

21 குண்டுகள் முழங்க, முழு அரசு மரியாதையுடன், முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் உடல் ராமேசு வரத்தில் நேற்று நல்லடக்கம் செய்யப்பட்டது. அவரது உடலுக்கு பிரதமர் மோடி, மாநில முதல்வர்கள், மத்திய, மாநில அமைச்சர்கள், அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவர் ராகுல் காந்தி, தமிழக தலைவர்கள் உட்பட ஏராளமானோர் இறுதி அஞ்சலி செலுத்தினர்.
மேகாலயா மாநிலத்தின் தலைநகரான ஷில்லாங்கில் கடந்த திங்கள்கிழமை ஒரு கருத்தரங் கில் அப்துல் கலாம் கலந்து கொண்டு மாணவர்களுடன் உரை யாடிக் கொண்டிருந்தார். அப்போது அவர் திடீரென மயங்கி விழுந்தார். இதையடுத்து அவர் அங்குள்ள மருத்துவமனையில் சேர்க்கப் பட்டார். பரிசோதித்த மருத்துவர்கள் அவர் மாரடைப்பால் காலமானதாக அறிவித்தனர்.
இதைத் தொடர்ந்து அவரது உடல் செவ்வாய்க்கிழமை விமானப் படை விமானம் மூலம் டெல்லிக்கு கொண்டு செல்லப்பட்டது. பின்னர் அவரது சொந்தஊரான ராமேசு வரத்துக்கு புதன்கிழமை பிற்பகல் கொண்டுவரப்பட்டது. அங்கு புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள மைதானத்தில் பொது மக்கள் அஞ்சலிக்கு வைக்கப் பட்டது. தமிழகம் முழுவதும் இருந்து திரண்டுவந்த லட்சக்கணக்கான மக்கள் அப்துல் கலாமுக்கு அஞ்சலி செலுத்தினர்.
பின்னர் இரவு 10 மணி அளவில் கலாம் உடல் வீட்டுக்கு எடுத்துச் செல்லப்பட்டது. அங்கு அவரது அண்ணன் முத்து முகமது மீரா லெப்பை மரைக்காயர் உட்பட உறவினர்கள் அஞ்சலி செலுத்தினர்.
இதைத் தொடர்ந்து கலாம் உடலை நேற்று காலை 9.40 மணி அளவில் அவரது வீட்டுக்கு அருகே உள்ள முகைதீன் ஆண்டவர் பள்ளிவாசலுக்கு ராணுவ வீரர்கள் எடுத்துச் சென்றனர். அங்கு தலைமை இமாம் அப்துல் ரகுமான் இறுதி தொழுகை நடத்தினார்.
பின்னர் 10.05 மணி அளவில் அவரது உடல் வெளியே எடுத்து வரப்பட்டு மலர்களால் அலங்கரிக் கப்பட்ட ராணுவ வாகனத்தில் ஏற்றப்பட்டது. அப்போது அங்கு கூடியிருந்த லட்சக்கணக்கான மக்கள் புகழ் ஓங்குக’ என்று கோஷமிட, இறுதி ஊர்வலம் தொடங்கியது.
‘கலாம் முப்படை வீரர்கள் இருந்த மூன்று வாகனங்கள் முன்னே சென்றன. அதைத் தொடர்ந்து இரு வேன்களில் ஜமாத் நிர்வாகிகள் வந்தனர். அதன் பின்னர் கலாம் உடல் இருந்த வாகனம் சென்றது. இந்த இறுதி ஊர்வலத்தில் லட்சக் கணக்கான மக்கள் பங்கேற்றனர். கலாம் வீட்டில் இருந்து 4 கி.மீ. தொலைவில் உள்ள பேக்கரும்பு அடக்க ஸ்தலத்துக்கு சென்றடைய 50 நிமிடங்கள் ஆனது.
இதனிடையே இறுதி அஞ்சலி யில் பங்கேற்க பிரதமர் நரேந்திர மோடி, ராகுல் காந்தி ஆகியோர் தனித்தனியாக சிறப்பு விமானங் களில் மதுரை வந்து, அங்கிருந்து ஹெலிகாப்டரில் மண்டபம் முகாமுக்கு வந்தனர். அங்கிருந்து 7 கி.மீ. தொலை விலுள்ள அப்துல் கலாம் உடல் அடக்கம் செய்யப்படும் திடலுக்கு பிரதமர் காரில் வந்தார்.
அதையடுத்து அப்துல் கலாமின் உடல் 11.10 மணிக்கு அடக்கம் செய்யும் திடலில் ராணுவத்தினரால் அமைக்கப்பட்ட சிறப்பு மேடையில் வைக்கப்பட்டது. முதலில் முப்படை வீரர்கள் மரியாதை செலுத்தினர். அதைத் தொடர்ந்து பிரதமர் மோடி காலை 11.15 மணி அளவில் மலர் வளையம் வைத்து இறுதி அஞ்சலி செலுத்தி 2 நிமிடம் மவுனம் அனுசரித்தார். பின்னர் அவரது உடல் இருந்த மேடையை ஒருமுறை சுற்றிவந்து வணங்கினார். அப்போது பிரதமர் மிகுந்த சோகத்துடன் காணப்பட்டார்.
அமைச்சர்கள் அஞ்சலி
பிரதமரை தொடர்ந்து தமிழக ஆளுநர் ரோசய்யா, மத்திய அமைச்சர்கள் மனோகர் பாரிக்கர், வெங்கைய நாயுடு, பொன். ராதாகிருஷ்ணன், ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் தமிழக அமைச்சர்கள் 7 பேர் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.
முப்படை அதிகாரிகளைத் தொடர்ந்து காங்கிரஸை சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்சர் குலாம் நபி ஆசாத், பாஜக செய்தி தொடர்பாளர் ஷா நவாஸ் உஷேன் ஆகியோர் அஞ்சலி செலுத்தினர்.
ராகுல் காந்தி
அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவர் ராகுல் காந்தி முக்கிய பிரமுகர்களுடன் வரிசையில் வந்து அஞ்சலி செலுத்தினார். பின்னர் கலாமின் சகோதரர் உட்பட உறவினர்களைச் சந்தித்து ஆறுதல் கூறினார்.
தமிழக தலைவர்கள்
இதைத் தொடர்ந்து தமிழக காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன், தமாகா தலைவர் ஜி.கே.வாசன், பாஜக தமிழக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், தேசிய செயலர் ஹெச்.ராஜா, தேமுதிக தலைவர் விஜயகாந்த், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ், பாமக தலைவர் ஜி.கே.மணி, விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் உட்பட ஏராளமானோர் அஞ்சலி செலுத் தினர். பின்னர் அப்துல் கலாமின் நெருங்கிய உறவினர்கள், விஞ்ஞா னிகள், ஆலோசகர் பொன்ராஜ் உட்பட பலர் அஞ்சலி செலுத்தினர்.
மேகாலயா ஆளுநர் சண்முகநாதன், பூடான் நாட்டு தூதர், இலங்கை அமைச்சர் உட்பட வெளிநாட்டு பிரதிநிதிகள் பலர் பங்கேற்றனர்.
தேசிய கொடி அகற்றம்
முக்கிய பிரமுகர்கள் அஞ்சலி நிகழ்ச்சி 20 நிமிடங்களில் முடிந்தது. பின்னர் முப்படையை சேர்ந்த 6 வீரர்கள், மரியாதை செலுத்திய பிறகு, அப்துல் கலாமின் உடலில் போர்த்தப்பட்டிருந்த தேசிய கொடியை முறைப்படி அகற்றினர். அப்போது திடலை சுற்றியிருந்த மக்கள் உணர்ச்சி பொங்க கோஷம் எழுப்பினர். துணியால் போர்த்தப்பட்டிருந்த அப்துல் கலாமின் உடலை பெட்டியில் இருந்து இறக்கிய ராணுவ வீரர்கள், கலாமின் உறவினர்கள், ஜமாத் நிர்வாகிகளிடம் ஒப்படைத் தனர்.
குண்டுகள் முழக்கம்
கலாமின் உடலை ஜமாத் நிர்வாகிகள், உறவினர்கள் பெற்றுக்கொண்டனர். இஸ்லாமிய முறைப்படி மதச் சடங்குகளுடன் சிறப்புத் தொழுகை நடத்தினர்.
அப்போது ராணுவத்தினர் வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டு மரியாதை செலுத்தினர். அப்போதும் அங்கு கூடியிருந்தோர் கோஷங்களை எழுப்பினர்.
பெட்டியில் வைக்கப்பட்ட அப்துல் கலாமின் உடலை சுற்றி நின்ற ஜமாத் நிர்வாகிகள், உறவினர்கள் இஸ்லாமிய முறைப் படி சிறப்புத் தொழுகை நடத்தினர். பின்னர் அப்துல் கலாமின் உடல் மீது மலர்களை தூவினர். சரியாகப் பகல் 12 மணிக்கு நல்லடக்கம் நடைபெற்றது.
பொதுமக்கள் அஞ்சலி
முக்கிய பிரமுகர்கள் சென்றதும் 200-க்கும் மேற்பட்ட ராணுவ வீரர்கள் உட்பட பலர் அப்துல் கலாமுக்கு அஞ்சலி செலுத்தினர். காவல் துறையின் தடுப்புகளைத் தாண்டி ஏராளமான பொதுமக்கள் திடலுக்குள் புகுந்தனர். கட்டுக்கடங்காத கூட்டம் திரண்டதால் அப்பகுதியில் போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர்.
தென்மாநில முதல்வர்கள் அஞ்சலி
அப்துல் கலாம் உடலுக்கு ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, கர்நாடக முதல்வர் சித்தராமையா, கேரள முதல்வர் உம்மன்சாண்டி ஆகியோர் அஞ்சலி செலுத்தினர். கேரள ஆளுநர் சதாசிவம், கர்நாடக முன்னாள் முதல்வர் எடியூரப்பாவும் அஞ்சலி செலுத்தினர்.