதல் 2,000 மெகாவாட் வரை மின்சார தட்டுப்பாடு ஏற்படுகிறது. காற்றாலை உற்பத்தி மற்றும் மத்திய மின் நிலையங்களின் மின் உற்பத்தி நிலைக்கேற்ப, தமிழக மின்சார வாரியம் மின் வெட்டை அமல்படுத்தியும் நிலைமையை சமாளித்து வருகின்றது.

ஒரு மாதமாக மின் வெட்டு குறைவாக இருந்த நிலையில், கடந்த சில தினங்களாக மின் வெட்டு நேரம் அதிகரித்துள்ளது. கூடங்குளம், நெய்வேலி உள்ளிட்ட ஒரு சில மின் நிலையங்களின் மின் உற்பத்தி குறைவால், மின் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

வியாழக்கிழமை பகல் நிலவரப்படி, கூடங்குளம், எண்ணூர், வடசென்னை, நெய்வேலி மற்றும் தூத்துக்குடி மின் நிலையங்களிலுள்ள 7 மின் அலகுகளில் மின் உற்பத்தி பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

கூடங்குளம் நிலையத்தின் முதல் அலகில் பல்வேறு சோதனைகள் நடைபெறுவதால் 900 மெகாவாட் மின் உற்பத்தி கடந்த 3 தினங்களாக நிறுத்தப்பட்டுள்ளது. எண்ணூரில் 2 அலகுகளில் மொத்தம் 170 மெகாவாட், வடசென்னை இரண்டாம் நிலை விரிவாக்க நிலையத்தில் 600 மெகாவாட், நெய்வேலி மின் நிலையத்தில் 2 அலகுகளில் 150 மெகாவாட் மற்றும் தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் ஒரு அலகில் 210 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

வரும் 23-ம் தேதிக்குள் அனைத்து மின் நிலையங்களிலும் மின் உற்பத்தி தொடங்கிவிடும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

வியாழக்கிழமை பகல் நிலவரப்படி 24 மணி நேரத்தில் 11,583 மெகாவாட் (280 மில்லியன் யூனிட்) மின்சாரம் விநியோகம் செய்யப்பட்டிருந்தது. ஒரு சில மாவட்டங்களில் தொழிற்சாலைகளுக்கு ஒரு மணி நேர மின்வெட்டை அமல்படுத்தி பற்றாக்குறையை மின்வாரியம் சமாளித்தது.

இதற்கிடையில், தமிழகத்தின் மின் உற்பத்தி கடந்த 16-ம் தேதி 12,995 மெகாவாட்டாக உயர்ந்தது. மின் தேவை கடந்த ஜனவரி

29-ம் தேதி 12,799 மெகாவாட்டாக உயர்ந்ததுதான் இதுவரை அதிகபட்ச மின்தேவையாக இருந்தது. இந்நிலையில் கடந்த 16-ம் தேதி, தமிழக மின் தேவை சுமார் 13 ஆயிரம் மெகாவாட்டாக உயர்ந்தது குறிப்பிடத்தக்கது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in