

பழங்காலத்தில் சமூகத்தில் வழக்கறிஞர்களுக்கு மிகப்பெரிய மரியாதை இருந்தது. அந்த நாள்கள் மீண்டும் வருமா என்பது மில்லியன் டாலர் கேள்வியாக உள்ளது என உயர் நீதிமன்ற நீதிபதி வேதனை தெரிவித் தார்.
திருச்சி சட்டக் கல்லூரி மாணவிகள் விடுதியில் தங்கிப் படிக்கும் மாணவிகள் செல்போன் வைத்துள்ளார்களா என விடுதி வார்டனும், உதவிப் பேராசிரியரு மான கிருஷ்ணலீலா கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் சோதனை நடத்தி னார். இந்த சம்பவத்தை கண்டித்து சட்டக் கல்லூரி மாணவர்கள் போராட்டம் நடத்தினர்.
இப்போராட்டத்தை முன்னின்று நடத்தியதாக மாணவர்கள் என்.சிவகுரு, பி.சரவணபவா, எம்.பழனிச்சாமி, எஸ்.திருமணி ஆகியோர் மீது குற்றம் சாட்டப்பட்டது. இதையடுத்து 4 பேரையும் சட்டக் கல்லூரியில் இருந்து நீக்கி கல்லூரி முதல்வர் 6.3.2015-ல் உத்தரவிட்டார். இந்த உத்தரவை ரத்து செய்து தங்களை மீண்டும் கல்லூரியில் சேர்க்க உத்தரவிடக்கோரி நான்கு மாணவர்களும் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்தனர்.
இந்த மனு நீதிபதி எஸ்.வைத்தியநாதன் முன்பு விசா ரணைக்கு வந்தது. அப்போது திருச்சி சட்டக் கல்லூரி முதல்வர் தாக்கல் செய்த பதில் மனுவில், ‘பெண்கள் விடுதி வார்டன் செல்போன் எண்ணுக்கு மனுதாரர் கள் தொடர்ந்து ஆபாச எஸ்எம்எஸ் அனுப்பியுள்ளனர். இது தொடர்பாக வார்டன் புகாரின் பேரில் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீஸார் மாணவர்கள் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர். மேலும் விடுதி மாணவிகளுக்கு மனுதாரர்கள் செல்போன் வாங்கி கொடுத்துள்ளனர் எனக் கூறப்பட்டிருந்தது.
இதையடுத்து நீதிபதி பிறப்பித்த உத்தரவு: பழங்காலத்தில் சமூகத்தில் வழக்கறிஞர்களுக்கு மிகப்பெரிய மரியாதை இருந்தது. ஒருமுறை சென்னையில் என் தந்தை டிராம் வண்டியில் பயணம் செய்தபோது, அதே ரயிலில் வயதானவர் ஒருவர் இருக்கையில் அமர்ந்தும், இளைஞர் ஒருவர் நின்று கொண்டும் பயணம் செய்துள்ளனர். நின்று கொண்டு பயணம் செய்த இளைஞர் வழக் கறிஞர் என்பதை தெரிந்துகொண்ட அந்த முதியவர், இருக்கையில் இருந்து எழுந்து அந்த இளைஞரை அமர வைத்துள்ளார். இதை என் தந்தை தெரிவித்தார். அந்த காலத்தில் வழக்கறிஞர்களுக்கு அவ்வளவு மரியாதை இருந்தது. அந்த நாள்கள் மீண்டும் வருமா? என்பது மில்லியன் டாலர் கேள்வியாக உள்ளது.
இவ்வாறான நிலையில், வருங்காலத்தில் சிறந்த வழக்கறி ஞர்களாக வர வேண்டிய மனுதாரர்கள், கடவுள்போல் கருத வேண்டிய பெண் பேராசிரியருக்கு ஆபாச எஸ்எம்எஸ் அனுப்பியது வருத்தப்பட வேண்டியது ஆகும். இந்து மத நூல்கள், குரான், பைபிள் போன்றவற்றில் பெண்களை உயர்வாகக் குறிப்பிட்டுள்ளனர்.
இதுபோன்ற செயல்கள் மாணவர்களின் பெற்றோரை மட்டு மின்றி, ஆசிரியர்கள், சட்டக்கல்வி பயில்வோருக்கும் அவமானத்தை ஏற்படுத்தும் வகையில் உள்ளது.
பாதுகாப்பற்ற சூழல்
சில வழக்கறிஞர்களின் நட வடிக்கை காரணமாக பொதுமக்கள் மத்தியில் வழக்கறிஞர் தொழில் கடுமையான விமர்சனத்துக்கு உள்ளாகி வருகிறது. மனுதாரர்கள் போன்றவர்களை வழக்கறிஞர்கள் தொழில் செய்ய அனுமதித்தால் பெண் வழக்கறிஞர்களுக்கு பாதுகாப்பற்ற சூழல் ஏற்படும். இவர்களை தொடர்ந்து வழக்கறிஞர் தொழில் செய்ய அனுமதித்தால் வழக்கறிஞர் தொழில் அழியும் நிலை ஏற்படும். தற்போது, நாட்டில் பல்வேறு அதிசயங்கள் நடைபெற்று வருகின்றன. இவர்களைப் போன்றவர்கள் ஒரு காலத்தில் நீதிபதியாகவும் வரலாம். அப்படியொரு நிலை ஏற்பட்டால் நீதித்துறை மீது மக்கள் நம்பிக்கையை இழந்துவிடுவார்கள்.
ஒருவரின் நடத்தை, செயல்பாடு, அறிவு, கீழ்படிதல், பெற்றோருக்கு செய்ய வேண்டிய கடமை, ஏழைகளுக்கு உதவி செய்தல் ஆகியவற்றை நம்மை பார்த்து மற்றவர்கள் வியப்படையும் வகையில் இருக்க வேண்டும். இதையே திருவள்ளுவர் தனது குறளில், ‘மகன் தந்தைக்கு ஆற்றும்உதவி இவன்தந்தை என்னோற்றான் கொல்எனும் சொல்’ என்று கூறியுள்ளார்.
கல்லூரி நிர்வாகம் விரிவான விசாரணை நடத்திய பிறகே மாணவர்கள் மீது நடவடிக்கை எடுத்துள்ளது. எனவே, இதில் நீதிமன்றம் தலையிட முடியாது. மனுதாரர்களுக்கு தலா ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்க இது தகுதியான வழக்கு. இருப்பினும் மாணவர்களின் பெற்றோர் நிலையை கருதி, அபராதம் விதிக்காமல் மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்கிறது என நீதிபதி கூறியுள்ளார்.