

ஆண்டுதோறும் மே 31-ம் தேதி 'உலக புகையிலை எதிர்ப்பு தினமாக' கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு இத்தினத்தின் கருத்தியலாக ‘புகையிலைக்கான வரியை உயர்த்துங்கள்' என்பது அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது, புகையிலைக்கு வரியை உயர்த்தும் போது, புகையிலைப் பொருட்களின் விலை உயரும். அந்த விலை உயர் வால் புகையிலைப் பொருட்களின் பயன்பாடு மக்களிடையே குறையும் என்பதுதான் இதன் பொருள்.
ஆனால், ‘புகையிலைக்கான வரியை உயர்த்துவதைவிட புகை யிலைக்கு எதிரான விழிப்புணர்வே முக்கியம்' என்கிறார் ஆவடியைச் சேர்ந்த தேவேந்திரன். 5 ஆண்டுகளுக்கு முன்பு வரை புகைப்பழக்கத்துக்கு அடிமையான இவர், இன்று புகையிலைக்கு எதிராக விழிப்புணர்வு ஏற்படுத்துபவர்.
"10 வயதில் இருந்து புகைப் பிடிக்கிறேன். அன்றைக்கு புகைப் பழக்கத்துக்கு எதிரான விழிப்புணர்வு இல்லை. அதனால் புகைப்பழக்க பாதிப்பு எனக்குத் தெரியவில்லை. என் 50 ஆண்டு கால புகைப் பழக்கத் தால் என் நுரையீரல் கெட்டுவிட்டது. கடந்த 5 வருடங்களாக, ஆக்சிஜன் இயந்திரத்தின் உதவியால்தான் வாழ்கிறேன். ஒரு நாளைக்கு 8 மணி நேரமாவது ஆக்சிஜன் இயந்திரத்தின் உதவியால் சுவாசித்தால்தான் அன்று என்னால் செயல்பட முடியும். இல்லையெனில், மூச்சுத் திணறல் ஏற்படும். நம் குடும்பத்தை கஷ்டப்படுத்துகிறோமே என்கிற எண்ணம் இன்னமும் நமக்கு வலி ஏற்படுத்தும். இதற்கு வைத்தியமே இல்லை. அமெரிக்காவில் நுரையீரல் மாற்று சிகிச்சையால் பலர் நல்லபடியாக இருக்கிறார்கள். ஆனால் இங்கு அத்தகைய சிகிச்சை எல்லாம் கைக்கு எட்டாத உயரத்தில் இருக்கிறது. மேலும் நுரையீரல் தருவதற்கு 'டோனர்கள்' தேவை. இதெல்லாம் முடியாது என்பதால் ஆக்சிஜன் இயந்திரம் மூலம் மட்டுமே உயிர்வாழ முடியும் என்கிற நிலை.
எங்கள் பகுதியில் உள்ள சில நல்ல உள்ளங்களால் ஆக்சிஜன் இயந்திரத்தை வீட்டில் வாங்கி வைத்துள்ளேன். அதனுடைய விலை ரூ.85,000. என்னைப் போல நுரையீரல் பாதிக்கப்பட்ட எத்தனையோ ஏழைகள் இருக்கிறார்கள். அவர் களால் இந்தக் கருவியை விலை கொடுத்து வாங்க முடியுமா? அல்லது, ஆக்சிஜன் சிலிண்டர் வாங்கி வைத்துக் கொள்ள வேண்டும். அது 2 நாளில் தீர்ந்து விடும். ஒரு சிலிண்டரின் விலை ரூ.2,500. எத்தனை ஏழைகளால் அந்த சிலிண்டரை வாங்க முடியும்? இதையெல்லாம் கருத்தில் கொண்டுதான், இன்று யாரேனும் சிகரெட் புகைப்பதைப் பார்த்தால், 5 நிமிடம் ஒதுக்கி அவர்களிடம் என் நிலைமையைச் சொல்லி விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறேன்.
இந்நிலையில், ‘புகையிலைக்கு வரி உயர்த்துங்கள். அதனால் புகையிலைப் பயன்பாடு குறையும்' என்று உலகம் முழுக்க குரல் கொடுக்கிறார்கள். என் னுடைய அனுபவத்தில் சொல்கிறேன், நீங்கள் எவ்வளவுதான் புகையிலைக்கு வரி உயர்த்தினாலும், புகையிலைப் பொருட்களின்விலையை உயர்த் தினாலும், புகைப்பழக்கத்திற்கு அடிமையானவர்கள் எப்பாடுபட்டே னும், அவற்றை வாங்கி உபயோகிக் கத்தான் செய்வார்கள்.
எனவே, வரி உயர்த்துவதை விடுத்து, புகையிலையால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துங் கள். அதற்கு செலவழிப்பது நல்ல பயனைத் தரும். தயவுசெய்து இன்றைய இளைஞர்களை என்னு டைய நிலைமைக்கு ஆளாக்கி விடாதீர்கள்" என்கிறார்.