

ஹெல்மெட் தேவை அதிகமாகியுள்ளதைத் தொடர்ந்து தமிழகத்தில் ஹெல்மெட் திருட்டும் அதிகரித்துள்ளது.
இரு சக்கர வாகனத்தில் பயணம் செய்பவர்கள் ஹெல்மெட் அணிவது கட்டாயமாக்கப்பட்டதை தொடர்ந்து ஹெல்மெட் விற்பனை பல மடங்கு அதிகரித்துள்ளது. அதே நேரத்தில் ஹெல்மெட் திருட்டும் அதிகரித்துள்ளது. பொது இடங்கள், அலுவலகத்துக்கு இரு சக்கர வாகனத்தில் வரும் பலர் ஹெல்மெட் அணிந்து செல்கின்றனர். செல்ல வேண்டிய இடத்துக்கு வந்த பின்னர் சிலர் மட்டுமே ஹெல்மெட்டை கையில் எடுத்துச் செல்கின்றனர். சிலர் வண்டியுடன் சேர்த்து பூட்டு போட்டு வைக்கின்றனர். ஆனால் பலர் வண்டியின் மீது சாதாரணமாக ஹெல்மெட்டை வைத்து செல்கின்றனர். அப்படி வைக்கப்படும் ஹெல்மெட்டுகள் திருட்டுப் போவது அதிகரித்துள்ளது.
சென்னை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்திலேயே போலீஸ்காரர்களின் ஹெல்மெட்டுகள் திருடப்பட்டுள்ளன. ஹெல்மெட் திருட்டு குறித்து பொதுவாக யாரும் போலீஸில் வந்து புகார் கொடுப்பதில்லை. புகார் கொடுத்தாலும் அதை கண்டுபிடிப்பது கடினம். இதனால் ஹெல்மெட்டை பாதுகாப்பாக வைப்பது நமது கையில்தான் உள்ளது.
ஹெல்மெட்டை வாகனத்துடன் வைத்து பூட்டுவதற்கு இரண்டு விதமான பூட்டுகள் உள்ளன. இந்த பூட்டுகள் ரூ.75-ல் இருந்தே கிடைக்கின்றன. அவற்றை வாங்கி பயன்படுத்தலாம். பூட்டு இல்லாதவர்கள் ஹெல்மெட்டை கையில் எடுத்துச்செல்ல தயக்கம் காட்டக்கூடாது.