Published : 09 Mar 2014 05:20 PM
Last Updated : 09 Mar 2014 05:20 PM

முஸ்லிம்களுக்கு இட ஒதுக்கீடு: கருணாநிதி மீது ஜெயலலிதா குற்றச்சாட்டு

முஸ்லிம்களுக்கான இட ஒதுக்கீடு விவகாரத்தில் திமுக தலைவர் கருணாநிதியை குற்றம்சாட்டிய தமிழக முதல்வரும், அதிமுக பொதுச் செயலருமான ஜெயலலிதா, முஸ்லீம்கள இட ஒதுக்கீடு கோரிக்கையை, உச்ச நீதிமன்ற தீர்ப்பின்படி, மாநில பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்திற்கு அனுப்பப்பட்டு உள்ளது என்று தெரிவித்தார்.

கன்னியாகுமரி தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் ஜான் தங்கத்தை ஆதரித்து, நாகர்கோவில் பொருள்காட்சித் திடலில் இன்று தேர்தல் பிரச்சாரப் பொதுக் கூட்டத்தில் ஜெயலலிதா பேசியது:

இந்திய நாட்டின் எதிர்காலம் பிரகாசமாக இருக்க வேண்டுமென்றால் அதற்குத் தேவை மத்தியிலே ஆட்சி மாற்றம். அந்த மாற்றத்தை உருவாக்கித் தர வேண்டும் என்ற வேண்டுகோளினை உங்கள் முன் வைப்பதற்காகவே நான் இங்கே வந்திருக்கிறேன்.

தற்போது மத்தியில் உள்ள மக்கள் விரோத ஊழல் காங்கிரஸ் ஆட்சியை அகற்றி, அதிமுக அங்கம் வகிக்கும் மக்கள் நல ஆட்சியை மலர வைக்க வேண்டும் என்ற வேண்டுகோளினை, உங்களை நேரில் சந்தித்து உங்கள் முன் வைக்கவே நான் இங்கு வந்துள்ளேன்.

கடந்த பத்து ஆண்டுகளில் பல்வேறு ஊழல்கள் மூலம் இந்திய பொருளாதாரத்தையே சீரழித்த, நாட்டை சூறையாடிய, காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசை தூக்கி எறிய வேண்டும்; அது மட்டும் போதாது, எதிர்காலத்திலும் மத்தியில் காங்கிரஸ் ஆட்சியை அமையவிடக் கூடாது என்ற மன நிலையில் இன்று நாடெங்கிலும் மக்கள் இருக்கிறார்கள்.

இந்தத் தேர்தலின் மூலம் இந்திய நாட்டிலே நடைபெற்றுக் கொண்டிருக்கின்ற குடும்ப ஆட்சிக்கு, ஊழல் ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்; அதன் மூலம் மக்களாட்சி மலர வேண்டும். இதனை வரும் ஏப்ரல் 24-ஆம் தேதியன்று உங்கள் வாக்குகள் மூலம் உங்களால் நிறைவேற்றிட முடியும்.

மத்தியிலே மக்களாட்சி மலர்ந்தால் மட்டும் போதாது. அந்த ஆட்சி தமிழகத்தின் ஆட்சியாக, நமது ஆட்சியாக, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் அங்கம் வகிக்கும் ஆட்சியாக அமைய வேண்டும். அப்பொழுது தான் தமிழர்களின் உரிமைகள் நிலைநாட்டப்படும். தமிழர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும்.தமிழர்களின் நலன்கள் பாதுகாக்கப்படும். தமிழ் நாட்டு மக்களின் வாழ்வு வளம் பெறும்.

தமிழகத்தைப் பொறுத்த வரையில், இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத வகையில் பல்வேறு மக்கள் நலத் திட்டங்களை நாங்கள் செயல்படுத்தி வருகிறோம்.

முஸ்லிம்களுக்கு இட ஒதுக்கீடு

தற்போது தமிழ் நாட்டில் நடைமுறையில் உள்ள 3.5 விழுக்காடு இட ஒதுக்கீட்டினை அதிகப்படுத்தி தர வேண்டும் என்று இஸ்லாமிய அமைப்புகள் கோரிக்கை விடுத்துள்ளன. இவர்களது கோரிக்கை மாநில பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது.

இது குறித்து தனக்குத் தானே ஒரு கேள்வியை கேட்டுக் கொண்டு அதற்கு பதில் அளித்து அறிக்கை விடுத்திருக்கிறார் கருணாநிதி. அந்த அறிக்கையில், "வழக்கம் போல முஸ்லீம்களை ஏமாற்றப் பார்க்கிறார். முஸ்லீம்களுக்கு ஏற்கெனவே இட ஒதுக்கீடு அளித்ததே தி.மு.க. ஆட்சி தான். அந்த சதவிகிதத்தை அதிகப்படுத்த வேண்டுமென்று முஸ்லீம்கள் கோரிக்கை வைத்திருக்கிறார்கள். அதைப் பற்றி உண்மையிலேயே அக்கறை

இருந்தால் அந்தக் கோப்பினை உடனடியாக வரவழைத்து ஆணை பிறப்பித்திருக்கலாம். தற்போது அவர்களை ஏமாற்றுவதற்காக கோரிக்கையை மாநில பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்திற்கு அனுப்பி வைத்திருப்பதாகக் கூறி சமாளிக்கப் பார்க்கிறார் ..." என்று கருணாநிதி கூறியிருக்கிறார்.

முஸ்லீம்கள் இட ஒதுக்கீடு குறித்த கோரிக்கை மாநில பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்திற்கு அனுப்பப்பட்டு உள்ளது என்ற உண்மையைத் தான் நான் சொன்னேன். இதில் ஏமாற்றுவதற்கு ஒன்றுமில்லை. தான் திருடி பிறரை திருடி என்று கூறுவாள் என்று ஒரு பழமொழி உள்ளது. அது போன்று ஏமாற்றியே பழக்கப்பட்ட கருணாநிதி நான் ஏமாற்ற பார்ப்பதாக குற்றம் சுமத்துகிறார்.

முஸ்லீம்களுக்கு இட ஒதுக்கீடு அளித்தது தி.மு.க. தான் என்று கருணாநிதி கூறி இருக்கிறார். 2006-ஆம் ஆண்டு மாநில பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தை திருத்தி அமைத்து அதில் சமூக மற்றும் கல்வியில் பின்தங்கியுள்ளதை அடிப்படையாக வைத்து இஸ்லாமியர்கள், கிறிஸ்தவர்கள் மற்றும் சிறுபான்மையினருக்கு இட ஒதுக்கீடு அளிப்பது

குறித்து ஆணையம் பரிந்துரை செய்ய வேண்டும் என்ற அம்சத்தை முதன் முதலாக சேர்த்ததே எனது தலைமையிலான அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக அரசு தான். இது தான் முஸ்லீம்கள் இட ஒதுக்கீட்டிற்கு அடித்தளமாக, வித்தாக அமைந்தது. இதை முற்றிலும் மறைத்து முஸ்லீம்களுக்கு இட ஒதுக்கீடு அளித்தது தி.மு.க. தான் என்று கூறுவது தான் ஏமாற்று வேலை.

கருணாநிதி தனது கேள்வி-பதில் அறிக்கையில், இட ஒதுக்கீடு சதவிகிதத்தை அதிகப்படுத்த வேண்டுமென்று முஸ்லீம்கள் கோரிக்கை வைத்திருக்கிறார்கள்; அதைப் பற்றி உண்மையிலேயே அக்கறை இருந்தால் அந்தக் கோப்பினை உடனடியாக வரவழைத்து ஆணை பிறப்பித்திருக்கலாம் என்று கூறியிருக்கிறார். இப்படித் தான் கருணாநிதி ஆணை பிறப்பித்தாரா? நீதியரசர் எம்.எஸ். ஜனார்த்தனம் தலைமையில் திருத்தி அமைக்கப்பட்ட மாநில பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்திற்கு அளிக்கப்பட்ட ஆய்வு எல்லையில் எனது தலைமையிலான அரசு 2006-ல் தெரிவித்த முஸ்லீம்கள் கிறித்துவர்கள் உள்ளிட்ட சிறுபான்மையினருக்கான இட ஒதுக்கீடு குறித்த ஷரத்தை கருணாநிதி ஏன் வார்த்தை மாறாமல் சேர்த்தார்?

2006-ல் திமுக ஆட்சிப் பொறுப்பை ஏற்றவுடன் ஆளுநர் உரையில் தெரிவிக்கப்பட்டதைப் போல, உடனேயே அதற்குரிய சட்டத்தை கருணாநிதி இயற்ற வேண்டியது தானே! அதை ஏன் செய்யவில்லை? எதற்காக மாநில பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தின் பரிந்துரையை அவர் கேட்டார்? ஏனெனில் சட்டப்படி அவ்வாறு தான் செய்ய முடியும்.

மண்டல் கமிஷன் வழக்கில் 1990-ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பின் அடிப்படையில் எந்த இட ஒதுக்கீடு குறித்தும் எந்த அரசும் தன்னிச்சையாக முடிவெடுக்க முடியாது. இட ஒதுக்கீடு குறித்து மாநில பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தின் பரிந்துரை பெற்ற பின்னரே அதை நடைமுறைப்படுத்த முடியும் என்று தெளிவாக உச்ச நீதிமன்ற தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் தான் வளமான பிரிவினரை நீக்கம் செய்யாமல் 69 விழுக்காடு இட ஒதுக்கீட்டை தொடர்ந்து நடைமுறைப்படுத்த வழிவகை செய்யப்பட்டது.

அதே அடிப்படையில் தான் தற்போதும் இட ஒதுக்கீடு அதிகரிக்கப்பட வேண்டும் என்ற முஸ்லீம் அமைப்புகளின் கோரிக்கை மாநில பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. ஏமாற்றுவது வஞ்சிப்பது துரோகம் இழைப்பது என்பதெல்லாம் கருணாநிதிக்கு தான் கைவந்த கலை என்பது நாடறிந்த உண்மை. கருணாநிதியின் பேச்சை இன்னமும் கேட்டு ஏமாறுவதற்கு தமிழக மக்கள் ஒன்றும் ஏமாளிகள் அல்ல.

கன்னியாகுமரிக்கு நலத் திட்டங்கள்

கன்னியாகுமரி மாவட்டத்திற்கென பல்வேறு வசதிகளை கடந்த 33 மாதங்களில் நாங்கள் நிறைவேற்றி கொடுத்து இருக்கிறோம். கன்னியாகுமரி மாவட்டம் தக்கலையில் மூன்று மருத்துவர் வகை மருந்தகமும், மணவாளக்குறிச்சி பகுதியில் இரண்டு மருத்துவர் வகை மருந்தகமும் தொடங்கப்பட்டு உள்ளன. 5 நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்கள் துவங்கப்பட்டுள்ளன. ஒரு ஆரம்ப சுகாதார நிலையம் 30 படுக்கைகள் கொண்ட மருத்துவமனையாக தரம் உயர்த்தப்பட்டுள்ளது. சுசீந்திரம் தேரூர் மற்றும் மணக்குடி காயல் பகுதிகள் பறவையினங்களை பாதுகாக்கும் மண்டலமாக அறிவிக்கப்பட்டுள்ளன. இங்கு 1 கோடியே 61 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் அபிவிருத்தி மற்றும் மேலாண்மை பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

கன்னியாகுமரி மாவட்ட மக்களின் நலன் கருதி 81 வருவாய் கிராமங்கள் சீரமைக்கப்பட்டு, புதியதாக 107 வருவாய் கிராமங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கூடுதல் கட்டடங்கள் கட்ட 10 கோடியே 14 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 1.5 கோடி ரூபாய் மதிப்பில் உள் விளையாட்டரங்கம் கட்டும் பணிகள் நடைபெற்று வருகின்றன. சிவராத்திரி விழாவை விமரிசையாக கொண்டாடும் பொருட்டு கன்னியாகுமரி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அளிக்க நான் உத்தரவிட்டேன்.

திருவட்டாறு சுசீந்திரம் ஆகிய நகரங்கள் புராதன நகரங்களாக அறிவிக்கப்பட்டு, வளர்ச்சித் திட்டங்களுக்காக தலா 1 கோடி ரூபாய் மானியம் வழங்கப்பட்டுள்ளது. கன்னியாகுமரி மாவட்டம், சுசீந்திரத்தை தலைமை இடமாகக் கொண்ட இணைக்கப்பட்ட மற்றும் இணைக்கப்படாத திருக்கோயில்களின் கீழ் உள்ள கல்வி நிறுவனங்கள் மற்றும் திருக்கோயில்களின் நிருவாகச் செலவினங்களுக்காக ஆண்டு ஒன்றுக்கு தற்போது வழங்கப்பட்டு வரும் அரசு மானியம் 1 கோடி ரூபாயிலிருந்து 3 கோடி ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. தொன்மை வாய்ந்த இரணியல் அரண்மனையை புதுப்பிக்க 3 கோடியே 85 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

குளச்சலில் மீன்பிடி துறைமுகம் அமைக்க 87 கோடியே 75 லட்சம் ரூபாய்க்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. அந்தப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இனையம் புத்தன் துறையில் 2 கோடியே 40 லட்சம் ரூபாய் செலவில் மீன் இறங்கு தளம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு அதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. சுசீந்திரத்தில் தமிழ்க் கவிஞர் கவிமணி தேசிக விநாயகம் பிள்ளைக்கும், களியக்காவிளையில் மொழிப்போர் தியாகி சிதம்பரநாதனுக்கும் சிலைகள் வைப்பதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன.

தமிழ் நாட்டுடன் கன்னியாகுமரி மாவட்டம் இணைந்த நவம்பர் ஒன்றாம் தேதியை அரசு விழாவாகக் கொண்டாடவும், இந்த நாளில் கன்னியாகுமரி மாவட்டம் தமிழகத்துடன் இணைய அரும்பாடுபட்ட மார்ஷல் நேசமணி திருவுருவச் சிலைக்கு அரசு சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தவும் உத்தரவிட்டுள்ளேன். மார்ஷல் நேசமணி அவர்களின் திருவுருவச் சிலையுடன் நினைவு மண்டபம் ஒன்றினை அழகுற அமைத்து அதனை நான் திறந்து வைத்தேன்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் கடல்சார் தொழிற்சாலைகளை ஈர்க்கும் வகையில் 250 ஏக்கர் நிலப்பரப்பில் தொழிற் பூங்கா அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இங்கு தொழில் புரிய விரும்புவோருக்கு பல்வேறு சலுகைகள் அளிக்கப்பட்டு உள்ளன. இவற்றுடன் பொறியியல் சார்ந்த தொழில்கள், ரப்பர் தொழில்கள் மற்றும் சுற்றுலாத் தொழில் ஆகியவற்றை ஊக்குவிக்கவும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

மத்திய காங்கிரஸ் கூட்டணி அரசின் மாற்றாந்தாய் போக்கினையும், அதற்கு துணை போகும் தி.மு.க-வின் சதித் திட்டங்களையும் மீறி எனது அரசின் முயற்சிகளால் தமிழகம் முன்னேற்றப் பாதையில் சென்று கொண்டிருக்கிறது. இருப்பினும் அனைத்துப் பிரச்சனைகளுக்கும் நாம் தீர்வு கண்டுவிட்டோமா என்றால் நிச்சயம் இல்லை என்பது தான் விடை.

மாநில அரசு மட்டுமே அனைத்துப் பிரச்சனைகளுக்கும் தீர்வு காண முடியாது. உதாரணமாக மீனவர்கள் பிரச்சனை, அண்டை மாநில நதிநீர்ப் பிரச்சனை, கச்சத் தீவு பிரச்சனை, மண்ணெண்ணெய் ஒதுக்கீடு, நிலக்கரி ஒதுக்கீடு போன்ற பெரும்பாலான பிரச்சனைகளுக்கு தீர்வு காண வேண்டிய பொறுப்பு மத்திய அரசிடம் தான் இருக்கிறது.

இதனை தற்போதுள்ள காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசு செய்கிறதா? நிச்சயமாக இல்லை. மாறாக தமிழகத்துக்கும் தமிழர்களுக்கும் துரோகம் இழைத்துக் கொண்டிருக்கிறது. இலங்கை தமிழர் பிரச்சனையில் மத்திய காங்கிரஸ் அரசு என்ன செய்தது? இலங்கை அரசுக்குத் தேவையான ராணுவப் பயிற்சி ஆயுதங்கள் ஆகியவற்றை அளித்தது. அங்குள்ள தமிழர்கள் அழியக் காரணமாக இருந்தது. இதற்கு உறுதுணையாக இருந்தது தி.மு.க. என்பதை மறந்துவிடாதீர்கள். இப்படிப்பட்ட தமிழின விரோத காங்கிரசுக்கும் தி.மு.க-விற்கும் இந்தத் தேர்தலில் நீங்கள் தக்கப் பாடம் புகட்ட வேண்டும். செய்வீர்களா? நீங்கள் செய்வீர்களா?

இலங்கை அரசால் தமிழக மீனவர்கள் தொடர்ந்து சிறை பிடிக்கப்படுவதை தடுக்க நடவடிக்கை எடுக்காத அரசு தற்போதைய மத்திய காங்கிரஸ் கூட்டணி அரசு. தமிழக மீனவர்களை "போராசை பிடித்தவர்கள்" என்று சொன்னவர் தி.மு.க. தலைவர் கருணாநிதி. இப்படிப்பட்ட மீனவ விரோத காங்கிரசுக்கும் தி.மு.க-விற்கும் வருகின்ற தேர்தலில் நீங்கள் மறக்க முடியாத பாடத்தைப் புகட்ட வேண்டும்.

பாதுகாப்புத் துறையையே, பாதுகாப்பற்றது ஆக்கிவிட்ட அரசு மத்திய காங்கிரஸ் கூட்டணி அரசு. வெளிநாட்டு அச்சுறுத்தல்களில் இருந்து இந்திய நாட்டைப் பாதுகாக்க நமது பாதுகாப்புத் துறை வலுவானதாக இருக்க வேண்டும். ஆனால், நமது ராணுவத்தை, தரைப் படையினை, கடற் படையினை, விமானப் படையினை நவீனமாக்கவும், வலுப்படுத்தவும் தேவையான நடவடிக்கைகளை காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு எடுக்கவில்லை என்பது தான் கசப்பான உண்மை.

மத்திய காங்கிரஸ் அரசின் அலட்சியத்தால் இன்று, கடற் படையிடம் போதுமான கப்பல்களோ அல்லது நீர்மூழ்கி கப்பல்களோ தற்போது இல்லை. இதே போன்று விமானப் படையிடமும் போதுமான நவீன விமானங்கள் இல்லை. ராணுவத்திடமும் நவீன ஆயுதங்கள் மற்றும் முக்கிய உபகரணங்கள் இல்லாத சூழ்நிலை நிலவுகிறது. கடந்த பத்து ஆண்டுகளை மத்திய காங்கிரஸ் கூட்டணி அரசு வீணடித்துவிட்டது. முப்படையில் பணிபுரிபவர்களின் தேவைகளை நிறைவேற்றுவதிலும் மத்திய காங்கிரஸ் கூட்டணி அரசு போதிய அக்கறை செலுத்தவில்லை. நாட்டைப் பாதுகாக்கும் முப்படைகளையே அலட்சியப்படுத்தும் மத்திய காங்கிரஸ் ஆட்சிக்கு நீங்கள் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

தமிழகம் இந்தியாவிலேயே முதன்மை மாநிலமாக விளங்க வேண்டும் என்றால்; தமிழகத்திற்கு தேவையானவற்றை பெற வேண்டும் என்றால்; அதற்கு ஒரே வழி மத்தியில் ஆட்சி மாற்றம். அந்த ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தக் கூடிய வலிமையை அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு நீங்கள் வழங்க வேண்டும்" என்றார் முதல்வர் ஜெயலலிதா.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x