

மாணவர் கோகுல்ராஜ் கொலை வழக்கு குறித்து கருத்து தெரிவிக்க மறுத்த பாமக நிறுவனர் ராமதாஸ், காதல் நாடகங்களில் பெண்களைக் காக்க வேண்டும் என்றார்.
கோவையில் பாமக சார்பில் கொங்கு மண்டல மாநாடு வரும் 12-ம் தேதி நடத்தப்படுகிறது. மாநாட்டு ஏற்பாடுகள் குறித்து பார்வையிடுவதற்காக வந்த ராமதாஸ் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில், ஆளும் கட்சியின் சார்பில் நடத்தப்பட்ட தேர்தல் விதிமீறல்கள் குறித்து ஆதாரப் பூர்வமாக சில கட்சிகள் தேர்தல் ஆணையத்திடம் புகார்கள் அளித்தும் பலன் ஏதும் இல்லை. இந்நிலையில், அங்கு நேர்மையான முறையில் தேர்தல் நடந்து முடிந்துள்ளது என மாநில தேர்தல் ஆணையர் சந்தீப் சக்சேனா கூறுகிறார்.
அந்த தொகுதியில் திடீரென தேர்தல் அறிவிக்கப்பட்ட உடனையே நீண்ட நாட்களாக சேதம் அடைந்திருந்த சாலைகள் இரவோடு இரவாக புதிதாக்கப்பட்டன. இந்தப் பணிகளுக்கு எவ்வித இடையூறும் இல்லாமல் போலீஸார் துணை நின்றனர். ஆளும்கட்சியின் மூலம் வாக்குப்பதிவு நடந்த மையங்களை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டது முதல் பரிசுப் பொருட்கள் மற்றும் பண விநியோகம் வரை எல்லாம் நடந்து முடிந்து ஜெயலலிதா வெற்றி பெற்றுள்ளார். அங்கு ஜனநாயகம் வெல்வதற்குப் பதிலாக பணநாயகம் வென்றுள்ளது.
சொத்துக்குவிப்பு வழக்கின் மேல்முறையீடு வழக்கு நிலுவையில் உள்ளது. அந்த வழக்கில் நிச்சயம் அவருக்கு எதிரான தீர்ப்பு வரும். 3-வது முறையாக அவர் பதவியை இழப்பது உறுதி.
சென்னையில் மெட்ரோ ரயில் சேவையை தலைமைச் செயலகத்தில் இருந்தபடியே முதல்வர் ஜெயலலிதா தொடங்கி வைத்துள்ளார். அதிமுகவின் கடந்த ஆட்சியின்போது மோனோ ரயில் திட்டம் கொண்டு வருவதற்கான முயற்சிகளை எடுத்தவர் அவர்.
இதேபோல், அடுத்து வந்த திமுக அரசும் மோனோ ரயில் திட்டத்தையே செயல்படுத்த முனைந்தது. மோனோ ரயில் மெட்ரோ ரயிலைவிட சிறந்தது கிடையாது எனக் கூறி பாமக சார்பில் அப்போதே வழக்கு தொடர்ப்பட்டது. இதன்பலனாக வந்ததுதான் மெட்ரோ ரயில் சேவை.
சென்னையில் மெட்ரோ ரயில் சேவை கொண்டு வரப்பட்டதைப்போல தாமதிக்காமல் கோவை, மதுரை ஆகிய நகரங்களில் மெட்ரோ திட்டமும், பி.ஆர்.டி. திட்டமும் கொண்டு வரப்பட வேண்டும். இங்குள்ள போக்குவரத்து நெரிசலைக் குறைக்க இதுதான் தீர்வாக அமையும்.
பொறியியல் மாணவர் கோகுல்ராஜ் மரணம் குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். பிரேதப் பரிசோதனை அறிக்கையும் வெளிவரவில்லை. இதற்கிடையே, அது குறித்து கூறுவது சரியாக இருக்காது.
கவுரவக் கொலைகள் நடைபெறாமல் இருக்க வேண்டுமானால் மக்கள் விழிப்புணர்வு கொள்ள வேண்டும். பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத நிலை தற்போது உள்ளது. காதல் நாடகங்களில் இருந்து அவர்கள் காப்பாற்றப்பட வேண்டும். அதற்கு பெற்றோர்கள் சம்மதத்துடன் காதல் திருமணங்கள் நடைபெற வேண்டும்.
இந்நிலையில், சில நேரத்தில் சிலர் முற்போக்கு முகமூடிகளைப் போட்டுக் கொண்டு சமூக நல்லிணக்கத்துக்கு ஊறுவிளைக்கும் வகையில் செயல்பட்டு வருகின்றனர். இது தடுக்கப்பட வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார். பேட்டியின் போது அக் கட்சியின் தலைவர் ஜி.கே.மணி உடன் இருந்தார்.